இலக்கியம்

வரலாற்று முகங்கள்

முனைவர் ப.சரவணன்

வரலாற்றில் சிலவற்றை வெளிப்படுத்துதல் என்பதுகூட அகழ்வாய்வைப் போன்றதாகவே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. திருவருட்பாவை அச்சு வாகனம் ஏற்றுவதற்கு வேராக இருந்தவர்கள் குறித்த தகவல்களும் அப்படித்தான் உள்ளது. அவர்கள் யார்? அவர்களது திருமுகம் எப்படி இருக்கும்? எந்த ஒரு ஆவணமும் நம்மிடமில்லை.

வள்ளலார் தொடக்கக் காலத்தில் பாடிய பாடல்களைத் தேடித் தொகுத்ததில் குறிப்பிடத்தகுந்தவர்கள் இறுக்கம் இரத்தின முதலியாரும் சிவாநந்தபுரம் செல்வராய முதலியாரும். வள்ளலாருக்குத் தமது பாடல்கள அச்சேற வேண்டும் என்பதில் நாட்டமில்லை. எனினும், சென்னையில் பலர் வணிகநோக்கோடு அவரது பாடல்களைப் பிழைபட அச்சிட்டுச் சிறுசிறு பிரசுரமாக வெளியிட்டு வந்ததால் அப்பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளையும் தாள் சுவடிகளையும் கண்டறிந்து தருமலிங்கம் பிள்ளை முதலான அணுக்கத் தொண் டர்களிடம் கொடுத்துப் பிரதி எடுத்து அச்சிட முனைந்தவர் இறுக்கம் இரத்தின முதலியாரேயாவர். அதுபோது வள்ளலார் வடலூர் பகுதிகளில் உறையத் தொடங்கினார்.

சென்னையிலிருந்த பாடல்களை எல்லாம் திரட்டிய பிறகு, வள்ளலார் வடலூர் பகுதிகளிலிருந்து பாடிய பாடல்களையும் சேர்த்து அச்சிட விழைந்த இறுக்கம் இரத்தினம் அவற்றை எல்லாம் பங்கியில்(பார்சல்) அனுப்பிவைக்குமாறு 1860-ல் வள்ளலாருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் வள்ளலார் அதைக் கிஞ்சித்தும் சட்டை செய்யாததனால், பாடலை அனுப்பாவிடில் தாம் ஒருவேளை போஜனம் மட்டுமே உண்டு உண்ணா நோன்பு இருக்கப் போவதாக வள்ளலாரை மிரட்டி, இறுக்கம் இரத்தின முதலியார் அனுமதி பெற்றார். “இராமலிங்கசாமி” என்று தலைப்பேட்டில் போடக் கூடாது என்ற உத்தரவாதத்துடன், இறைவன் தம்முள்ளிருந்து பாடுவித்தவற்றை மாத்திரம் அச்சிட இசைவளித்தார் வள்ளலார்.

வள்ளலாரின் அனுமதி கிடைத்த பின்னர், இறுக்கம் இரத்தின முதலியாரும் சிவாநந்தபுரம் செல்வராய முதலியாரும் புதுவையில் ராயல் என்னும் உணவு விடுதி நடத்திவந்த வேறு முதலியாருடன் இணைந்து திருவருட்பாவின் முதல் நான்கு திருமறைகள் அடங்கிய புத்தகத்தை 1867-ல் பிப்ரவரி மாதம் வெளியிட்டனர். (பாடல்களை வகை தொகைப்படுத்தி ஆறு திருமுறைகளாக வகுத்தவர் வள்ளலாரின் தலைமாணாக்கர் உபயகலாருதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார்; பொருளுதவி செய்தவர் மயிலை சிக்கிட்டி சோமசுந்தரம் செட்டியார்.)

திருவருட்பா உருவாவதற் குக் காரணமான இறுக்கம் இரத்தி்ன முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், ‘ராயல் ஓட்டல்’ புதுவை வேலு முதலியார் ஆகியோரின் திருவுருவங்களை அருட்பா ஆய்வாளர்கள் எவரும் இதுவரை கண்டதில்லை. இவர்களின் புகைப்படங்களை பழவேற்காட்டிற்கு அருகே யுள்ள இறுக்கம், கும்மிடிப் பூண்டி, திருமழிசை, சென்னை முதலிய பல இடங்களில் தேடியலைந்து நமக்கு வழங்கியிருக்கிறார் மாவட்ட துணையாட்சியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சித்தர்கள் ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்.

இதேபோல திருவருட் பாவை எழுத்தெண்ணிப் படித்து செம்பதிப்பாக வெளியிட்ட ஆ.பாலகிருஷ்ண பிள்ளையின் உருவத்தைப் புற உலகிற்குக் காட்டியவரும் இவரே. கள்ளக்குறிச்சி வட்டம் செல்லம்பட்டியில் வசிக்கும் பாலகிருஷ்ண பிள்ளையின் தம்பிப் பேரன் கே.சுப்பிரமண பிள்ளையின் உதவியால் அவரது கருமாதிப் பத்திரிக்கையிலிருந்து இப்படம் கண்டறியப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் ஆணையராகப் பணியாற்றி செல்வாக்கோடு வாழ்ந்து வந்த பாலகிருஷ்ண பிள்ளை யின் புகைப்படத்தைக் கண்டறி வதற்கே இத்தகு சிரமம் என்றால், திருவருட்பாவோடு தொடர்புள்ள மற்றவர்களைக் கண்டறிய நீண்ட நெடும் பயணம் வள்ளலார் ஆய்வாளர்களுக்குக் காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT