தமிழக வாசகர்களின் உற்சாக வருடாந்திரத் திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சி வாசகர்கள் எண்ணிக்கை, வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, விற்பனையான தொகை என எல்லா விதங்களிலும் இதுவரை இல்லாத புது உச்சத்தைத் தொட்டு புதன்கிழமையோடு நிறைவடைந்தது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 37-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரமாண்ட புத்தகக் காட்சியில் 435 தமிழ்ப் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 ஊடகப் பதிப்பாளர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டின் விற்பனையைத் தாண்டும் சென்னைப் புத்தகக் காட்சி, சில ஆண்டுகளில் சொதப்புவதும் உண்டு. இந்த ஆண்டோ எதிர்பார்ப்பைத் தாண்டியதுடன் புது உச்சத்தையும் தொட்டது. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வந்திருந்தனர்; தோராயமாக, ரூ. 25 கோடி மதிப்புள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றிருக்கின்றன.
“இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு புது வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது; வாசகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப அடுத்த கட்டத்தை நோக்கி இதைச் சங்கம் எடுத்துச் செல்லும்” என்று சங்கத்தின் செயலர் கே.எஸ்.புகழேந்தி ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்றது எந்த அளவிற்கு நல்ல செய்தியோ, அதே அளவுக்கு எச்சரிக்கையாக அணுக வேண்டிய செய்தி: இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி 19-ம் தேதி மட்டுமே 1.5 லட்சம் பேர் வந்தனர். உண்மையில், இவ்வளவு பெரிய ஜனத்திரளின் நடுவே ஒரு சின்ன அசாம்பவிதம் நடந்தால் அதை எதிர்கொள்ள இப்போது திட்டமிடும் கட்டமைப்பு காணவே காணாது.
வாசகர்கள் அட்சயப்பாத்திரமா?
ஒவ்வொரு ஆண்டும் கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை உயர்ந்துகொண்டேபோவது, வாசகர்களிடம் அதிருப்தியையே உருவாக்கும். நியாயமான உணவு விலையை நிர்ணயுங்கள்.
மூச்சு முட்டுகிறது
கூட்டம் அதிகமான நாட்களில் உள்ளே கடுமையான புழுக்கத்தை வாசகர்கள் உணர்ந்தார்கள். பலர் ஓரிரு வரிசையோடு புத்தகக் காட்சியைவிட்டு வெளியேறினர். வளாகத்தை இன்னும் விரிவாக்கி, நான்கு புறங்களும் அருகருகே வாசல்களை அமைத்து, கூடுதல் காற்றோட்டத்துக்கு வழிசெய்யுங்கள்.
மாபெரும் சூழல் கேடு
ஆகப் பெரும்பான்மையான பதிப்பகங்கள் இன்னமும் பாலிதீன் பைகளைப் போட்டே புத்தகங்களைக் கொடுக்கின்றன. 12 நாட்களில் 10 லட்சம் வாசகர்கள் கைகளிலும் குறைந்தது ஒரு பாலிதீன் பை என்றால்கூட 10 லட்சம் பாலிதீன் பைகள். எத்தனை பெரிய கேடு? அறிவுசார் துறை என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் என்ன? பாலிதீனுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தில் ஏற்பாட்டாளர்களே துணிப்பை வழங்கலாம். பையின் இரு பக்கங்களிலும் விளம்பரம் அச்சிட்டால், இலவசமாகக் கொடுக்கலாம்.
புஸ் கார்டுகள்
கூட்டம் அதிகமாகிவிட்டால், ‘கிரெடிட் கார்டுகள்’, ‘டெபிட் கார்டுகள்’ பயனற்றுவிடுகின்றன. ஏ.டி.எம்-கள் எண்ணிக்கை போதவில்லை. கவனம் வேண்டும்.
அதிகம் விற்ற 10 புத்தகங்கள்
1. ஆறாம் திணை - கு.சிவராமன் - விகடன் பிரசுரம்
2. அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் - கண்ணதாசன் பதிப்பகம்
3. கொற்கை - ஜோ டி குரூஸ் - காலச்சுவடு பதிப்பகம்
4. இது யாருடைய வகுப்பறை? - ஆயிஷா நடராஜன் - பாரதி புத்தகாலயம்
5. வெள்ளை யானை - ஜெயமோகன் - எழுத்து பிரசுரம்
6. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - என்சிபிஹெச்
7. கிமு – கிபி - மதன் - கிழக்குப் பதிப்பகம்
8. பூமித்தாய் - கோ.நம்மாழ்வார் - இயல்வாகை
9. மழைக்காடுகளின் மரணம் - நக்கீரன் - பூவுலகின் நண்பர்கள் வெளியீடு
10. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - எஸ்.ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம்