எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் சார்பில் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்விக்கு ‘சிலாவம்' நாவலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. ‘பாரதியார் கவிதை விருது’ கவிஞர் ரவிசுப்ரமணியனுக்கு ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ என்ற நூலுக்காகவும், ‘அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’ சிறார் எழுத்தாளர்கள் அருண்.மோ, சி.சரிதா ஜோ ஆகிய இருவருக்கும் முறையே ‘பெரியார் தாத்தா’, ‘கடலுக்கு அடியில் மர்மம்’ நூல்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
‘ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது’ எம்.பூபதிக்கும், ‘ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அறிவியல் தமிழ், தொழில்நுட்ப விருது’ டாக்டர் க.மகுடமுடிக்கும், ‘பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது’ க.தமிழ்மல்லனுக்கும், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது’ முனைவர் சிவ.இளங்கோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் தமிழ்: ஜெர்மனியில் பிராங்க்பர்ட் நகரில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சி, சர்வதேச அளவில் நடைபெறும் மிகப் பெரிய புத்தகக் காட்சியாகும். இந்தப் புத்தகக் காட்சியில் தமிழிலிருந்து காலச்சுவடு பதிப்பகம் முதன்முதலாகக் கலந்துகொண்டது. தனது முதல் அரங்கத்தை அமைத்தது.
இந்த ஆண்டு எதிர் வெளியீடும் ஆழி பதிப்பகமும் தனியாக அரங்கு அமைத்துள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரி கே.இளம்பகவத் தலைமையில் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி குழுவும் சென்றிருக்கிறது.
பேராசிரியருக்கு விருது: அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க மேரி கே ஓ’கானர் செயல்முறைப் பாதுகாப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்படும் டிரெவர் கிளெட்ஸ் மெரிட் விருதுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.அப்பாசி இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாசுக் கட்டுப்பாடு, கழிவுப் பயன்பாட்டுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான பணிக்காகப் பல விருதுகளைப் பெற்றவர் பேராசிரியர் அப்பாசி.