இலக்கியம்

நல் வரவு: வெடிச்சிரிப்பு

செய்திப்பிரிவு

1960 ஆக.4-ல் தினத்தந்தியில் தொடங்கிய கன்னித்தீவு கதையின் சொந்தக்காரர் அ.மா.சாமி. காமிக்ஸ், தொடர்கதை, பயணக்கட்டுரை, இதழியல் ஆய்வுகள் என பத்திரிகை எழுத்தின் பல வடிவங்களிலும் முத்திரை பதித்துள்ள அவர் வானொலியையும் விட்டுவைக்கவில்லை. சென்னை வானொலிக்காக அ.மா.சாமி எழுதிய ஐந்து நாடகங்களின் தொகுப்பு இது. வெடிச் சிரிப்பு நாடகத்துக்குக் கதாநாயகனாக குரல் கொடுத்து நடித்தவர் திரைப்பட நடிகர் ஜெய்சங்கர்.

வெடிச்சிரிப்பு
அ.மா.சாமி,
விலை- ரூ.150, நவமணி பதிப்பகம்,
சென்னை-30, 044 2626 2479.

மணற்கேணி- பாதையும் திசையும்
தொகுப்பு - ரவிக்குமார்
விலை: ரூ.70.
மணற்கேணி பதிப்பகம், தஞ்சாவூர்-613004.
தொடர்புக்கு: 8110906001

எழுத்தாளர் ரவிக்குமார் ஆசிரியராக இருந்து கடந்த ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் முக்கியமான ஆய்விதழ் ‘மணற்கேணி’. புலம்பெயர்ந்த தமிழர்கள், பெண் படைப்பாளர்கள் போன்றோரின் படைப்புகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டுவரும் இந்த இதழின் பங்களிப்பு பற்றி எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் பார்வைகளின் தொகுப்பே இந்நூல். இலக்கிய ஆய்வுகள், சமூவியல் ஆய்வுகள், மொழியியல் ஆய்வுகள் என்று ‘மணற்கேணி’யின் முன்னெடுப்புகள் பற்றி இந்தக் கட்டுரைகள் அலசுகின்றன.

இந்திய சீனப் போர்
நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ்,
விலை: ரூ.350
கிழக்குப் பதிப்பகம், சென்னை – 600 014.
தொடர்புக்கு: 044-42009603

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்திய – சீனப் போர் தொடர்பாக இன்றைக்கு வெவ்வேறு விதமான கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ‘தி டைம்ஸ்’ இதழில் செய்தியாளராக இருந்த நெவில் மாக்ஸ்வெல், இந்திய-சீனப் போர்க்காலத்தில் செய்தி சேகரித்த அனுபவம் கொண்டவர். அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் இந்திய – சீனப் போரின் பின்னணி, இரு நாடுகளின் நிலைப்பாடு என்று பல விஷயங்களை விரிவாகப் பேசுகிறது!

ஓங்கில் மீன்கள் – கோதை
விலை: ரூ.100/-
சந்தியா பதிப்பகம், சென்னை-600083
பேசி: 044-24896979

சித்திரங்கள் வரைந்து புகழ்பெற்ற ‘சிவகாசி வர்ணக்காரர்’ குடும்பத்திலிருந்து வந்திருக்கும் இளங்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு. சிறுசிறு கவிதைகள்தான் என்றாலும் வாசிப்பில் சலனத்தை உண்டாக்குகின்றன. அரிசிப் பானையிலிருந்து பிஞ்சு விரல்களால் குருவிகளுக்கென மகள் அள்ளிப்போட்ட பிடி அரிசியில் முற்றம் நிறைக்கும் அன்பின் வெயிலும், கொன்றை மரத்தினருகே நாய் குட்டியொன்று புடவை ஓரத்தைப் பற்றுகையில் வாழ்ந்ததற்கான அடையாளம் வாய்த்த பொழுதும் கவிதைக்கான கணங்களாகியுள்ளன.

- தொகுப்பு: சிவசு, மு.மு, சந்துரு

SCROLL FOR NEXT