நெஞ்சு வலியில் துடித்துக் கொண்டிருந்த நாகரத்தினத்தை மருத்துவரிடம் செல்ல அழைக்கிறார்கள். ‘‘தியாகராஜரின் கீர்த்தனைகளில் நிரம்பியிருக்கும் ராமன் தன்னுடைய உடலிலும் பரிபூரணமாக இருக்கிறார். அவர் இருக்கும் உடலில் துளையிடுவது பாபம்’’ என்று சொல்லிவிட்டுத் தரையில் பாயை விரித்து, அமைதியாகப் படுத்துக் கொள்கிறார். கடைசி நிமிடம் வரை நினைவுத் தப்பாமல், தியாகராஜரின் ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பிய நாகரத்தினத்துக்கு, விரும்பிய வண்ணமே மெதுவாக உயிர் பிரிகிறது. தியாகராஜரின் கடைசி மூச்சுக் காற்று விடைபெற்ற திருவையாறில், அவரின் சமாதிக்கு அருகிலேயே தன் உயிர் பிரிவதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு உலக வாழ்வில் இருந்து விடைபெற்றுக் கொள்கிறார். தியாகராஜர் சமாதி இருக்கும் பிருந்தாவனத்துக்கு அருகிலேயே நாகரத்தினத்தின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. திருவையாறின் பிருந்தாவனத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஒரே பெண் நாகரத்தினம்தான்.
ஒரு மகானின் சமாதிக்குள் ஒரு தேவதாசியின் சமாதி. லட்சோபலட்சம் தியாகராஜரின் பக்தர்களில் அவரின் சமாதியைப் பார்த்த வண்ணமே சமாதியடையும் வரம் பெற்றவர் பண்டிதை வித்யாசுந்தரி, பெங்களூரு நாகரத்தினம்மாதான்.
மைசூர், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேசுவரம் கோயிலின் தேவதாசியான புட்டலஷ்மியின் மகள்தான் நாகரத்தினம். அவர் தந்தை சுப்பண்ணா. தாயையும் மகளையும் ஆதரித்து வந்த சுப்பாராவ் என்பவரால், சொத்துகள் பிடுங்கப்பட்டு இருவரும் விரட்டப்பட்டனர். ஆதரவற்ற நிலையில் மைசூர் கிரிபட்ட திம்மய்யாவிடம் அடைக்கலம் அடைந்தனர். நாடகக் குழுவின் ஆசானாக இருந்த திம்மய்யா மைசூர் அரண்மனையின் செல்வாக்கான நபர்.
ஐந்து வயதிலேயே அவரிடம் சங்கீதமும் சமஸ்கிருதமும் கற்றார் நாகரத்தினம். ஆறு ஏழு வயதுக்குள் சமஸ்கிருதக் களஞ்சியமான அமரகோஷத்தின் மூன்று பாகங்களும் மனனமாகி இருந்தன. ஒன்பது வயதுக்குள் சங்கீதத்துடன் தெலுங்கும் ஆங்கிலமும் கற்றுக்கொண்ட சிறுமியின் வேகத்தைப் பார்த்தப் பொறாமைக்காரர்கள் திம்மய்யாவிடம், ‘குருவுக்கே சிஷ்யை போட்டியாகிவிடுவாள்’ என்று விஷத்தை விதைத்தார்கள். விளைவு புட்டலஷ்மியும் நாகரத்தினமும் திம்மய்யாவால் கைவிடப்பட்டார்கள். ‘மைசூரின் தெருக்களில் சாணி பொறுக்குவதுதான் நாகரத்தினத்தின் தலைவிதியாக இருக்கும்’ என்ற சாபத்துடன் அவர்களை விரட்டினார் திம்மய்யா.
‘‘மகாராஜாவே தன் மகளை அழைத்தாலே ஒழிய மைசூருக்குத் திரும்புவதில்லை’’ என்ற சபதத்துடன் வெளியேறிய புட்டலஷ்மி தீவிரமாகத் தன்னுடைய மகளுக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தார். கலைத் திறமையால் மட்டுமே மகள் வாழ்வில் புகழும் பெருமையும் பெற முடியும் என புட்டலஷ்மி தீர்மானமாக இருந்தார். தாயின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஆற்றல் நாகரத்தினத்துக்கும் இருந்ததால் சங்கீதத்துடன் நாட்டியம், வயலின், பன்மொழி சாகித்தியங்கள் கற்றுத் தேர்ந்தார். மகளின் புகழையும் பெருமையையும் பார்க்கத் தாய் உயிருடன் இல்லை. ஆனால், நாகரத்தினம் தாயின் சபதத்தை நிறைவேற்றியதுடன், தேவதாசிகளில் எவரும் அடையாத புகழையும் செல்வத்தையும் பெற்றார்.
நீதிபதி நரஹரி ராவும் நாகரத்தினமும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பு அலாதியானது. நாகரத்தினத்தின் கலைத் திறமையை பிரபலப்படுத்த நரஹரி மேற்கொண்ட முயற்சிகள் உண்மையான கலாரசிகரின் அக்கறையைவிட மேலானவை. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நீதிபதியாக இருக்கும் ஒருவர், அரசு லட்சிணைப் பொறிக்கப்பட்ட வண்டியில், அரசுப் பணியாளர் பின்தொடர, நெருக்கடியான தெருக்களின் வழியே தன் மனதைக் கவர்ந்த இசையரசியைப் பார்க்க வருகிறார் என்பது பெங்களூரு நகரத்தின் முக்கியப் பேச்சாக இருந்திருக்கும். நரஹரி ராவ் விமர்சனங்களைப் புறக்கணித்தார். விமர்சித்தவர்களே அங்கீகரிக்கும் மேலான அன்பு இருவரிடமும் இருந்தது.
நாகரத்தினத்தின் சங்கீதத்தை நெரிசலும் சந்தடியும் மிக்க வீட்டில் கேட்பது நரஹரிக்கு நிறைவைத் தரவில்லை. நகரத்தின் எல்லையைக் கடந்து மரங்களடர்ந்த சிறிய குன்றில் வீடொன்றைக் கட்டினார். அரசாங்க அதிகாரிகளுடன் மாலை நேரங்களில் நாகரத்தினத்தின் கச்சேரிகளைக் கேட்டு மகிழ்ந்தார். ரசனையான தன்னுடைய வாழ்வின் நிறைவை நாகரத்தினத்திடம் கண்டெடுத்த நரஹரி அவ்விடத்துக்கு ‘மவுண்ட் ஜாய்’ என்று பெயர் சூட்டினார்.
தனக்குப் பிறகு நாகரத்தினத்தின் கலைத் திறமை முடங்கிவிடக்கூடாது என்பதில் நரஹரி கவனமாக இருந்தார். தன்னுடைய இறுதிக் காலம் நெருங்குவதை அறிந்து, நாகரத்தினத்தைச் சென்னையில் குடியேறச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தார். நாகரத்தினம் மவுண்ட் ஜாயை விட்டுக் கிளம்பிய சில நாட்களில் நரஹரி இவ்வுலகை நீத்தார்.
சென்னையில் குடியேறிய நாகரத்தினம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையின் புகழ்மிகு முகங்களில் ஒருவராக மாறினார். வெங்கடகிரி, மைசூர் சமஸ்தானங்களின் ஆதர்ச இசைக் கலைஞராக இருந்த அவரிடம் செல்வம் குவியத் தொடங்கியது. வைர நகைகளாலும் பட்டாடைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு குதிரைப் பூட்டிய கோச்சு வண்டியில், பணிப்பெண்கள் பின்தொடர பண்டிதையாக வலம் வந்தார் நாகரத்தினம்.
தேவதாசி முறை இளம் பெண்களையும் குழந்தை களையும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது என்று டாக்டர் முத்துலட்சுமி போன்ற சீர்திருத்தவாதிகள் ‘தேவதாசி ஒழிப்புச் சட்ட மசோதா’வைக் கொண்டு வந்தார்கள். மசோதாவை நாகரத்தினம்மா கடுமையாக எதிர்த்தார். ‘சென்னை தேவதாசிகள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கி தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கு எதிராகப் போராடினார். அவரின் முயற்சி தோல்வியுற்றாலும் கடைசிவரை தன்னுடைய கொள்கைகளில் அவர் மாற்றம் கொள்ளவில்லை.
18-ம் நூற்றாண்டின் மராட்டிய அரசர் பிரதாப சிம்ஹனின் அரசவை நர்த்தகியான முத்துப் பழனியின் ‘ராதிகா சாந்த்வனமு’ என்ற நூலைப் பதிப்பித்ததற்கு எழுந்த எதிர்ப்பை நீதிமன்றம்வரை சென்று சந்தித்தவர்.
கர்னாடக இசையறிந்தவர்களுக்கு தியாகராஜரே இசைக் கடவுள். அவரின் கீர்த்தனைகள் வழியாகத்தான் அவர்களுக்கு ராம தரிசனம். நாகரத்தினத்துக்கும் தியாகராஜர்மேல் அளவு கடந்த பக்தி. ஒரு நாள் தியாகராஜர் தன்னை ஆசீர்வதிப்பதுபோல் கனவு கண்டார். அடுத்த நாள் அவரின் குரு பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் இருந்து கடிதம் வருகிறது. திருவையாறில் தியாகராஜரின் சமாதியுள்ள இடத்தின் நிலை பற்றி வருந்திவிட்டு, தியாகராஜரின் சமாதிக்கு மேற்கூரை அமைக்க நாகரத்தினத்தால்தான் முடியும் என்று எழுதியிருந்தார்.
