த
மிழில் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம். 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த நன்னிலம் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது இந்த நூல். அத்வைதத் தத்துவ நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவந்த சூழலில் ‘கைவல்ய நவநீதம்’ நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சென்றது. 1855-ல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நூல். ஆன்ம நிலையை விரும்பும் ஞான சாதகர்களுக்கு ரமண மகரிஷியால் முக்கியமாகப் பரிந்துரைக்கப்பட்ட நூல் இதுவே. விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி., தனது சுயசரிதையில் “கைவல்ய மெனும் கருத்துயர் நூலின் நன்பதம் தெரிந்தேன்” என்று இந்த நூலைக் குறிப்பிடுவார்.
தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய கைவல்ய சுவாமி கரூர் மவுனசாமி மடத்தில் தத்துவ விசாரணையில் ஈடுபட்டபோது பெரும்பாலான உவமானங்களை இந்த நூலிலிருந்து கையாண்டதால் ‘கைவல்ய சுவாமிகள்’ என்ற அழைக்கப்பட்டார். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கைவல்ய நவநீத உரைகள் தமிழில் வெளியாகின. 1942-ல் சென்னை வேதாந்த சங்கத்தின் சார்பாக கைவல்ய நவநீத மாநாட்டை நடத்தியவர் கோ. வடிவேல் செட்டியார். மத்திய தர, அடித்தட்டு மக்களிடையே சென்ற நூற்றாண்டில் கைவல்ய நவநீத வேதாந்த சபைகள் தமிழகம் முழுவதும் உருவாகி பஜனை மரபில் சிறந்தோங்கி இருந்துள்ளது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேதாந்த மடங்களின் செயல்பாடுகள் தொய்வடைந்தன.
தமிழகத்தில் மரபு வழியாகத் தமிழ் வழி வேதாந்தப் பாடம் சொல்லிக்கொடுக்கக்கூட யாருமற்ற இன்றைய சூழலில் தமிழ்நாடு அரசு சுகாதாரப் பணியில் மருந்தாளுநராகப் பணிபுரிந்த தியாகராஜன் (பிறப்பு 2-3-1955, இறப்பு 20-10-2016), தனது கணபதி பதிப்பகம் மூலம் கைவல்ய நவநீதம் சம்பந்தமான அனைத்து அரிய பழைய உரைகளைத் தேடிக் கண்டுபிடித்து மீள்பதிப்பு செய்து சுமார் 10,000 பிரதிகள் வரை இலவசமாகவே வழங்கியுள்ளார். இவர் பதிப்பித்து வெளியான கைவல்ய நவநீத உரைகள் குறிப்பாக, கோவிலூர் பொன்னம்பல ஞானதேசிக சுவாமிகள் உரை, பிறையாறு அருணாசல சுவாமிகள் உரை, ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் உரை, கோ. வடிவேல் செட்டியார் வசன வினா-விடை உரை, திருநாங்கூர் வாசுதேவானந்தா சுவாமிகள் உரை, போடிபாளையம் பழனியப்ப சுவாமிகள் உரை, உடையார்பாளையம் ஆறுமுக சுவாமிகள் உரை, புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆரணி குப்புசாமி முதலியார் உரை போன்ற பல உரைகளை மீள்பதிப்பு செய்து இலவசமாகவே வழங்கியவர். தமிழகமெங்கும் வேதாந்த மடங்களில் எங்கெல்லாம் குருபூசை நிகழ்கிறதோ தியாகராஜன் தானே புத்தகங்களைச் சுமந்து சென்று தத்துவ விசாரணையை அடைய விரும்பும் ஞானசாதகர்களுக்கு வழங்கிவருவார்.
