‘சொ
ர்க்கம் என்பது மிகப்பெரியதொரு நூலகமாய் இருக்குமென்று நினைக்கிறேன்’ என்று ஹோர்ஹே லூயி போர்ஹே தன் கதையொன்றின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சிற்றூரில் உள்ள பள்ளியின் தலைமையாசிரியர், குழந்தைகள் வாசிக்க காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கித் தரும்படி என்னிடம் கேட்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. பிள்ளைகளை வாசிக்கவைக்க எல்லோருக்கும் ஆசையிருந்தாலும், காமிக்ஸ் வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று யாருக்கும் தோன்றுவதில்லை. வாசிப்பனுபவத்தின் ஆரம்பத்தில் படங்களுடன் வார்த்தைகளைப் பழக்க வேண்டும். அதனால்தான் சிறுவர் புத்தகங்களில் அத்தனை படங்கள் இடம்பெறுகின்றன.
நான் படித்த எந்தப் பள்ளிக்கூடத்திலும் நூலகத்தில் புத்தகங்களை எடுக்க எங்களை அனுமதித்ததில்லை. பிள்ளைகள் கிழித்துவிடுவார்கள் என்று எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். வெள்ளிக்கிழமை எப்போது விடியும் என்று காத்திருந்து, சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்கு ஓடிப்போய் சிறுவர் இதழொன்றின் கதைகளை ஆசைதீர வாசித்த ஆர்வம் இன்றைய தலைமுறைக் குழந்தைகள் யாரிடமும் பார்க்க முடியவில்லை.
25 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியில் ராமதாஸ் பூங்கா முன்புறம் சின்னதாய் தகரக்கொட்டகை போட்ட நூலகம் நடத்திவந்தார் ஒரு பெரியவர். வேட்டி மட்டும் கட்டியிருப்பார். மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரைக்கும் நூலகம் திறந்திருக்கும். 6 கி.மீ. தூரத்திலுள்ள நாலாட்டின்புதூரிலிருந்து தினமும் நடந்தே வருவார். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் அனைவரின் புத்தகங்களும் அந்தத் தகரக் கொட்டகைக்குள் அழகாய் பைண்டு செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சாண்டில்யன், எண்டமூரி வீரேந்திரநாத், பாலகுமாரன், சுஜாதா என்று வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த காலம். அவர் கடையிலிருந்து என்னுடைய வீடு 2 கி.மீ. தூரமிருக்கும். சாயந்திரம் ஆனதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறப்பேன். அவர் வருகைக்காக அந்தக் கொட்டகைக்கு முன் பல நாட்கள் காத்துக்கிடந்திருக்கிறேன்.
திருநெல்வேலியில் நூலகம் நடத்திவந்த வயதான பெண்மணி ஒருவர், தொடர்ந்து நடத்த இயலாமல் புத்தகங்களை அலமாரிகளுடன் விற்பதற்கு விளம்பரம் கொடுத்திருந்தார். இது குறித்து சமீபத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் படித்தேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள். ஒவ்வொன்றும் தனியொரு உலகம். ஒரே நேரத்தில் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டன. யாருக்கும் இது ஒரு இழப்பாகவே தெரியவில்லை. ஒரு நூலகத்தை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றும்படி எந்த நூலகமும் லாபகரமாகச் செயல்படவில்லை. நூலகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே செல்கிறது.
பள்ளிப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பைப் பெற்றோரும், ஆசிரியர்களும் உறுதிசெய்ய வேண்டும். சில தனியார் பள்ளிகளில் எல்லாக் குழந்தைகளும் ஏதாவது ஒரு நூலகத்தில் உறுப்பினராய் இருப்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அவர்கள் புத்தகங்கள் எடுத்து வாசிப்பதையும் உறுதிசெய்தால்தான் பலன் கிடைக்கும். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை எடுக்கப் பெற்றோர் விடுவதில்லை. பொதுஅறிவு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் புத்தகங்கள் இவற்றை எடுக்க வற்புறுத்துகின்றனர். இது அவர்களுக்குப் புத்தகங்கள் மீது வெறுப்பை வளர்க்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தை காமிக்ஸிலிருந்து ஆரம்பிப்பதே சரியாக இருக்கும்.
முன்பு நமக்கு வாசிப்பில் ஒரு படிநிலை இருந்தது. காமிக்ஸ், வார இதழ்கள், பாக்கெட் நாவல், வரலாற்றுப் புதினங்கள், இடைநிலை இலக்கியங்கள், தீவிர இலக்கியம் என்று ஒரு வரிசை இருந்தது. இப்போது சுவாரசியத்துக்காக, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சக எழுத்தின் இடத்தை நவீன ஊடகங்கள் பிடித்துக்கொண்டன. புதிதாய் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் யாரும் உருவாகி வரவில்லை. எழுதும் எல்லோருமே இலக்கியம் என்ற பேருந்துக்குள் தங்களைத் திணித்துக்கொண்டும் படியில் தொங்கிக்கொண்டும் இருக்க, இலக்கியப் பேருந்து திணறியபடி ஓடிக்கொண்டிருக்கிறது. தங்களை நிரூபித்துக்கொள்ள, வேறுபடுத்திக் காட்ட எழுத்தாளர்களுக்கு மறைமுகமான அழுத்தம் இருக்கிறது. இது இன்னொரு வகையில் வாசகர்களிடமிருந்து அவர்களை மெல்ல மெல்ல விலக்குகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆரம்பகட்ட வாசகர்கள் மேற்கொண்டு வாசிப்பை மேம்படுத்த முடியாமல் பெருந்தடையை ஏற்படுத்திவிடுகிறது. இதனாலேயே வாசிப்புக்குள் வரவேண்டிய நிறைய பேரின் கவனம் பிற ஊடகங்களின் பக்கம் திரும்பிவிடுகிறது. தொண்ணூறுகளில் நமக்கு பாலகுமாரன், சுஜாதா இன்னபிற எழுத்தாளர்கள் இருந்த இடம் இப்போது வெற்றிடமாக இருக்கிறது. (பாலகுமாரன் வேறு வகை எழுத்துக்குத் தற்போது மாறிவிட்டார்). தரமான ஜனரஞ்சக எழுத்தாளர்கள் இப்போது அவசியம் தேவைப்படுகிறார்கள்.
சமீபத்தில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனியார் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி அளிக்க இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். அதையடுத்துத் தனியார் நூலகங்களின் நிதிநிலை, புத்தகங்களின் விவரம், வாசகர்களின் எண்ணிக்கை போன்றவற்றின் விரிவான அறிக்கையையும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சேகரித்தார்கள். வாசகர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் இருக்குமிடமாகவும், சிரமமில்லாமல் எளிதில் எடுக்கும் வண்ணம் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் இடமாகவும் தனியார் நூலகங்கள் உள்ளன. தமிழக அரசு சூழலைப் புரிந்து, தாமதிக்காமல் வேண்டிய உதவிகள் செய்ய முன்வர வேண்டும். தற்போது மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் பாடத்திட்டத்திலும் பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பைச் சேர்க்க வேண்டும்.
- பாலா கருப்பசாமி, கவிஞர்,
தொடர்புக்கு: balain501@gmail.com