ப
ல்லவ மன்னன் மகேந்திரவர்மன் அகழ்ந்து உருவாக்கிய பல குடவரைக்கோயில்கள் போலவே தூணாண்டார் கோயிலும் ஒரு பரந்த ஏரிக்கரையில் அமைந்துள்ளது. அருகில் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு வான் நோக்கி எழும் தூண் போன்ற அந்தப் பெரிய குத்துப்பாறைதான் ஆலயத்துக்கும் அதில் உறையும் ஆண்டவனுக்கும் இந்தப் பெயரைக் கொடுத்திருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தேசூருக்கருகே உள்ள இந்த கோயில், பிரம்மாண்ட மான ஒரு பாறையைக் குடைந்து எடுப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டபமும் கருவறையும் மட்டுமே கொண்ட எளிமையான குடவரை ஆலயம் இது. இங்குள்ள, தமிழகத்திலேயே பழமையான நடராஜர் புடைப்புச் சிற்பம்தான் என்னை ஈர்த்தது. ஆடவல்லார் எனும் கருத்தாக்கம் இதற்கு முன்னரே இருந்திருக்கிறது. ‘கலித்தொகை’ சிவனின் நடனம் பற்றிப் பேசுகிறது. சங்க காலத்தில் சுவரோவியங்களிலும் சுதைமண்ணுருவாகவும் மரச்சிற்பங்களிலும் நடனமாடும் சிவன் காட்சிப்படுத்தப்பட்டிருந்திருக்கலாம். ஆனால், அவை யாவும் காலத்தால் மறைந்துவிட்டன; கற்சிற்பங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
மண்டபத்தில் நான்கு தூண்கள். அதிலொன்றின் மேற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள சம்ஸ்கிருதக் கல்வெட்டு மூலம் இந்த ஆலயத்தை உருவாக்கியது நான்தான் என மகேந்திர பல்லவன் (கி.பி.580-630) பிரகடனப்படுத்துகிறார். இன்னொரு தூணில்தான் பிரசித்தி பெற்ற ஆடவல்லார் சிற்பம் உள்ளது. பிற்கால பல்லவ ஆலயங்களில் நடராஜரை விட சோமஸ்கந்தருக்கே அதிக இடம் கொடுக்கப்பட்டது. சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களின் கல்லுருவிலும் செப்புத்திருமேனியாகவும் ஆடவல்லானுக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டது.
இங்குள்ள நடராஜர் சிற்பம், லேசான புடைப்பாகவும் அளவில் சிறியதாக இருந்தாலும் நீளம், அகலம் 40 செ.மீ.தான். திறமையுள்ள ஒரு கல்தச்சர், கிடைத்திருக்கும் கல்பரப்பை நன்கு பயன்படுத்தி, அதில் நிறைய விவரங்களை அழகுற வெளிக்கொண்டுவந்திருக்கிறார். நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ள சடாமகுடத்தில் பிறை நிலாவும் மண்டையோடும் தெரிகின்றன. மூன்றாம் கண் எடுப்பாக உள்ளது. கழுத்தில் கண்டிகை, கைகளில் தோள்வளைகளும் கடகவளைகளும், மார்பின் குறுக்கே தடித்த பூணூல், வயிற்றைச் சுற்றி ஒரு கச்சமும் உள்ளன. இடதுபுறத்தில் கைத்தாளத்துடன் ஒரு சிவகணம் உள்ளார். நடராஜரின் வலது கால் தரையில் ஊன்றப்பட்டு, இடது கால் தூக்கியபடி உள்ளது. கணுக்காலில் உருண்டை மணிகளுடன் கூடிய காற்சதங்கைகள் அணியப்பட்டுள்ளன. பின்-இடதுகையில் மழுவும், பின்-வலதுகரத்தில் தீச்சட்டியும் ஏந்தப்பட்டுள்ளன. இடதுகரம் தொங்கிய நிலையிலிருக்க வலதுகரம் அபயக் குறியீட்டில் அமைந்துள்ளது. இந்த உள்ளங்கையின் இரு ரேகைகள்கூடத் துல்லியமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், சிவனின் முகத்தில் ஒரு புன்முறுவல் தெரிகிறது. ஆனந்த தாண்டவமல்லவா!
சிவதாண்டவத்தில் ஒரு உன்னதமான தருணம் இங்கு சிற்பமாக உறைந்துள்ளது. சடாமுடி இருபுறமும் பறக்கிறது. வேட்டி நுனியும் காற்றில் அலைகிறது. நடனத்தின் அசைவை சிற்பி நன்றாக நிலைநிறுத்தியிருக்கிறார்.
