இலக்கியம்

சமூகநீதி மாதம்

என்.கெளரி

பனுவல் புத்தக விற்பனை நிலையம் அம்பேத்கரின் 124 ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் முழுக்க ‘சமூகநீதி நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சமூகநீதியை முன்னிறுத்தி கருத்தரங்கம், ஆவணப்படம் திரையிடல், புத்தக அறிமுகம், ஓவியக் கண்காட்சி, கலந்துரையாடல் போன்றவை இந்த மாதம் முழுக்க, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றன.

சாதி, வர்க்கம், பாலினப் பாகுபாடு காரணமாக தமிழ்நாடு சந்தித்துள்ள மாற்றங்களையும், அவற்றினூடாகத் தற்போது தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன.

“நகர வாழ்வில் சாதியின் தாக்கம் இல்லை என்ற கருத்தை வைத்திருந்தவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் சாதி குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறோம். சாதி என்பது எப்படி நவீன வடிவத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறது என்கின்ற விவாதத்தை தமிழகத்தில் “சமூகநீதி நிகழ்வுகள்” நிகழ்ச்சியால் ஆரம்பித்து வைத்திருக்கிறோம்”, என்கிறார் பனுவல் புத்தக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செந்தில்நாதன்.

‘சமூகநீதி நிகழ்வுகளில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வமுள்ள பல இளைஞர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நிறைவை அளித்தாகக் கூறும் செந்தில்நாதன், “சுமார் 1500 பேர் சமூகநீதி நிகழ்வுகளில் இதுவரைக் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து தரப்பிலுருந்தும் களப்பணியாளர்கள் பலரை இந்நிகழ்ச்சியின் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்தியிருந்ததை வாசகர்கள் பெரிதும் வரவேற்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த ‘சமூகநீதி நிகழ்வுகள்’ நிகழ்ச்சியை பல்வேறு பரிமாணங்களில் தொடர இருக்கிறோம்”, என்கிறார்.

சாதியம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது பனுவல் புத்தக நிலையம். “எங்கள் வாசகர்கள் வெறும் வாசகர்களாக மட்டுமில்லாமல் சமூக அக்கறை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பனுவல் செயல்பட்டு வருகிறது”, என்கிறார் செந்தில்நாதன்.

SCROLL FOR NEXT