இலக்கியம்

ஆய்வுகளின் வழியே ஒரு வரலாற்றுப் பயணம்

இரா.காமராசு

மிழ்ச் சமூக வரலாறு உருவாக்கத்துக்கும் பண்பாடு குறித்த அக்கறைக்கும் அடிப்படை வகுப்பவை நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த படைப்புகள். சமீபத்தில் வெளியான சில புத்தகங்கள், இவ்வகையில் கவனத்துக்குரியவை.

நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் ஆய்வுப்புலங்களின் முன்னோடி ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கும் ‘பனை மரமே! பனை மரமே! - பனையும் தமிழ்ச் சமூகமும்’ (காலச்சுவடு பதிப்பகம்). புழங்கு பொருட்கள் பற்றிய பண்பாட்டு ஆய்வு இந்நூல். பனைக்கு நூற்றுக்கும் அதிகமான பெயர்கள்; வாய்மொழி வழக்காறுகளுடன் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்கள், கல்வெட்டுகள் என்று பல்துறைக் கூட்டாய்வாக இந்நூல் மலர்ந்துள்ளது. சிந்துச் சமவெளி குறித்த புதிய வெளிச்சம் தரும் அரிய நூல், ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ (பாரதி புத்தகாலயம்). மொழியியலையும், நிலவியலையும் இணைத்துப் பார்க்கிறது இவரது முறையியல். திராவிட இடப்பெயர்கள் - சங்க இலக்கியங்களில் காணலாகும் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகியன சிந்துவெளியில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளதை உரிய தரவுகளின் வழி மெய்ப்பிக்கிறார்.

தமிழ் நாட்டுப்புறவியலின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கிய நூல் ஆறு. இராமநாதன் எழுதிய ‘தமிழர் கலை இலக்கிய மரபுகள் -நாட்டுப்புறவியல் ஆய்வு’ (மெய்யப்பன் பதிப்பகம்). நாட்டுப்புறவியல் அறிமுகம் தொடங்கி நாட்டுப்புறவியல் ஆய்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், கதைப் பாடல்கள், கள ஆய்வு, கோட்பாடுகள், கோட்பாட்டாய்வுகள் ஆகியன பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1937-ல் நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நடந்த சமபந்திபோஜனத்தில் பங்கேற்றதற்காக 20 தலித்துகள் தாக்கப்பட்டனர். பெரியாரும் அவரின் சுயமரியாதை இயக்கமும் இக்கொடுமைக்கு எதிராகப் போராடினர். இது குறித்த கள ஆய்வு, ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள் வழி ஆ.திருநீலகண்டன் எழுதியிருக்கும் நூல் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’ (காலச்சுவடு பதிப்பகம்). நீடாமங்கலம் நிகழ்வு, தமிழ்ச் சமூக சாதித் தழும்பாக வரலாற்றில் பதிவானதன் சான்று இந்நூல். தமிழில் கலை வரலாறு குறித்த ஆக்கங்களின் தொகுப்பு, சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘கல் மேல் நடந்த காலம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் வழியே பண்பாட்டு எழுதியலாக இக்கட்டுரைகள் அமைகின்றன. ஆர்மாமலை குகை ஓவியங்கள், தமிழ் அரச பரம்பரையின் உருவச் சிற்பங்கள், இருக்குவேளிர் கலைப் பாரம்பரியம், தஞ்சை பெரிய கோயில் புத்த சிற்பம் போன்ற கட்டுரைகள் தமிழுக்குப் புதியவை.

சி.மீனாட்சி, வித்யா தெஹிஜியா, தர்மாகுமார், ரொமிலா தாப்பர், குமாரி ஜெயவர்த்தனெ ஆகிய ஐந்து வரலாற்று அறிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன், அவர்களின் சிறந்த ஆய்வுகளில் ஒன்றையும் அறிமுகப்படுத்தும் நூல், தேன்மொழி தொகுத்திருக்கும் ‘வரலாற்றை எழுதும் பெண்கள்’ (மணற்கேணி பதிப்பகம்) வரலாற்றை வாசிப்பதிலும், உருவாக்குவதிலும் பெண்ணிலைப் பார்வையை விரிவாக்கிட இந்நூல் உந்துதல் தரும்.

சமகால சமூக நிகழ்வுகளை முன்வைத்து விவாதித்திக்கும் கட்டுரைகளின் தொகுப்பு, டி.தருமராஜ் எழுதிய ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ (கிழக்குப் பதிப்பகம்). நாட்டுப்புறவியல், மானுடவியல், சமூகவியல், பின்நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகளின் ஊடே விமர்சனங்களை முன்வைக்கிறது இந்நுல். “நான் ஏன் தலித் அல்ல என்ற பதிலைச் சுமந்தபடி தலித்தாகவே இருக்கும்படி நான் மீண்டும் மீண்டும் சபிக்கப்படுகிறேன்” என்கிறார் ஆசிரியர். பக்தவச்சல பாரதி, ஓ.முத்தையா தொகுத்திருக்கும் ‘பொதினி நாட்டுப்புறவியல் ஆய்வுகள்’, தமிழக நாட்டுப்புறவியல் அறிஞர் பெ.சுப்பிரமணியன் பணிப்பாராட்டு தொகை நூல் (காவ்யா பதிப்பகம்). வாய்மொழி வரலாறு, வாய்மொழி வழக்காறுகள், வழிபாடும் சடங்குகளும், கலைகளும் கலைஞர்களும், கோட்பாடுகளும் அணுகுமுறைகளும், வாய்மொழி மரபு அறிவு ஆகிய பகுப்புகளில் 41 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அரை நூற்றாண்டு தமிழ் நாட்டுப்புறவியலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கட்டியம் கூறும் நூலாக அமைகின்றது.

தமிழின் தொல்லிலக்கியங்கள் குறித்த ஆய்வில் இலக்கிய மானிடவியல், இனவரைவியல் போன்ற அறிவுத் துறைகளைக் கருவிகளாக்கி ஆராயும் போக்கை அறிமுகப்படுத்துகிறது ஞா.ஸ்டீபன் எழுதியிருக்கும் ‘இலக்கிய இனவரைவியல்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). இலக்கிய இனவரைவியல் என்பது இலக்கியத்தை மானிடவியல் அடிப்படையில் ஆய்வுசெய்யும் முறையியல் எனக் கூறுகிறார் நூலாசிரியர்.

கொங்கு வட்டாரத்தில் நாட்டுப்புறத் திருவிழாக்கள், குலதெய்வ விழாக்களில் இசைக்கப்பெறும் இசைக் கருவிகள் குறித்து விரிவாக ஆராய்கிறது பெ.சுப்பிரமணியன் எழுதிய ‘கொங்கு நாட்டுப்புற இசைக் கருவிகள்’ (ராம்குமார் பதிப்பகம்). உடுக்கை, பம்பை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை முதலிய தோல்கருவிகள், நாதசுரம், சங்கு, சந்தக்குழல், கொம்பு, தாரை முதலான துளைக் கருவிகள் பற்றி இந்நூல் நுட்பமான தகவல்களைத் தருகிறது.

- இரா.காமராசு, எழுத்தாளர்,

உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: kamarasuera70@gmail.com

SCROLL FOR NEXT