தென் ஆப்பிரிக்காவில் நிலவிய கருப்பின ஒடுக்குமுறையைத் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசியவரும் சிறுபான்மை வெள்ளையாட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராடிய வருமான நாவலாசிரியர் நதின் கார்டிமர் கடந்த செவ்வாய்க் கிழமை காலமானார்.
1991-ல் நோபல் பரிசு பெற்ற நதின் கார்டிமர், வெள்ளையராக இருந்தபோதும், தனது சமூகம் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தியதில் இளம் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தவர். தென் ஆப்பிரிக்க நாவல் வரலாற்றை நதின் கார்டிமர் இன்றி யாரும் எழுத முடியாது.
நதின் கார்டிமருக்கு 25 வயதாக இருக்கும்போது, தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி நடைமுறைகள் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தன. அவரது முதல் நாவலான தி லையிங் டேஸ்-ல் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது புறவயமான அரசியல் சூழல் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து எழுதியிருந்தார்.
இவரது சிறந்த படைப்புகளாகக் கருதப் படும் ‘பர்கர்ஸ் டாட்டர்’ மற்றும் ‘ஜூலைஸ் பீப்பிள்’ நாவல்கள் அவரது ஐம்பதாவது வயதில் எழுதப்பட்டவை. நிறவெறிக்கு எதிரான இயக்கத்தில் பல தசாப்தங்கள் ஈடுபட்ட அனுபவத்தில் எழுதப்பட்ட படைப்பு கள் இவை. இந்த இரண்டு படைப்புகளும் அப்போதைய வெள்ளை அரசால் தடை செய்யப்பட்டன.
நூற்றாண்டுகளாகத் தொடரும் அநியாயங்களுக்குத் தெளிவான தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை நதின் கார்டிமர் அறிந்திருந்தார். ஒரு தரப்பு மக்களுக்குக் கிடைக்கும் அரசியல் விடுதலை எல்லாருக்கும் சந்தோஷமான சூழ்நிலையைத் தந்துவிடாது என்பதையும் தெரிந்தே வைத்திருந்தார். எந்த விதமான கருத்தியலைத் தழுவியவர்களாக இருப்பினும் மனிதர்களின் நோக்கங்கள் கலவையானவையாகவே இருக்கும் என்று நம்பினார். அதிகாரத்துக்கான பசிதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதை இவரது கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. இப்பின்னணியில் கார்டிமர் ஒரு யதார்த்தவாதி. அவர் தன் படைப்புகளில் சர்வ வல்லமை பொருந்திய நாயகர்கள் யாரையும் உருவாக்கவில்லை. பிரிட்டனிலிருந்து வந்த யூதக் குடும்பத்தில் பிறந்த நதின் கார்டிமர் ஸ்பிரிங்க்ஸ் டவுன் நகரத்தில் வளர்ந்தார். ஒன்பது வயதில் எழுதத் தொடங்கிய அவர் 80 வயது வரை தன் எழுத்துப் பணிகளை உற்சாகமாகத் தொடர்ந்தார்.
ஸ்ப்ரிங்க்ஸ் டவுன் நகரில் உள்ள துணிக்கடைகளில் கருப்பர்கள் தங்கள் துணியை வாங்குவதற்கு முன்னர் அதைத் தொடுவதற்குக்கூட உரிமை இல்லாத நிலை இருந்ததைப் பார்த்துத்தான் தனது முதல் கதையை எழுதினார். வெள்ளை எஜமானர்கள், கருப்புப் பணியாளர்கள் எனப் பிளவுபட்ட உலகம் அவருக்காகக் காத்திருந்தது. துல்லியமும், நுணுக்கமும் கொண்ட சிறுகதைக் கலைஞராக அறிமுகமானார்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தொடக்க காலத்திலிருந்து செயலாற்றிவந்த நதின் கார்டிமர் மறைந்த நெல்சன் மண்டேலாவின் நெருக்கமான நண்பர் வட்டத்தில் இருந்தார்.
2006-ம் ஆண்டில் அவர் வீட்டில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. நதின் கார்டிமரின் மறைந்த கணவர் சூட்டிய திருமண மோதிரமும் பறிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவத்துக்குப் பிறகும் பாதுகாக்கப்பட்ட ஆடம்பரக் குடியிருப்பு வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
நகரில் நிலவும் குற்றச் சம்பவங்களை முன்னிட்டுப் பேசும்போது, “குற்றம் செய்தவர்களுக்கான நியாயங்கள் என்னவென்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். வாய்ப்புகள் எதுவும் இல்லாத வறுமையில் உள்ள இளை ஞர்கள் அவர்கள். கல்வியும், பயிற்சியும் வேலைவாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று பத்திரிகையார்களிடம் கூறினார்.
ஒவ்வொரு தென்னாப்பிரிக்கரிடமும் நிறவெறி ஏற்படுத்திய பாதிப்புகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார் நதின் கார்டிமர். வெள்ளையின எழுத்தாளர்கள் கருப்பர்களைப் பற்றி எழுதவே முடியாது என்று மோஸ்தராகச் சொல்லப்படும் காலத்தில் அவர் தன் எழுத்து வாழ்வைத் தொடங்கினார். இரு இனத்தவர்களையும் சமதொலைவில் இருந்து துல்லியமாகப் பார்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
எழுத்தாளருடைய வார்த்தைகள் தனது சொந்த இன நலன்களுக்கு எதிராகக்கூடத் திரும்பக்கூடியவை என்பதையும், எழுத்து என்பது மனித குலத்துக்கான சேவை என்றும் தனது நோபல் பரிசு உரையில் அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னபடி விடுதலை மிக்க தென் ஆப்பிரிக்க சமூகம் என்ற லட்சியத்துக்காகக் கடைசி வரை பாடுபட்டார்.