கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம் இலங்கையின் முக்கியமான எழுத்தாளுமையான டொமினிக் ஜீவாவுக்கு அவருடைய 88வது பிறந்தநாளையொட்டிச் சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது.
2001-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டுவரும் இந்த விருதைத் தமிழின் முக்கியமான பங்களிப்பாளர்களான சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ். பொன்னுதுரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.
டொமினிக் ஜீவா யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு பிறந்தவர். குடும்பச் சூழலால் தொடக்கக் கல்வியுடன் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். இருந்தாலும் தன்னார்வத்தால் இலக்கியத்தில் தீவிரத்துடன் ஈடுபட்டார்.
இலங்கையில் தமிழ் நவீன இலக்கியம் செழிப்பதற்கான காரணகர்த்தாக்களில் ஒருவராகவும் விளங்கினார். தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஆகியவை இவரது முக்கியமான ஆக்கங்கள். தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார். இயல் விருது பரிசுக் கேடயமும், 2500 டாலர் பணப் பரிசும் கொண்டது.
கனடிய இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் சிறந்த புனைவுக்கான கெளரவ விருதுடன் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு, சிறந்த ஆங்கில மொழி பெயர்ப்பு, சிறந்த புனைவு, சிறந்த அபுனைவு, சிறந்த கவிதைத் தொகுப்பு, ஆகியவற்றுக்கும் விருதுகளை வழங்கி வருகிறது.
சி.மோகன், அனிருத்தன் வாசுதேவன், எஸ்.ஸ்ரீதரன், கீரனூர் ஜாகீர் ராஜா, எம். புஷ்பராஜன், இசை ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தமிழ்க் கணினித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவருபவர்களுக்கு வழங்கப்படும் ‘கணிமைக் கான சுந்தர ராமசாமி விருது’ இந்தாண்டு மணி மணிவண்ணனுக்கு வழங்கப்படவுள்ளது.