அண்மையில் `பவன்ஸ் தமிழ் நாடகத் திருவிழா'வின் இறுதி நாளில் எஸ்.எல்.நாணுவின் எழுத்து, இயக்கத்தில் `ஜுகல்பந்தி' நாடகம் அரங்கேறியது. பல விதமான இசை வாத்தியங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கில் இசை நிகழ்ச்சியை வழங்குவதற்குப் பெயர் `ஜுகல்பந்தி'. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம் இருந்தாலும், அன்பும், உண்மையும் இருந்தால் ஒவ்வொரு குடும்பமும் இசை மயமாகத்தான் இருக்கும் என்பதை நகைச்சுவையோடு கடத்தியது இந்நாடகம்.
முதியவர்கள் மனம் வருந்துவதைப் பார்க்க சகிக்காத மனம் கொண்ட நந்தினி, மனைவி, அம்மா நலன்களில் அக்கறையோடு இருக்கும் விக்னேஷ், வீட்டிற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று காத்திருக்கும் லலிதா, இந்தக் குடும்பத்துக்கு வேண்டாத விருந்தாளியாக வந்து சேரும் சிவராமன் (காத்தாடி ராமமூர்த்தி), இந்தப் பாத்திரங்களின் ஸ்ருதி பேதம், எப்படி ஒரே ஸ்ருதியில் சங்கமிக்கின்றன என்பது கதை.
குடும்பத்தில் ஒவ்வொருவரிடமும் ஒரு ரகசியம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்கிறார் சிவராமன். அதை உடைக்க அவர் தேர்ந்தெடுக்கும் உபாயத்தால் ரகசியம் வெளிப்பட்டதா? என்பதை சிரிக்கச் சிரிக்க நாடகமாக்கி இருக்கிறார் எஸ்.எல்.நாணு.
மருமகள் நந்தினி (அனு சுரேஷ்) மகன் விக்னேஷ் (சாய் பிரசாத்), விக்னேஷின் அம்மா லலிதா (கீதா நாராயணன்) ஆகியோரிடம் இயல்பான நடிப்பு வெளிப்பட்டது. மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக ரசிகர்களுக்கு அறிமுகமாகும் சிவராமன் (காத்தாடி ராமமூர்த்தி எனும் இந்த 84 வயது இளைஞரின் வசன உச்சரிப்பு நேர்த்திக்கும், டைமிங்கிற்கும் ஹேட்ஸ்-ஆஃப்) பேசும் ஒவ்வொரு வசனமும் சரவெடி. "கடைசி ரெண்டு பால்ல 10 ரன் அடிக்கிறோம்" என்னும் காலத்துக்கேற்ற வசனங்களில் இளைஞர்களுக்கு சவால் விடுகிறார் காத்தாடி.
சைதை குமாரின் கலையும் மயிலை பாபுவின் உறுத்தாத ஒளி அமைப்பும் காட்சிகளைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தன. ஒரு குடும்பம். சில குழப்பங்கள், சில தெளிவுகள் என காலத்துக்கேற்ற ரசனையான நாடகத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.