படம்: மெட்டா ஏஐ
“ஐந்து நிமிஷம்தான் ஃபோன் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு செல்ஃபோனை எடுத்தவர், பின்னர் நேரத்தைப் பார்க்கும்போது அரை மணி நேரம் கடந்துவிட்டிருப்பதைப் பார்த்து, ‘இவ்வளவு நேரம் எப்படிப் போச்சு?’ என்று ஆச்சரியப்படுவார். இது பெரியவர்களுக்கு மட்டும் நடப்பதில்லை. ஸ்மார்ட் ஃபோன், டேப்லட், லாப் டாப், டிவி, கேமிங் டிவைஸ் என ‘ஸ்கிரீன்’கள் குழந்தைகளின் வாழ்க்கையிலும் இயல்பான ஒன்றாகிவிட்டன.
குழந்தைகளுக்கு தகவல்கள், கல்வி, கிரியேட்டிவிட்டி, கம்யூனிகேஷன் என பற்பல வாய்ப்புகளையும் டெக்னாலஜி தருகிறது. இங்கே எழ வேண்டிய மிக முக்கிய கேள்வி, ‘ஒரு குழந்தை ஸ்கிரீனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறது?’ என்பதைக் காட்டிலும், அந்த ஸ்க்ரீனானது குழந்தையின் வாழ்க்கையில் என்ன வேலை செய்கிறது?’ என்பதே.
‘இப்பவே தெரிஞ்சாகணும்!’
முன்பு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், ஆசிரியரிடம் கேட்க வேண்டும், பெற்றோரிடம் பேச வேண்டும், புத்தகத்தைத் தேட வேண்டும், சில நேரம் பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும். இன்று ஒரு கேள்வியை டைப் செய்தால் சில விநாடிகளில் பதில் கிடைக்கிறது. இந்த வேகம் ஒரு பெரிய வசதி. ஆனால், எல்லாவற்றையும் உடனடியாகப் பெறுவதற்குப் பழகும்போது, உடனடியாகக் கிடைக்காத விஷயங்களைக் கையாளும் நிதானத்தை குழந்தைகள் தனியாக வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
டெக்னாலஜி ஒரு ஸ்டடி டைம்டேபிளை உருவாக்கிக் கொடுக்கலாம். ஒரு கோர்ஸை கண்டுபிடித்துக் கொடுக்கலாம். ஆனால், படிப்பதைத் தொடர்ந்து செய்வது, தோல்வியை எதிர்கொள்வது, மீண்டும் முயற்சி செய்வது போன்ற உளவியல் சார்ந்த திறன்களை குழந்தைக்கு டெக்னாலஜியால் உருவாக்கித் தர இயலாது.
‘ஸ்கிரீன்’ என்பது ஒரு ‘எஸ்கேப்’ நிலை ஆகும்போது, ஸ்க்ரீன் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள நேரத்தை மட்டும் எண்ணுவது போதாது.
ஹோம்வொர்க் செய்ய மனமில்லை; போரடிக்கிறது; யாரோ சொன்ன வார்த்தையால் வருத்தமாக இருக்கிறது; தனிமை உணர்வு ஏற்படுகிறது. அப்படியெனில், ‘கொஞ்சம் ஃபோன் பார்க்கலாம்’ என்று ஸ்கிரீனை நாடத் தொடங்கலாம்.
ஒரு வீடியோ, இன்னொரு வீடியோ, ஒரு ரீல், அப்புறம் இன்னொரு ரீல்...
‘இன்னும் ஒண்ணு மட்டும்…’
இங்கே ஸ்கிரீன் பொழுதுபோக்கைத் தாண்டி Boredom, Frustration, Sadness போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தவிர்க்கும் ஒரு வழியாக மாறக்கூடும். இதனால் குழந்தை ஃபோனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறது என்பதோடு, ஃபோன் இல்லாதபோது தன்னுடைய உணர்வுகளை எப்படி கையாளுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
‘இன்னொரு வீடியோ மட்டும்…’
இந்தப் பிரச்சினைக்கு குழந்தையின் சுயக்கட்டுப்பாடு (self-control) மட்டும் காரணம் இல்லை. டிஜிட்டல் தளங்களின் வடிவமைப்புகளில் நம்முடைய கவனத்தை தொடர்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் அம்சங்கள் இருக்கின்றன.
