இலக்கியம்

உருவெடுக்கும் புதிய கலாச்சாரம்: விடிய விடிய நடந்த புத்தகக் கொண்டாட்டம்!

செய்திப்பிரிவு

இந்த ஆண்டில் புதிய உத்வேகம் தொட்டது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடக்கிவைத்த ‘புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்’ இயக்கம். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய நடந்த ‘புத்தக இரவு’ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாசகர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டு, எல்லை கடந்த உற்சாகம் அளித்தது.

இந்த வருஷக் கொண்டாட்டத்தின் எல்லை பெரிய அளவில் விஸ்தரித்தது ‘பாரதி புத்தகாலயம்’. மாநிலம் முழுக்க 100 இடங்களில் புத்தக இரவுக்குத் திட்டமிட்டதோடு, சென்னையில் வீதியிலேயே மேடை அமைத்து நிகழ்ச்சியை நடத்த ஒருங்கிணைத்திருந்தார் மேலாளர் நாகராஜன். இதுவரை உள் அரங்கக் கூட்டங்களாகவே நடைபெற்றுவந்த புத்தக நிகழ்ச்சிகளை வீதிக்குக் கொண்டுவந்தது ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியதுபோல இருந்தது. புத்தக விவாதங்களை மேலும் ஜனநாயகப்படுத்துவது போன்றும் இருந்தது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கொண்டாட்டத்தைத் தொடக்கிவைத்தார்.

எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ஈரோடு தமிழன்பன், வீரபாண்டியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாகித்ய விருது பெற்ற யூமா வாசுகி பாராட்டப்பட்டார். கவிஞர் இரா.தெ.முத்து ஒருங்கிணைத்தார். இறுதியில் தனக்கே உரிய பாணியில் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தபோது சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே கடையோரங்களில் ஒதுங்கி அவர் பேச்சில் கரைந்தனர். ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. வள்ளுவரில் தொடங்கி மார்க்ஸிடம் முடித்த பாரதி கிருஷ்ணகுமார் வெளுத்துவிட்டார்!

தொடர் நூல் வெளியீடுகளை நடத்திக்கொண்டிருக்கும் ‘உயிர்மை பதிப்பகம்’, சிவபாலன் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியோடு புத்தாண்டு கொண்டாட்டத்தை இணைந்து நடத்தியது. இயக்குநர் கோபி நயினார், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மு.குணசேகரன், மா.திருநாவுக்கரசு, கவிதா முரளிதரன், தமிழ்மகன், கோலப்பன், அதிஷா ஆகியோருடன் கைகோத்து நின்றார் மனுஷ்யபுத்திரன்.

குடும்ப நிகழ்ச்சிபோல ஏற்பாடு செய்திருந்தது ‘டிஸ்கவரி புக் பேலஸ்’. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, ராஜா சந்திரசேகர், ஓவியர்கள் மருது, ஹாசிப்கான், இயக்குநர்கள் பிருந்தாசாரதி, பத்ரி உள்ளிட்டோர் பங்கேற்ற இங்கேயும் சிறப்புப் பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார்தான். உரைகள் முடிந்து வாசகர்களுடனான கலந்துரையாடலாக மாறிய நிகழ்ச்சி நள்ளிரவைக் கடந்தும் நீடித்தது. கணவன் – மனைவி, குழந்தைகள் என்று குடும்பங்களாக வந்திருந்தவர்கள் அதிகம். காதலர்களுக்கும் குறைவில்லை.

புத்தாண்டு பிறந்ததும் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியை ஏற்றி ஒரே குரலில் புத்தாண்டு முழக்கமிட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டபோது அந்தக் கட்டிடம் அமைந்திருந்த வீதியே அதிர்ந்தது. பதிப்பாளர் வேடியப்பன் நிகழ்ச்சிகளை நேரலையாக இணையத்தில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருந்தார். மூன்று மணிக்குக்கூட அசராமல் இலக்கிய விவாதம் நடத்திக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தால் இனி வாரக் கணக்கில் கூட்டத்துக்குத் திட்டமிட வேண்டும் என்பதுபோல இருந்தது!

வாசகர்களை ஒரு முழு நாள் கட்டிப்போட்டுவிட்டார்கள் ‘பியூர் சினிமா புத்தக அங்காடி’யில்! முழுக்க சினிமா கனவுள்ள இளைஞர் கூட்டத்தை இலக்காக்கி நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார் பதிப்பாளர் அருண். காலையில் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்வர்ணவேல், இயக்குநர் அம்ஷன்குமார், அடுத்து பத்திரிகையாளர் சமஸ், தொடர்ந்து ‘தீரன்’ ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், இயக்குநர் சுரேஷ் சங்கையா என்று விரிந்த நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மைக்கைப் பிடித்தார் இயக்குநர் மிஷ்கின். பிசாசுக்குக் கட்டுண்டதுபோல ஆகிவிட்டது கூட்டம். ஒரு மந்திரவாதி மாதிரி பேசிய மிஷ்கின், புத்தாண்டு இரவை ஒரு மறக்க முடியாத இரவாக்கிவிட்டார்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), “எங்களிடம் உறுப்பினராக உள்ள எல்லாப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் டிசம்பர் 31 காலை 10 மணி முதல் ஜனவரி 1 இரவு 10 மணி வரை அனைத்துப் புத்தகங்களையும் குறைந்தது 10% தள்ளுபடி விலையில் அளிப்பார்கள்” என்று அறிவித்திருந்தன் விளைவாக தமிழ்நாடு முழுக்க பெரும்பான்மை புத்தகக் கடைகளில் 10% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்பட்டன. சில நிறுவனங்கள் தங்களுடைய பதிப்பக புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி, ஏனைய பதிப்பக நூல்களுக்கு 15% தள்ளுபடி என்ற அறிவிப்போடு புத்தகங்களை விற்றன. இப்படி 50% வரை தள்ளுபடி சென்றதால், வாசகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்கள்.

பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்த என்சிபிஹெச் பதிப்பகம் திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியை யவனிகா ஸ்ரீராம் தலைமையில் கவிதை இரவாகவே மாற்றிவிட்டது. பொள்ளாச்சியில் வாசகர்கள் செவிக்கு மட்டும் அல்லாமல், வாய்க்கும் கேக் ஏற்பாடு செய்திருந்தார் ‘எதிர் வெளியீடு’ பதிப்பாளர் அனுஷ். எழுத்தாளர்கள் கார்த்திகைப் பாண்டியன், என்.கனகராஜன் இருவரும் வாசகர்களுக்கு கேக் துண்டுகளை வழங்கி வாழ்த்தினர். எல்லாப் பதிப்பகங்களிலுமே நல்ல விற்பனை இருந்ததாகக் கூறினார்கள் பதிப்பாளர்கள். “வரவிருக்கும் ஆண்டுகளில் ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ இயக்கத்தை மேலும் சிறப்பாக நடப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்” என்று கூறினார்கள் ‘பபாசி’ நிர்வாகிகள் வைரவன், வெங்கடேசன், பொருளாளர் சீனிவாசன் மூவரும்!

SCROLL FOR NEXT