கோ. வடிவேல் செட்டியார் காலத்துக்குப் பிறகு சுமார் 73 வருடங்கள் கழித்து சென்னை பாடியநல்லூரில் மூன்று நாள் கைவல்ய நவநீத மாநில மாநாடு கருத்தரங்கு ஒன்றை தியாகராஜன் சொந்தச் செலவில் நடத்தி முடித்தார். இந்த மாநாட்டு கருத்தரங்குக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களிடையே சென்று கள ஆய்வு செய்து சிதிலமடைந்த வேதாந்த சபைகளைக் கண்டறிந்து சுமார் 55-க்கும் மேற்பட்ட கைவல்ய நவநீத சபைகளின் அன்பர்களை ஒன்றுதிரட்டி இந்த மாநாடு மூலமாக ஒருங்கிணைத்தார். கைவல்ய நவநீத நூலாசிரியர்கள், உரையாசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் புகைப்படக் கண்காட்சியும் நடத்தினார். நன்னிலத்தில் கைவல்ய நவநீதம் படிக்கும் அன்பர்களுக்காக தாண்டவராயர் சமாதி அருகே தமது சொந்த செலவில் நிலமனை பட்டா ஒன்றையும் வாங்கினார். புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆரணி குப்புசாமி முதலியாரின் கைவல்ய நவநீத உரையை மீள்பதிப்பு செய்து அச்சிட்டு அச்சகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்த வேளையில் விபத்தில் சிக்கி தியாகராஜன் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.
தியாகராஜன் விளம்பர மோகத்தை நாடிய மனிதரும் அல்ல; பெரிய தொழிலதிபரும் இல்லை. லாபநோக்கத்துக்காகச் செயல்பட்டவரும் கிடையாது. அவர் பதிப்பித்த சிறுநூல், குறுநூல், பெருநூல் உட்பட 120-க்கு மேற்பட்ட நூல்களில் அவரது பெயரை எங்குமே காண முடியாது. பதிப்புரையில், ‘எல்லாம் அவன் செயல்’ என்று மட்டுமே இருக்கும்.
இத்தனைக்கும், தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணிபுரிந்தவர் தியாகராஜன்; மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. தனது செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் வாழ்ந்தவர் தியாகராஜன். அரசு ஊழியராகப் பணி செய்துகொண்டிருந்தபோது, செங்குன்றம் அருகேயுள்ள கண்டிகைபூதூர் கிராமத்தைத் தனி ஒருவராகத் தத்தெடுத்துக்கொண்டார். அந்தக் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் தனது மேற்பார்வையில் கொண்டுவந்தார். சின்ன சேலத்தில் பிறந்த தியாகராஜனுக்கு, கண்டிகைபூதூர் கிராம மக்கள் தங்கள் நன்றியைக் காட்டும் விதமாக அவர் இறப்புக்குப் பிறகு தங்கள் ஊரிலேயே ஓர் இடத்தில் அவருக்கு சமாதி அமைத்துள்ளனர்.
எத்தனையோ மடங்கள் வருமானம் ஈட்டக்கூடிய அளவுக்கு சொத்துக்கள் வைத்திருந்தும், அழிந்துபோகும் நிலையில் உள்ள நூல்களை அவை மீள்பதிப்பு செய்வதில்லை. சாமானியரான தியாகராஜன் எந்த வித விளம்பரமும் நன்கொடையும் இன்றி தனது சொந்த செலவில் அரிய நூல்களைப் பதிப்பித்து இலவசமாகவே வெளியிட்டார்.
தனக்கு புகழ், பாராட்டு கிடைக்க வேண்டும் என இம்மியளவுகூட தியாகராஜன் எண்ணியதில்லை. அரிய நூல்களை தேடிக் கண்டுபிடித்து, பதிப்பித்து இலவசமாக மட்டுமே வெளியிட்டவர். நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கு, எவ்வித விளம்பரமுமின்றி ஏராளமான உதவிகளை, குறிப்பாக மருத்துவ உதவிகளைச் செய்த மனிதநேயர் அவர். எங்கேயோ ஒளிந்துகிடந்த அரிய கைவல்ய நவநீதப் பதிப்புரைகள் மறுபடியும் நமக்குக் கிடைக்கச் செய்த தியாகராஜனின் நினைவுகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும்!
- ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின்நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: murugan_kani@yahoo.com
20-10-2016: தியாகராஜனின்முதலாம் ஆண்டு நினைவுதினம்.