வால்டர் பெஞ்சமின் 1936-ல் எழுதிய முக்கியமான கட்டுரை ‘எந்திரப் பிரதியாக்கத்தின் காலத்தில் கலைப்படைப்பு’(The Work of Art in the Age of Mechanical Reproduction). இக்கட்டுரை கலாச்சார ஆய்வுகள், ஊடகக் கோட்பாட்டியல், கலை, இலக்கியம், வரலாறு எனப் பல துறை அறிஞர்களைப் பாதித்தது. கலைப் படைப்புகள் மீது வழிபாட்டு மனோபாவத்தை விஞ்ஞானவாதம் கேள்விக்குட்படுத்திய காலத்தில் வால்டர் பெஞ்சமின் தனது கருத்தை வைக்கிறார்.
நவீன காலத்தில் பெரும்பாலான கலைப் படைப்புகளைப் பிரதி செய்ய முடியும். அப்படிப் பிரதிசெய்யும்போது ஒரிஜினல் எனப்படும் மூலப் படைப்பு தனியாகவும் பிரதிகள் வேறாகவும் இருக்கும். பிரதிகள் ஒரிஜினலைப் போலவே இருந்தாலும் மூலப் படைப்பில் உள்ள தனித்துவமும் படைப்பாளியின் சுவடுகளும் இருப்பதால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. உதாரணமாக, பிகாசோவின் ஓவியங்களை அச்சு அசலாக ஒருவர் வரைய முடிந்தாலும் பிகாசோ வரைந்த மூல ஓவியத்தின் மதிப்பு அதற்குக் கிடைக்காது.
ஆனால், சினிமா, புகைப்படம் போன்ற எந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் படைப்புகளில் மூலம், நகல் என்ற பிரிவினைகள் மறைந்துவிடுகின்றன. மூலப் படைப்பைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் மறைந்துபோகிறது. புகைப்படமோ, சினிமாவோ எதைக் காட்சிப்படுத்தியதோ அதைக்கூட மூலமாகக் கருத முடியாது.
தொழிற்புரட்சிக் காலத்தில் ஊடகங்கள் மற்றும் கலைப் படைப்புகள் சார்ந்த வரையறை மாறத் தொடங்கியதின் மீது இக்கட்டுரை மூலம் கவனம் குவிக்கிறார் வால்டர் பெஞ்சமின். இந்த மாறுதல்கள் சமூக விழுமியங்களிலும் மாறுதல் ஏற்படுத்துவதை அவர் அவதானித்தார்.
முந்தைய காலத்தில் கலைப் படைப்புக்கும், அதை உருவாக்கியவருக்கும் வழிபாட்டு முக்கியத்துவம் இருந்தது. சமூகத்தின் மேல்தட்டினர் மட்டுமே சுகிக்க இயலும் நிலை இருந்தது. சினிமா மற்றும் புகைப்படக் கலை இந்த வேறுபாடுகளைத் தகர்த்தெறிந்தது. இச்சூழலில் ஊடகத்துக்கும் பார்வையாளருக்கும் இடையிலான சுவர் அகற்றப்பட்டுவிட்டு ஜனநாயகமயமாவதை நல்ல மாறுதலாக வால்டர் பெஞ்சமின் பார்த்தார். அவரது கருத்து இன்றைய சமூக ஊடகங்கள்வரை தாக்கம் செலுத்திவருகிறது.