கீழடியில் உலக தமிழர் ஒற்றுமை பொங்கல் விழாவில் பங்கேற்றோர்.
திருப்புவனம்: கீழடியில் நடைபெற்ற உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் விழாவில், 250 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் 55 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கல் விழா நேற்று நடந்தது. பொங்கல் விழாவுக்கு, தி ரைஸ் சங்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் தலைமை வகித்தார்.
சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், முன்னாள் ஊராட்சித் தலைவர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 55 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய உடை அணிந்திருந்த இவர்கள், 250-க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மதுரை பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, தென்னிந்திய திருச்சபை மதுரை-ராமநாதபுரம் மண்டல ஆயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், பாலபிரஜாபதி அடிகளார், திருவடிக்குடில் சுவாமிகள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் காஜா முயினுத்தீன் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில், கீழடி அகழாய்வுக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகள் கவுர விக்கப்பட்டனர்.