கடிதத்தின் வாயிலாக தியாகராஜரே தனக்கிட்ட கட்டளை யாக நாகரத்தினம் ஏற்றுக்கொண்டார். வாழ்க்கைத் திசை மாறியது. அன்றுமுதல் அவரின் சிந்தனை, உழைப்பு, செல்வாக்கு, செல்வம் எல்லாமே தியாகராஜருக்குத்தான் என்றானது. குருவின் விருப்பத்துக்கு இணங்க திருவையாறு வந்த நாகரத்தினம் தியாகராஜரின் சமாதி முட்புதர்களும் மூங்கில் குருத்துக்களும் அடர்ந்து, பாம்புகளும் பூச்சிகளும் வாழுமிடமாக இருந்ததைப் பார்த்தார். நிமிடமும் தாமதிக்காமல் காரியத்தில் இறங்கினார். சமாதி இருந்த இடத்தைப் பணம் கொடுத்து வாங்கினார். சமாதியை உள்ளடக்கிக் கோயிலும், அதன்மேல் கோபுரமும் அமைத்தார். சமாதியைச் சுற்றி வேலி அமைத்தார். என்றென்றும் எல்லோரும் வழிபடுவதற்கு ஏற்ற நிலையில் தியாகராஜரின் சமாதியைப் பொலிவுள்ளதாக்கினார். தன்னிடம் இருந்த சொத்து, நகைகளை விற்று அவர் இப்பணியை மேற்கொண்டார். பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகவே நிறைய கச்சேரிகள் செய்தார்.
சென்னையில் செல்வத்தின் அதிபதியாக இருந்த நாகரத்தினம், திருவையாறில் வாடகை வீட்டில்கூட குடியிருந்தார். பொருளாதாரச் சுமையைவிட, தியாகராஜர் ஆராதனை விழா நடத்த ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள குழுவினர் போட்டுக் கொண்ட சண்டைகளைத் தீர்ப்பதற்குத்தான் நாகரத்தினத் தின் பெரும் உழைப்புத் தேவைப்பட்டது. நீதிமன்றம், வழக்குகள், பஞ்சாயத்துக்கள் என அவர் பெரும் சுழலில் சிக்கிக்கொண்டார்.
தியாகராஜருக்குத் தன் உடலைத் தேய்த்து திருக்கோயில் எழுப்பிய நாகரத்தினம், அத்திருக்கோயிலில் நடந்த ஆராதனையில் கச்சேரி செய்யப் போகும்போது, ‘‘பெண்கள் தியாகராஜரின் சமாதியில் பாடக் கூடாது’’ என்று பக்க வாத்தியம் செய்து கொண்டிருந்த கலைஞர்கள், எழுந்து சென்றுவிட்டார்கள். அதுவும் தேவதாசிப் பெண் பாடக்கூடாது என்பது கூடுதல் அழுத்தம்.
அடிபட்ட சிங்கத்தைப் போல் சிலிர்த்து எழுந்தார். உடனடி யாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான தேவதாசிப் பெண்களைத் திருவையாறுக்கு வர வைத்தார். தியாகராஜரின் சமாதிக்குப் பின்புறம் தற்காலிக மேடை அமைத்து முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே கொண்டு கச்சேரி நடத்தி, தியாகராஜருக்கு இசையைக் காணிக்கையாக்கினார்.
மொத்தம் 146 நகரங்களில் 1,235 கச்சேரிகள் செய்து, செல்வமும் புகழும் மோலோங்கிய நிலையில் அரசியைப் போல் வாழ்ந்த நாகரத்தினம், கடைசி காலத்தில் தன்னுடைய மகானின் முன் ஒரு துறவியைப் போல் வாழ்ந்தார். வெ. ஸ்ரீராமின் ‘தேவதாசியும் மகானும்’ என்ற நூல் நாகரத்தினம்மா வின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது.
தியாகராஜரின் சமாதியைப் பார்த்துக் கும்பிட்டபடி சிலையாக இருக்கும் நாகரத்தினத்துக்கு, எழுத்தாளர் மாலனின் வரிகள் மிகச் சிறந்த சமர்ப்பணமாகும்.
‘அரசர்கள் இவனைப் போற்றினார்கள்
வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள்
ஆனால் ஒரு தாசி அல்லவோ இவனுக்குக் கோயில் கட்டினாள்?’
(மே 19 - பெங்களூரு நாகரத்தினம்மாள் நினைவு நாள்)
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com