உலகத்தின் சிறந்த ஓவியர்களைப் பற்றிப் பேச்சு எழும்போதெல்லாம் ஒலிக்கும் ஒரு பெயர் ஃப்ரீடா காலோ.
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் 1907 ஜூலை 6-ம் தேதி பிறந்தவர் அவர். தனது வாழ்வு நவீன மெக்ஸிகோவுடன் ஒன்றுசேர்ந்து வளரவும் உயரவும் வேண்டும் என்ற விழைவால் மெக்சிகோ புரட்சி வெடித்தெழுந்த 1910-ல் தான் பிறந்ததாக அவர் உரிமை கோருவதாகவும் சொல்கிறார்கள். சமூகரீதியாகவும் ஒழுக்கரீதியாகவும் வலியுறுத்தப்பட்ட பழக்கவழக்கங்களைச் சிறு பருவத்திலேயே கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவர் ஃப்ரீடா. அந்த வயதிலேயே சுதந்திரமான மனப்போக்கும், கலகச் சிந்தனையும் குடிகொண்டிருந்த ஃப்ரீடாவைப் பின்னாளில் கம்யூனிசச் சித்தாந்தம், பெண்ணியச் சிந்தனைகள் ஆகியவை ஈர்த்துக்கொண்டது ஆச்சரியமல்ல.
ஐந்து வயதிலேயே போலியோவால் உருவான வாதை அவரை ஒன்பது மாதங்கள் துன்புறுத்தியது. 1925-ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று ஏற்பட்ட ஒரு விபத்து அவரது வாழ்வையே புரட்டிப்போட்டது. அந்தப் பேருந்து விபத்தில் ஒரு கம்பி அவரது வயிற்றிலிருந்து இடுப்பெலும்புவரை துளைத்துச்சென்றது. இதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகளும் மருந்துகளும் மரணத்தைவிடக் கொடியவையாக இருந்துள்ளன. மனதளவில் அதிலிருந்து மீண்டாலும் வலியும் வேதனையும் வாழ்வு முழுவதும் அவரைத் துண்டாடின. தாங்க இயலாத உடல் உபாதையும் மன வேதனையும் அவரை வாட்டி வதைத்தன.
தான் அனுபவித்த ரணங்களையும் வேதனைகளையும் ஓவியக் கலையாக மாற்றும் நுட்பம் மட்டும் அவருக்கு வாய்க்காமல் இருந்திருந்தால் சரித்திரத்தில் கண்டுகொள்ளப்படாமல் போன சாமனியப் பெண்ணாக அவர் காற்றில் கலந்திருப்பார். ஆனால் அவரிடம் வெளிப்பட்ட நுட்பமான ஓவியத் திறன் அவரைப் பிறரிடமிருந்து பிரித்து, தனித்து அடையாளப்படுத்தியது. பேருந்தின் விபத்திலிருந்து மீண்ட காலங்களில் அவர் தனது சுய உருவ ஓவியத்தை வரைந்து முடித்தார். பெரும்பாலான ஓவியங்களைப் படுக்கையில் படுத்தவாறே அவர் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது தூரிகையில் துளிர்த்த ஓவியங்கள் உலகம் முழுவதும் சென்று ஃப்ரீடாவின் கதையைச் சொல்கின்றன.
சிந்தையைத் துளைத்த எண்ணங்களின் துயரங்களையும் துன்பங்களையும் வண்ணங்களாகவும் கோடுகளாகவும் உருவங்களாகவும் மாற்றி அவர் வரைந்த ஓவியங்கள் அவருக்கும் மரணத்துக்குமான இடைவெளியை அதிகரித்தன. அவரது வாழ்வில் தொடர்ச்சியான துன்பங்கள் அவரது வாயிலை வந்தடைந்தபோதும் துணிச்சலுடனும் அதைத் தாங்கும் மன உறுதியுடனும் அவற்றை எதிர்கொண்டு போராடியவரின் உள்ளம் காதலாலும் துவண்டது. கம்யூனிச ஓவியரான டிகோ ரிவேராவைக் கண்டு காதல் கொண்டு வீட்டாரை எதிர்த்து 1929-ல் அவரை மணமுடித்துக்கொண்டார். டிகோ ரிவேராவைத் தனது பள்ளிக் காலத்தில் 1922-ல் முதலில் ஃப்ரீடா சந்தித்துள்ளார். அப்போதே தனது உள்ளத்தில் ரிவேராவுக்கு இடமளித்துவிட்ட ஃப்ரீடா ரிவேராவின் குழந்தையைத் தான் எதிர்காலத்தில் சுமப்பேன் என்று தன் தோழியிடம் கூறியுள்ளார். ஆனால் பேருந்து விபத்தால் அது நிறைவேறவே இல்லை. அவரது உடல்நிலைப் பாதிப்பின் காரணமாக அவரால் ஒரு சிசுவைத் தரித்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இவை எல்லாமும் சேர்ந்துதான் அவரைத் துன்பச் சுழலில் சிக்க வைத்தன.
வாழ்வின் பொருளையும் உண்மையையும் தேடிக் கண்டடையும் பயணத்தின் பாதையாக ஓவியத்தைக் கருதினார் ஃப்ரீடா என்பதன் வெளிப்பாடாக அவரது ஓவியங்கள் அமைந்துள்ளன. சர்ரியலிச இயக்கத்தைப் பெருவாரியானவர்களிடம் கொண்டுசேர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்ட பிரெஞ்சுக் கவிஞரும் விமர்சகருமான ஆந்த்ரே பிரெடன் 1938-ல் மெக்ஸிகோ வந்தபோது இவரது ஓவியத் திறனைக் கண்டுணர்ந்துள்ளார். ஆனாலும் ஃப்ரீடா தன்னை சர்ரியலிச ஓவியராக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ‘‘அவர்கள் என்னை சர்ரியலிஸ ஓவியர் என்கிறார்கள் ஆனால் நான் கனவுகளை வரையவில்லை யதார்த்தங்களை மட்டுமே வரைகிறேன்’’ என அவர் தெரிவிக்கிறார்.
துயரங்களையும் துன்பங்களையும் வண்ணங்களாகவும் மாற்றி அவர் வரைந்த ஓவியங்கள் அவருக்கும் மரணத்துக்குமான இடைவெளியை அதிகரித்தன.