நாமறிந்த மற்ற நடராஜர் சிற்பங்களிலிருந்து சீயமங்கலம் சிற்பம் வேறுபடுகிறது. நடனமாடும் சிவனின் கையில் உடுக்கை இல்லை. காலடியில் முயலகன் இல்லை. சிவனின் இரு காதுகளிலும் ஒரே விதமான குழைகள். தீச்சட்டி, இடதுகையில் இல்லாமல் வலது கையில் ஏந்தப்பட்டிருக்கிறது. எப்போதும் அவர் கழுத்தைச் சுற்றியிருக்கும் நல்லபாம்பு இங்கே தனியாகத் தரையில், படம் எடுத்தபடி இருக்கிறது.
இம்மாதிரியான கலைப் படைப்புகள் வரலாற்றாசிரியருக்குச் சில தடயங்கள் மூலம் புதிய புரிதல்களைக் கொடுப்பவை. இந்தச் சிறிய சிற்பத்தில், வலது புறத்தில் ஒரு சிவகணம் முக்காலியில் அமர்ந்து ஒருபக்க மேளம் ஒன்றைத் தட்டிக்கொண்டிருக்கிறார். அந்த மேளத்தை அலங்கரிக்கும் குறுக்குநெடுக்கான வரிவடிவம் கலாச்சாரப் பரவுதலுக்கு ஒரு தடயம். கர்நாடகத்திலுள்ள சாளுக்கியர் எடுப்பித்த பாதாமி குடவரை ஆலயத்தில் ஒரு பெரிய நடராஜர் கற்சிற்பமுண்டு. அதன் வலது ஓரத்தில் ஒரு சிவகணம் இசைத்துக்கொண்டிருக்கும் இதே மாதிரியான மேளத்திலும் இந்த வடிவமைப்பு காணப்படுகின்றது.
சாளுக்கியர், ராஷ்ரகூடர், பல்லவர் இவர்களிடையே கலாச்சார ஊடாட்டம் இருந்ததற்குப் பல தடயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சீயமங்கலம் சிவகணத்தின் மேளமும் இதில் ஒன்று. இத்தகைய கலைக்கூறுகள் இந்தியா முழுவதும் பரவியிருப்பதைப் பற்றி கலைவரலாற்றாசியர் க..சிவராமமூர்த்தி அருமையான, சிறு நூல் ஒன்றை எழுதியுள்ளார். கொல்கத்தா தேசிய அருங்காட்சியகத்தின் வெளியீடு. படையெடுப்புகளையும் போர்களையும் தொடர்ந்து கலாச்சாரப் புலம்பெயர்தல் நடைபெற்றதை இவர் விளக்குகிறார்.
இந்த ஊரில் நம் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு தொல்லெச்சம் இருக்கிறது. பல சமண புடைப்புச் சிற்பங்கள் கொண்ட ஒரு சிறு குன்று இந்த இடத்துக்கு அருகிலேயே உள்ளது. ஒரு பாறைக் கல்வெட்டு (சிற்பங்களுக்கு முந்தையது) இங்கு ஒரு சமணப் பள்ளி இருந்ததைத் தெரிவிக்கிறது. மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறினார் என்பது வரலாறு. இந்த பல்லவ மன்னன் அகழ்ந்து உருவாக்கிய பல குடவரை கோயில்கள் முந்தைய காலகட்ட துறவிகளின் பாறைக்குடில், கற்படுக்கை, கல்வெட்டுகள் போன்ற சமண தொல்லெச்சங்களுக்கு அருகே இருப்பது ஆய்வுக்குரியது. திருச்சி மலைக்கோட்டை ஒரு எடுத்துக்காட்டு.
தூணாண்டார் குடவரைக் கோயில் உருவாக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அதன் முன்புறத்தில் செங்கல், கல், காரையால் ஆன மண்டபங்கள் எடுப்பிக்கபட்டதால் மாமல்லபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடவரையில் இருப்பது போலவே, கோயிலின் முன்தோற்றம் முழுவதுமாக மறைக்கப்பட்டுவிட்டது. அந்தக் கோயிலைப் போலவே தூணாண்டார் கோயிலும் வழிபாட்டில் இருக்கிறது. முன்மண்டபத்தால் குடவரையின் உட்புறம் இருள் மங்கியுள்ளது. இந்தக் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன் மாலை வேளையில் மேற்குத் திசை நோக்கியுள்ள இந்தக் குடவரை சூரிய ஒளியால் நிரப்பப்பட்டிருந்திருக்கும்.
தூணாண்டார் கோயிலிலிருந்து நாங்கள் வெளிவரும்போது அந்தி மயங்கும் நேரம். ஏரியின் பின்புலத்தில் தொலைவில் ஜவ்வாது மலை தெரிந்தது. தொடுவானத்தில் மறையத் தொடங்கியிருந்த கதிரவனின் ஒளியால் பரந்த ஏரி சிவந்து ‘வெள்ளம் தீப்பட்டதென’ தோற்றமளித்தது. இம்மாதிரியான காட்சிதான் ஆடவல்லானைப் போற்றித் திருமூலரைப் பாட வைத்ததோ?
தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே..
- தியடோர் பாஸ்கரன், கலை, சூழலியல் ஆர்வலர்,
‘கல் மேல் நடந்த காலம்’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com