ஒ
ற்றை வேட்டியையும், சிட்டுத்துண்டையும் செல்லம் சோப்பில் துவைத்து, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, வேட்டியைத் தலைக்கு மேல் உயர்த்தி பட்டம் பிடித்தபடி திருநெல்வேலிக்காரர்களின் வாழ்க்கையை அவர்களின் அசலான மொழியோடு ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் அண்ணாச்சி நெல்லை கண்ணன். குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் ஓங்கி வளர்ந்த மருத மரங்கள், நாவல் மரங்கள், பச்சைபசேலென வயல்வெளிகள், காவடி மண்டபம், மின்னடிப் படித்துறை, வட்டப் பாறையில் டைவ் அடித்து குதித்து விளையாடும் இளவட்டங்கள், வருடந்தோறும் ஆற்றில் மூழ்கும் முருகன், நொண்டிப்பாலம்; திருநெல்வேலிக்காரர்களையும் குறுக்குத்துறையையும் பிரிக்கவே முடியாது. குறுக்குத்துறையின் நீண்ட படித்துறையே ஒரு கண்கொள்ளாக்காட்சி. படித்துறை மண்டபத்தின் தூண்களில், யாரோ பயன்படுத்திய கோபால் பல்பொடியின் மீதம் பாக்கெட்டோடு இருக்கும். பல்பொடி மட்டுமா, லைஃப்பாய் சோப்பின் மீதமும்கூட. செல்லம் சோப்பின் கடைசி துண்டுகள் படித்துறைகளில் உறைந்து போயிருக்கும். கணவனின் சாரத்தை நெஞ்சளவு கட்டிக்கொண்டு குளிக்கும் பெண்கள். இந்த மனிதர்கள்தான் இந்த நூலின் கதாநாயகர்கள். கருமையின் வசீகரத்தை அண்ணாச்சி நெல்லை கண்ணனிடம் காணலாம்.
குறுக்குத்துறை ரகசியங்கள்
நெல்லை கண்ணன்
வேலுக்கண்ணன் பதிப்பகம்,
69, அம்மன் சந்நிதி தெரு,
திருநெல்வேலி - 627006
0462 2337734
விலை ரூ.50