இலக்கியம்

மரணத்துக்கும் மறுபிறவிக்கும் நடுவே…

எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

மேன் புக்கர் விருது பெற்ற ஜார்ஜ் சாண்டர்ஸின் ‘லிங்கன் இன் த பார்டோ’ நாவலை முன்வைத்து

சென்ற ஆண்டு பால் பீட்டி என்ற அமெரிக்கருக்கு வழங்கப்பட்டதுபோலவே இந்த ஆண்டும் மேன் புக்கர் பரிசு ஜார்ஜ் சாண்டர்ஸ் என்ற அமெரிக்கருக்கு ‘லிங்கன் இன் த பார்டோ’ (Lincoln In The Bardo) நாவலுக்காக வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் - காமன்வெல்த் நாட்டு எழுத்தாளர்களுக்கே ஒதுக்கப்பட்டிருந்த இந்தப் பரிசுக்கு, 2014-லிருந்து அமெரிக்கர்களும் அனுமதிக்கப்படுவதால் மற்ற நாட்டு எழுத்தாளர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுவதாகப் புகார்கள் எழுகின்றன. ஆனால், இதற்காக ஜார்ஜ் சாண்டர்ஸின் சாதனையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆபிரஹாம் லிங்கனை மையமாக வைத்து இந்த நாவலை சாண்டர்ஸ் படைத்திருக்கிறார். இந்தக் கதை அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலகட்டத்தில், அதாவது 1860-களில் நிகழ்கிறது. சில உண்மைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட கதை. அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கனின் மகன் ‘வில்லி’ என்றழைக்கப்பட்ட வில்லியம் வாலஸ் 1862-ல், தனது 11-வது வயதில் கடுமையான டைஃபாய்டு காரணமாக இறந்துவிட்டான்.

அமெரிக்க உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்த சமயம். லிங்கனின் மன உளைச்சலும் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. அவரால் முழுமூச்சில் பொது வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போயிற்று. இதுதான் வரலாற்றுபூர்வமான செய்தி. இதை மையமாக வைத்து ஒரு கற்பனைக் கதையை சாண்டர்ஸ் பின்னியிருக்கிறார். காலப் பரிமாணம் உண்மையாக இருந்தபோதும், இடப்பரிமாணம் சற்று வித்தியாசமானது. கதை நிகழ்விடம் ஒரு பகுதி வெள்ளை மாளிகையாக இருப்பினும், இன்னொரு பகுதி கல்லறையைச் சார்ந்த தாகவும், ‘பார்டோ’ எனும் அமானுஷ்யமான இடமாகவும் இருக்கிறது. பார்டோ என்ற கருத்துரு திபெத்தியர்களுடையது. மனிதர்கள் இறந்து மறுபிறவி எடுக்கும் வரை, இறந்தவர்களின் உணர்வு ஆவியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் என்று திபெத்தியர்களால் நம்பப்படும் இடம் அது. இறந்தவருக்குத் தான் இறந்துவிட்டோமா அல்லது நோயில் படுத்திருக்கிறோமா என்று தெரியாமல் தவிக்கும் இடம் அது. அந்த இடம் இறப்புக்கும் இறப்புக்கு அடுத்த நிலைக்கும் இடைப்பட்ட வெளியாகக் கருதப்படுகிறது.

வில்லி கல்லறையில் இருக்கும்போது பார்டோவில்தான் இருக்கிறான். அதே கல்லறையில் அவனைப் போலவே பார்டோவில் இருக்கும் இன்னும் சிலரை அவன் சந்திக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவரின் கூற்றுடன் தான் நாவல் தொடங்குகிறது. ஹான்ஸ் வால்மன் என்னும் இந்தக் கதாபாத்திரம் ஒரு பதிப்பகத் தொழிலாளி. பொருத்தமற்ற திருமணத்துக்குத் தன் மனைவியைத் தான் உட்படுத்திவிட்டதாகக் குற்றவுணர்வு கொண்டிருந்த ஹான்ஸ் வால்மனை (அவருக்கு வயது 46, அவரது மனைவிக்கு வயது 18) அவரது மனைவியே வற்புறுத்தி உறவுக்கு அழைக்கும்போது தற்செயலாக ஒரு உத்திரம் அவர் தலையில் விழுந்து அவ்விடத்திலேயே இறந்துவிடுகிறார். அவரைப் போலவே இன்னும் பலர் வில்லியைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

வில்லியின் தந்தை ஆபிரஹாம் லிங்கன் வானளவிய அதிகாரம் படைத்தவர். தன் மகனின் கல்லறைக்கு அவர் அடிக்கடி வந்துபோவதைப் பார்த்த மற்ற பார்டோவாசிகள், அவரால் அவரது மகனை மரணத்திலிருந்து மீட்டுவிட முடியும் என்று நம்பினார்கள். அதேபோல் தங்களுக்கும் அவரால் உதவ முடியும் என்றும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையில்தான் வில்லியின் பக்கத்திலேயே அவர்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவனுக்கு நல்ல அறிவுரைகளும் வழங்குகிறார்கள். பார்டோவுக்கு வந்துவிட்டவர்கள் – குறிப்பாக இளவயதில் மரணமடைந்தவர் கள் – அங்கு அதிக நாள் தங்கிவிடக் கூடாது.

