இலக்கியம்

வளைகுடா வாழ்வின் ஒரு துளி

வி.எஸ்.முஹம்மது அமீன்

அஜ்னபி நாவல் பதிவு செய்யப்படாத மனிதர்களின் பாடல். ஓராயிரம் துயரங்களைப் புன்முறுவலோடு வரைந்த சித்திரம். தலைமுறை கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் நீண்ட நெடிய பயணத்தின் குறிப்புகள். தென்தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மிகக் குறைந்தது வீட்டிற்கு ஒருவராவது வளைகுடாவில் காலம் தள்ளிக் கொண்டிருப்பர்.

ஆண்டுக் கணக்கில் பாலைப் பெருவெளியில் புழுதியோடு வாழ்ந்துவிட்டு மாத விடுமுறையில் ஊருக்கு வரும் வளைகுடாவாசிகளின் மேம்பூச்சு, அத்தர் மணம், மினுமினுப்பை உடைத்து அதனூடாக அவர்களின் வியர்வை நாற்றத்தை, வாடகை வாழ்க்கையின் அவலத்தை, பெருவிருப்பத்துடன் அனுபவிக்கும் வலிகளைப் பேசுகிறது இந்நாவல்.

தினம்தோறும் வானேகும் விமானங்கள் யாவும் ஓராயிரம் கனவுகளைச் சுமந்து சென்று அகபர வெளியெங்கும் விதைத்துவிட்டுத் திரும்புகிறது. அந்தக் கனவு விதையிலிருந்து ஃபைசல் என்னும் பாத்திரத்தை யதார்த்தமும், எள்ளலும், துள்ளலுமாக நாவலாக்கியிருக்கிறார் மீரான் மைதீன்.

அரபிக் கடலிலிருந்து மீரான் மைதீன் ஒரு சின்னக் கிண்ணத்தில் நீரள்ளி வந்திருக்கிறார். வளைகுடா வாழ்வில், இன்னும் எவ்வளவோ கொட்டிக் கிடக்கின்றன. பாலையின் ஒரு கைப்பிடி மண்ணையே மீரான் அள்ளி வந்திருக்கின்றார்.

இன்னும் சொல்லாத, சொல்லித்தீராத, தனி உலகமே அங்கு மெள்ளமாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது. மீரானின் அஜ்னபி புதிய களம், புதிய தளம், பதிவற்றவர்கள் குறித்த அழுத்தமான பதிவு. தமிழ் நாவல் வரவில் தவிர்க்க இயாலாப் பதிவாக அஜ்னபி என்றும் இருக்கும்.

அஜ்னபி

மீரான் மைதீன்

விலை: ரூ 275

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் 629 001.

தொலைபேசி: 0465-2278525

SCROLL FOR NEXT