திரைத் துறையில் தீவிரமாக வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களில் முக்கிய மானவர் ‘ஆடுகளம்’ மூலம் தேசிய விருது உச்சம் தொட்ட இயக்குநர் வெற்றிமாறன். எல்லோரும்போல் எப்போதும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருபவர் அல்ல வெற்றிமாறன். இந்த முறை வந்திருந்தவர் ஏராளமான புத்தகங்களை அள்ளிக் கொண்டிருந்தார்.
“என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளுக்குள்ளேயும் இருந்த ஒரு கதைசொல்லியை எனக்கே அடையாளம் காட்டினது என்னுடைய வாசிப்புப் பழக்கம்தான். நிறையப் புத்தகம் படிக்கிறவன் நான். சினிமால நான் நிறையப் படிக்கிற ஆளுன்னு சொல்வாங்க; உண்மை என்னன்னா, சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம் என்னோட வாசிப்பு கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சுடுச்சுங்குறதுதான். சமீபத்துலதான் இது ஆழமா உறைச்சுச்சு. இப்போ திரும்ப நிறையப் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பிச்சுருக்கேன்.
பொதுவா, புத்தகக் காட்சிகளுக்குத் தொடர்ந்து போறவன் இல்லை நான். ரொம்ப காலத்துக்கு இங்கே வந்திருக்கேன். பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கு. ஒரு பெரிய விழாவா தெரியுது. புத்தகக் காட்சி ஒரு பெரிய கொண்டாட்டமா மாறியிருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நிறையப் புத்தகங்கள் வாங்கியிருக்கேன். அதுல முக்கியமானதுன்னா, ஒரு அஞ்சு புத்தகங்கள் சொல்றேன் குறிச்சுக்குங்களேன். சி.மோகனோட ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’, சி.ஜெ.ராஜ்குமாரோட ‘பிக்சல்’, ஆல்பெர் காம்யுவின் ‘முதல் மனிதன்’, வெ.ஸ்ரீராமின் ‘புதிய அலை இயக்குநர்கள்’, தாஹர் பென் ஜிலோவனோட ‘நிழலற்ற பெருவளி’.