தங்கிவிட்டால் தீய ஆவிகளுக்கு அவர்கள் பலியாகும் அபாயம் ஏற்படும். எலிஸ் ட்ரெய்னர் எனும் பெண்மணிக்கு அதுபோல் ஏற்பட்டு அவளால் அடுத்த வாழ்க்கைக்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிலை வில்லிக்கு ஏற்படாமல் இருக்கும்பொருட்டு, வால்மனும் பெவின்ஸ் எனும் பாத்திரமும் லிங்கனுக்குள் புகுந்து, அவர் தன் மகனை விரைவிலேயே ஒரு முடிவு எடுக்கும்படி செய்வதற்காக முயல்கிறார்கள். ஏதோ ஓர் இனம்புரியாத உந்துதலால் லிங்கனும் கல்லறைக்குப் போய், சவமாய்க் கிடக்கும் தன் மகனிடம் பேசுகிறார். ஆனால், அவருக்குள் புகுந்திருந்தவர்களின் செய்தி வில்லிக்கு போய்ச் சேரும் முன்னரே, அவர் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடுகிறார். கடைசியில் பார்டோவிலேயே இருக்கும் பாதிரியார் ஒருவர் மூலம் வில்லியே அவன் தந்தைக்குள் கலந்து, தான் இனிமேல் உயிர்த்தெழ முடியாது என்ற முடிவுக்கு வந்து, அடுத்த பிறவிக்குள் புகுவதற்குச் சம்மதிக்கிறான். லிங்கனும் தன் பொது வாழ்க்கையில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

இந்நாவலில் பார்டோவில் தங்கியிருக்கும் பேயுருவான மற்றவர்கள் பேசும் உரையாடல்கள் நிறைய இடம்பெறுகின்றன. மொத்தம் 166 உருவங்கள் தங்களுடைய எண்ணங்களை வெளியிடுகின்றன. மூன்றாம் ரோஜர் பெவிஸ் எனும் பாத்திரத்துக்கு அவ்வப்போது நிறைய உடல் உறுப்புகளும் தோன்றுகின்றன. சில அத்தியாயங் கள் முழுவதும் வரலாற்று ஆவணத் தகவல்களே அதிகம் இடம்பெறுகின்றன.

மாபெரும் அரசியல் தலைவரான ஆபிரஹாம் லிங்கன் வெறும் அரசியல் தலைவராக மட்டுமன்றி, அனைத்து ஆசாபாசங்களும் நிறைந்த முழு மனிதராக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். உயிரினங்கள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் சம்பவமான மரணத்தைப் பற்றிய ஒரு சிந்தனையும் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது. எந்த வயதில் – அல்லது எந்த நிலையில் - இருப்பவராயினும், மரணம் ஒரு தவிர்க்க முடியாத சம்பவம். அதனை எதிர்கொள்ள வேண்டிய பக்குவம் வராத வரையில் பிரச்சினைகள் பெருகிக்கொண்டேதான் போகும்.

இந்நாவல், ஒரு புதிய முயற்சியின் வெற்றி. இதில் மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்கள், பேயுருக்களிடையே நடக்கும் உரையாடல்கள், வரலாற்று ஆவணச் செய்திகள், அரசு அறிவிப்புகள் என்று பல்வேறு விதமான பகுதிகள் இடம்பெற்று வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்துகின்றன. ஜார்ஜ் சாண்டர்ஸ் பல்வேறு மத நம்பிக்கைகளையும் பாரபட்சமின்றிக் கையாண்டு, நாவலின் தத்துவப் பரிமாணத்தை அதிகரிக்கச் செய்கிறார். சமீபகாலத்தில் வெளிவந்த முக்கியமான நாவல்களுள் ‘லிங்கன் இன் த பார்டோ’வும் ஒன்று என்று நிச்சயமாகக் கூறலாம்.

- எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, புதுவைப் பல்கலைக்கழக பிரெஞ்சுத் துறையின் முன்னாள் பேராசிரியர். தொடர்புக்கு: srakichena@gmail.com

SCROLL FOR NEXT