எ
னக்குத் தெரிந்த எழுத்தாளர் ஒருவர் தனது முதல் நாவலை வெளியிட்டபோது அப்புத்தகத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பல்வேறு தயக்கங்களுடன்தான் அதை வெளியிட்டார் பதிப்பாளர். தயாரிப்புச் செலவும் அதிகம். ஓராண்டுக்குப் பிறகு, சில பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது அப்புத்தகம். இதைத் தொடர்ந்து அதன் விற்பனையும் அதிகரித்தது. அப்போதுதான் எழுத்தாளருக்கு ஒரு விஷயம் உறைத்தது. தனக்கு முறையாக 10% ராயல்டி அளித்திருந்தால், பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று வருந்தினார். எழுத்தாளர் – பதிப்பாளர் இருவருமே தங்களுக்குள் எழுத்துவடிவில் ஒப்பந்தம்செய்துகொள்ளவில்லை என்பதுதான் காரணம்.
இன்னொரு சம்பவம். எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையே வேறு ஒரு பிரச்சினை. மொழிபெயர்ப்பு உரிமத்தில் கிடைத்த தொகையில் பாதியைப் பதிப்பாளரே எடுத்துக்கொண்டார் என்பது குற்றச்சாட்டு. “எழுதியவருக்குத்தானே பெரும்பகுதி செல்ல வேண்டும், பதிப்பாளருக்கு எதற்கு இவ்வளவு?” என்று எழுத்தாளர் கேட்டார். தனது தரப்பு நியாயமாகப் பதிப்பாளர் முன்வைத்தது இதுதான்: மேலை நாடுகளில், புத்தகத்தை வெவ்வேறு மொழிகளில் வெளியிட உரிமம் விற்பதற்கு அதற்கான முகவர்கள் உண்டு. இங்கே அப்படியில்லை. பதிப்பாளர்களே அந்த வேலையைச் செய்ய வேண்டியுள்ளது!
ஒரு புத்தகத்தைப் பிற மொழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றால், பதிப்பாளர் உரிமத்துக்குத் தயாராக உள்ள புத்தகங்களின் பட்டியலை(‘ரைட்ஸ் கேட்டலாக்’) தயாரிக்க வேண்டும். அதில் புத்தகத்தில் உள்ள விஷயங்களின் சாரமும், மூல மொழியில் அதன் விற்பனை, பெற்ற விருதுகள், ஆசிரியர் குறிப்பு போன்ற விவரங்களும் இருக்க வேண்டும். பதிப்பாளர், தங்களது வலைதளத்தில் இதற்காக சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கி, செய்தியினை வெளிப்படுத்த வேண்டும். இவையெல்லாவற்றையும்விட முக்கியமானது தமிழில் எழுதப்பட்ட புத்தகம் ஆங்கிலத்தில் தரமாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
இந்தியாவில் பல மொழிகளில் உரிமம் விற்பதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், நேரடியான மொழிபெயர்ப்புக்கு சாத்தியங்கள் குறைவு. ஆங்கிலம்தான் பெரும்பான்மையான சமயங்களில் தொடர்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு, உலகில் பிறமொழிகளுக்குக் கொண்டுசெல்லவும் துணையாக உள்ளது.
விஷயம் எளிதானது: எழுத்தாளர், தன்மொழியில் படைப்பை உருவாக்குகிறார். எழுத்தாளரும் பதிப்பாளரும் இணைந்து இணக்கமாகச் செயற்படும்போது உலகின் பன்மொழிகளுக்கு அப்படைப்பு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் இருவருமே பணம் ஈட்டலாம். ஃபிராங்பர்ட், லண்டன் போன்ற புத்தகக் காட்சிகள் இதுபோன்று உரிமங்களைப் பரிவர்த்தனை நடத்துவதையே பிரதானமாகச் செய்கின்றன. இப்புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள பயணச்செலவு, தங்குவது, உணவு, கடை வாடகை என்று மொத்தமாகப் பார்த்தால் பெரும் தொகை செலவாகும். ‘காபெக்சில்’ போன்ற அமைப்புகள் மத்திய அரசாங்க உதவியுடன் உறுப்பினர்களுக்குப் பெருமளவில் கட்டணத்தில் சலுகை அளிக்கின்றன. இது தவிர, பதிப்பாளர்கள் குழுவாக, ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு மணி நேரம் என்று வகுத்துக்கொண்டு செலவைப் பிரித்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் நமது படைப்புகளை உலக அளவில் கொண்டுசெல்ல முடியும்.
அதற்கு முன்பாக, பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் தங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். குறிப்பாகப் பிறமொழி உரிமங்கள், மின்புத்தகங்கள் வெளியிடுவதில் உரிமை, ராயல்டி பங்கீடு ஆகியவை குறித்து எழுத்து மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது நல்லது!
- கோ. ஒளிவண்ணன், பதிப்பாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: olivannang@gmail.com