இலக்கியம்

தலைவாசலைப் புனரமைப்பவன்

ஜீவ கரிகாலன்

வீன ஓவியச் சூழலில் தனக்கென ஒரு இடம்பிடித்துள்ள நரேந்திரபாபுவின் ஓவியங்கள் சில ஆண்டுகளாக வெவ்வேறு தலைப்புகளில் தனிநபர் கண்காட்சியாகவோ நண்பர்களுடன் சேர்ந்தோ காட்சிப்படுத்தப்பட்டுவருகின்றன. தற்போது வரும் ஞாயிறன்று தொடங்கப்படும் நரேந்திரபாபுவின் அடுத்த ஓவியக் கண்காட்சி வரும் ஜனவரி 7 ஞாயிறு மாலை 4 மணி முதல் ஜனவரி 31 வரை பார்வைக்கு வைக்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்த நரேந்திரபாபு, சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றவர். நெசவாளர்கள் சேவை மையத்தில் பணிபுரிந்துவருகிறார். அவரது ஓவியங்கள் பாரம்பரியமிக்க இந்திய ஓவியங்களோடு தொடர்புடையவை. அதன் நவீனப் பரிமாணம் என்றும் சொல்லலாம்.

நரேந்திரபாபுவின் ஓவியங்கள் பெரும்பாலும் கோடுகளாலும் வண்ணங்களாலும் ஈர்க்கக்கூடியவை, கதை சொல்பவை, பெரிய காட்சிகளை, பதிவுகளை ஒரே கேன்வாஸில் பதிவுசெய்பவை.

பெரும்பாலும் அதில் பிரகாசமான வண்ணங்களையே பயன்படுத்துகிறார். பெரிய பெரிய கேன்வாஸ் ஓவியங்களுடன், சிறு சிறு காகிதங்கள், டெரகோட்டாக்கள் என சிறிய ஓவியங்களும் இவரது படைப்புகளில் அடக்கம். தொடர்ச்சியாக ஓவியக் கண்காட்சி செல்லும் பார்வையாளர்கள், நரேந்திரபாபுவின் ஓவியங்களை இனம்கண்டு கொள்வார்கள். அவரது தனித்தன்மை மிக்க படைப்புகளுக்கான அங்கீகாரம் அது. கனவுகளை நினைவுகூர்வது போல் சுவாரஸ்யமானதாகவும், ஈடுபாட்டை உருவாக்குவதாகவும் அவரது ஓவியங்கள் இயல்பாக அமைந்துவிட்டாலும், புரிதலில் கைகூடல்கள், கூடாமைகள் சேர்ந்தே இருக்கின்றன. கனவென்றால் அப்படித்தானே?

அவரது வாழ்நாளில் பெரும்பகுதியை வரைவதிலேயே செலவழிக்கிறார். அலுவலகம், வீட்டில் மட்டுமல்லாது பயணங்களிலும் வரைந்துகொண்டே செல்லும் பழக்கம் உள்ளவர். அப்படியான பயணத்தின்போது சகமனிதர்கள் இடித்துவிட்டாலோ, பயணம்செய்யும் வாகனத்தின் குலுங்கல்களின்போதோ இயல்பாக வரும் கோடுகளின் பிசிறுகளையும் முக்கியமானவையாகக் கருதுகிறார். எளிய மனிதர்களிடமிருந்து கிடைக்கும் தாக்கங்களை உள்வாங்கி, தனது படைப்புகளில் பதிவுசெய்கிறார். பெரிய அளவில் நவீன ஓவியங்களுடன் பரிச்சயம் இல்லாதவர்களையும் வசீகரிக்கும் தன்மை கொண்டவை இவரது ஓவியங்கள். கனவின் கூறுகளைப் போல நேர்க்கோட்டில் சொல்லப்படாத ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதையைக் கூறும். கனவுகளைப் போலவே இவர் சிருஷ்டிக்கும் உலகம் வேறு முகம் கொண்டு மாறிக்கொண்டே இருக்கும். ஃபேன்டஸி தன்மை மிக்க, கனவுகளைப் போன்ற, விதானத்து சித்திரங்களைப் போன்ற என்றெல்லாம் இவரது படைப்புகள் பற்றி பலதரப்பட்ட பார்வைகள் உண்டு.

சமீபத்தில் காரைக்குடி உள்ளிட்ட செட்டிநாடு பகுதிகளுக்குச் சென்றுவந்த பயணத்தின் தாக்கங்களிலிருந்து அவர் உருவாக்கிய ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பன்னாட்டுப் பொருட்களையும் தம் மக்களது தேவைக்கேற்பச் சீரமைத்து, புனரமைத்துத் தக்கவாறு கொண்டுசேர்த்த நகரத்தார்களின் பிரம்மாண்ட கட்டிடங்களின் தலைவாசல்கள்தான் இந்தக் கண்காட்சியின் அடிப்படை. இந்த ஓவியக் கண்காட்சி தக்ஷிண சித்ராவில் நடைபெறுவது மேலும் சிறப்பான ஒன்று. அங்கிருக்கும் செட்டிநாட்டு இல்லம் ஒன்றின் வாசலை உற்றுநோக்கிவிட்டு, இவரது ஓவியங்களைப் பார்த்தால் இந்த ஓவியங்களின் பரிணாமத்தைப் பார்வையாளர்கள் முழுமையாக உணர முடியும். தவற விடாதீர்கள்!

- ஜீவ கரிகாலன், எழுத்தாளர், பதிப்பாளர்.

தொடர்புக்கு: kaalidossan@gmail.com

ஓவியக் கண்காட்சி : செட்டிநாடு தலைவாசல்

காதம்பரி கேலரி, தக்ஷிண சித்ரா, முட்டுக்காடு, கிழக்குக் கடற்கரைச் சாலை,

சென்னை. 044-27472603 நாள்: 07-01-2018 முதல் 31-01-2018

SCROLL FOR NEXT