எழுத்தாளர் அசோகமித்திரனின் 6 சிறுகதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ‘அசோகமித்திரன் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை மேடை அரங்கத்தில் செப். 24 அன்று அரங்கேற்றப்பட்டது. ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கியிருந்த இந்நிகழ்ச்சியை சென்னை ஆர்ட் தியேட்டர் தயாரித்திருந்தது.
அசோகமித்திரன் எழுதிய ‘புலிக் கலைஞன்’ அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. அந்தக் கதை எவ்வளவு மகத்துவமானது என்பதை கச்சிதமாக உணரும் வகையில் அது மேடையில் நிகழ்த்தப்பட்டது. புலியாட்டக் கலைஞன் காதர் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஆதித்யா, காதரின் கையறு நிலையை சிறப்பாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருந்தார். காதரின் கதையைக் கேட்டு கவலையடையும் சினிமா நிறுவன ஊழியர்களாக சூர்யாவும், விஷ்ணுவும் இந்த அனுபவத்துக்கு மெருகூட்டியிருந்தனர்.
நடுத்தரக் குடும்பத் தலைவிக்கும் அவர் வீட்டுக்கு விற்பனைப் பிரதிநிதியாக வரும் இளம் பெண்ணுக்குமான உரையாடல்தான் ‘பார்வை’ கதை. இருவரின் உரையாடல் வழியே அன்றைய மக்களின் பொருளாதாரப் பாடுகள், மத நம்பிக்கை குறித்த சித்திரம் பதிவாகிறது. தர்மா, சிநேகா இருவரும் கதாபாத்திரங்களுக்கு சரியான தேர்வாக அமைந்துள்ளனர்.
நாடக அரங்கேற்ற நாள் அன்று அதில் நடிக்க வேண்டிய நடிகை, வர மறுத்துவிடுகிறார். அவருக்கு மாற்றாக, பழைய நடிகையைத் தேடிச் செல்கிறார் பொறுப்பாளர். இந்தச் சம்பவங்களின் வழியே நாடகக்காரர்களின் சவால்கள் குறித்த, குறுக்கு வெட்டுத் தோற்றத்தைத் தருகிறது ‘நாடக தினம்’ . இதில் சுப்ரமணியம், தர்மா இயல்பாக நடித்திருந்தனர்.
அசோகமித்திரனின் செகந்திராபாத் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட ‘ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்’ அதன் தொடர்ச்சியாக அமைந்த ‘அப்பாவின் சிநேகிதர்’ ஆகிய கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. அரசியல்-அதிகாரப் போட்டியில் மதமும் கலப்பதால் எளிய மக்களுக்கு நேரும் துயரங்களும் பரஸ்பர நட்பிலும் உறவிலும் ஏற்படும் விரிசல்களும் அதைத்தாண்டி அவர்களிடையே உள்ள இயற்கையான பிணைப்பு வெளிப்படும் தருணங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதில் சையதுவாக சர்வேஷ் ஸ்ரீதரும் அவருடைய இறந்துபோன நண்பரின் மகன் நாராயணனாக விஷ்ணுவும் நடித்துள்ளனர்.
கறுப்பு வெள்ளை காலத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்களாகக் கோலோச்சிய 2 நடிகைகளின் போட்டியை முன்வைத்து எழுதப்பட்டது ‘போட்டியாளர்கள்’ கதை. பிரபலமான ஒரு சினிமாப் பாடல், நடிகையாக வரும் நந்தினி, நடன ஆசிரியராக வரும் சண்முகசுந்தரம் ஆகியோரின் சிறப்பான நடனம் ஆகியவற்றை விஸ்தாரமாகப் பயன்படுத்தி சுவைமிக்க காட்சியனுபவமாக இதை உருமாற்றியிருந்தார் ப்ரஸன்னா ராமஸ்வாமி. கதை சொல்லியும் கதையின் ஒரு கதாபாத்திரமுமாக வரும் சேதுவின் பங்களிப்பும் இந்தக் கதையின் தாக்கத்தை அதிகரித்தது. பரத்ராமனின் ஒலிச் சேர்க்கையும், சார்ல்ஸ், ஒளி வடிவமைப்பும் பார்வையாளர்கள் கதைகளுடன் ஒன்றுவதற்குத் துணைபுரிந்தன.
தி.ஜானகிராமனின் கதைகளை வைத்து ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கத்தில் ஜூலையில் அரங்கேற்றப்பட்ட ‘கதைகூறல்’ தொடரின் 2-ம் நிகழ்ச்சி இது. அதைக் காட்டிலும் அசோகமித்திரன் நிகழ்வு, நாடக வடிவத்துக்கு கூடுதல் நெருக்கமானதாக இருந்தது.
அசோகமித்திரனின் கதைகளில் சொல்லப்படுவதைவிட சொல்லாமல் உணர்த்தப்படுபவை அதிகம். இப்படிப்பட்ட கதைகளை எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் நிகழ்த்துக் கலை வடிவத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் ப்ரஸன்னா ராமஸ்வாமியும் அவர் குழுவினரும்.