இலக்கியம்

கிராமத்து வாடைகள்!

செய்திப்பிரிவு

அத்தை மகனைப் பார்க்கும்பொழுது வரும் கிராமத்து வெட்கம்

சண்டையிட்டுக் கொண்டாலும் சாவில் கலந்துகொள்ளும் உறவுகள்

அடைக்காத பெரிய கதவுகள்

அணையாத பெருஅடுப்புகள்

சாணி தெளித்த வாசல்கள்

ஊரைக்கூட்டும் மஞ்சள் நீராட்டு விழாக்கள்

நீளமான ஒலிபெருக்கிகள்

சூடாக சொம்பில் கறக்கும்பால்

காலையில் கூவும் சேவல்

பம்பு செட்டில் குளிக்கும் பச்சைக் கிளிகள்

மேய்ச்சலுக்காகப் போகும் எருமை மாடுகள்

அவை போடும் சாணியில் தட்டப்படும் வறட்டிகள்

எரிந்த வறட்டியின் சாம்பலில் பல் தேய்க்கும் ருசி

பயிர்களுக்காக சாலையின் இரு புறமும் போடப்படும் எருக்குழிகள்

தாவணி போடச் சொல்லிக் கொடுத்த பல் போன கிழவி

வெற்றிலை இடிக்கும் உரல்

அரை மணிக்கொருதரம் நேரத்தைச் சொல்லும் புகை வண்டியின் சத்தம்

பேய்க் கதைகள் சொல்லும் பிள்ளைமடமும், பனையங்குளமும்

முள் குத்தியவுடன் உடனே கிடைக்கும் எருக்கம்பால்

கண்ணில் தூசி விழுந்தவுடன் கிடைக்கும் தாய்ப்பால்

மணக்க மணக்கமசாலா அரைக்கும் அம்மிக்கல்லும், ஆட்டு உரலும்

பூட்டிக் கிழவி செய்து தந்த சோளக் காடி

வழி நெடுகிலும் வாயில் எச்சில் ஊற வைக்கும் புளியமரங்கள்

காக்கை தின்று விட்டுப் போடும் வேப்பம்பழக் கொட்டைகள்

அந்தக்கொட்டைகளைப் பொறுக்கும் சட்டையில்லாச் சிறுமிகள்

பல்லாங்குழி ஆடிக்கொண்டே -

பக்கத்து வீட்டு அண்ணனைப் பார்க்கும் தாவணி போட்ட அக்காக்கள்

இளைப்பாறும் திண்ணைகள்

காலம் காலமாக கதைகள் சொல்லும் சுமைதாங்கி

கோயில் கொடையில் அடிக்கும் வில்லுப்பாட்டும் கும்மியும்

அர்த்த ராத்திரியில் வரும் கோடாங்கி...

இப்படி கிராமத்து வாடைக் காற்றுகள் என்னைக் குளிர வைத்தாலும்

மேலூர், கீழூர் என்று பாகுபாடு பார்க்காத -

நகரத்தை விரும்பும் பைங்கிளி நான்.

தென்காசிப் பைங்கிளி - தொடர்புக்கு ardicdxclub@yahoo.co.in

வலைப்பதிவுத் தளம்>http://tamilpaingili.blogspot.in

SCROLL FOR NEXT