இலக்கியம்

எளிய மக்களுக்கான மருத்துவம்

ரிஷி

டேவிட் வெர்னர் என்னும் பள்ளி ஆசிரியர் மெக்சிகோ மலைகளில் காணப்படும் உயிரினங்களை வரையும் நோக்கத்தில் அங்கு சென்றார். அப்படிச் சென்றபோது, அங்குள்ள மக்களுக்கு முறையான மருத்துவச் சேவை கிடைக்காதது, சிகிச்சை என்னும் பெயரில் அவர்கள் சுரண்டப்படுவது போன்ற சமூகப் பிரச்சினைகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

இதனால் அவர்களுக்குத் தேவையான ஆரம்ப நலத் தேவைகளையும் பொது நலத் தேவைகளையும் மக்கள் தாங்களாகவே பூர்த்திசெய்ய வேண்டும் என்னும் அடிப்படையில் உடல்நலப் பராமரிப்பு பற்றிய ஒரு நூலை அவர் வெளியிட்டார். ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த இந்நூல் பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுப் பெரும் வரவேற்றைப் பெற்றது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிப் பெரிய அளவிலான வாசகக் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

டேவிட் வெர்னரின் நூலைத் தமிழில் முதலில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. இப்போது வெளிவந்துள்ள இந்தப் புதிய விரிவான பதிப்பில் புதிய கருத்துகளும் தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் எளிமையாகவும், வரைபடங்களின் மூலம் விளக்கமாகவும் உருவாகியுள்ளதால் ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்குக் கூட ஆலோசனை பெற இயலாத இடங்களில் இது ஒரு மருத்துவரைப் போல் செயலாற்றும் வல்லமை கொண்டது. மொத்தம் 29 இயல்களில் மனிதர்களின் அடிப்படையான அனைத்து உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றியும் இந்நூல் விரிவாக விவாதித்து தேவையான ஆலோசனைகளைத் தருவதில் சிறந்து விளங்குகிறது.

சமூகம் குறித்த புரிதலுடன் மக்களுக்கு அவசியமான ஆரோக்கியம், மருத்துவ ஆலோசனை ஆகியவை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்னும் அக்கறையில் உருவாகியுள்ள இந்நூல் அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒன்று.

SCROLL FOR NEXT