ஒரு வீடியோ மொக்கையாக இருக்கலாம்; அடுத்தது நம்மைச் சிரிக்க வைக்கலாம்; இன்னொன்று நமக்குப் பிடித்ததாக இருக்கலாம். ரிவார்டு எப்போது கிடைக்கும் என்று தெரியாத இந்த பேட்டர்னை உளவியலில் ‘இன்டர்மிட்டென்ட் ரீஇன்ஃபோர்ஸ்மென்ட்’ (Intermittent reinforcement) என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, குழந்தையிடம் “போனை கீழே வை” என்று சொல்வதுடன் ‘நோட்டிஃபிகேஷன்’, ‘ஆட்டோப்ளே’ மற்றும் போன் பயன்படுத்தும் இடம் போன்றவைகளையும் பெரியவர்கள் கவனிக்க வேண்டும்.
‘ஸ்கிரீன்’ தரும் தாக்கம் என்ன?
நமக்கும் எளிதில் காணக் கிடைக்கும் ‘ஸ்கிரீன்’ நமக்கு உலகத்தையே காட்டுகிறது. ஆனால், ஒரே மாதிரியான கன்டென்ட்களை தொடர்ந்து பார்க்கும்போது, அதே வகையிலான ட்ரெண்ட் வீடியோக்கள், சினிமா - அரசியல் - மோட்டிவேஷன் என எதைப் பார்க்கிறோமே அதே வரையறைகள் மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றி வரத் தொடங்குகின்றன. அதுதான் டிஜிட்டல் மீடியா அல்காரிதம்.
அப்போது, ‘குழந்தைக்கு என்ன பிடிக்கும்?’ என்பது மட்டுமல்ல, ‘குழந்தைக்கு என்ன பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து காட்டப்படுகிறதா?’ என்ற கேள்வி நமக்கு எழ வேண்டியதும் முக்கியம்.
நம் குழந்தைகளின் தனித்துவங்களை டெக்னாலஜி நேரடியாக அழிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், சோஷியல் மீடியா அல்காரிதங்களால் உருவாக்கப்படும் ‘மாஸ் கன்ஸம்ப்ஷன்’ (Mass Consumption) என்பது குழந்தைகளின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தனி அடையாளம் ஆகியவற்றை ஒரே மாதிரியான பாதையில் வடிவமைத்துவிடக் கூடும்.
இந்தச் சூழலில், பெற்றோரும் பெரியவர்களும் என்ன செய்யலாம்?
முதலில், ஸ்கிரீன் நேரத்தை மட்டும் கணக்கிடாமல், அதன் நோக்கத்தைக் கவனியுங்கள். குழந்தை எப்போது போனைத் தேடுகிறது, எதற்காக பயன்படுத்துகிறது, என்னென்ன ‘கன்டென்ட்’ பார்க்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அடுத்து, எல்லாவிதமான திரைப் பயன்பாட்டையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டாம். ஆன்லைன் வகுப்புகள், நண்பர்களுடன் பேசுவது, படிப்பு சார்ந்த வீடியோக்கள், கேமிங், நோக்கமின்றி ஸ்க்ரால் செய்வது போன்றவைகளின் பின்னுள்ள உளவியல் செயல்பாடுகள் வேறுபடும்.
மேலும், ஃபோனை எடுத்துவிட்டால், அதற்குப் பதிலாக குழந்தையின் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். விளையாட்டு, உரையாடல்கள், பொழுதுபோக்குப் பழக்கங்கள், வாசிப்பு, அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ், ஃபேமிலி டைம் முதலானவற்றுடன் சில நேரங்களில் போர்டம் (Boredom) கூட தேவை.
இதில் மிகவும் முக்கியமானது பெற்றோர், பெரியவர்களின் பிஹேவியர். “ஃபோனை வைக்கிறியா?” என்று குழந்தையிடம் சொல்லிக்கொண்டே நாமே உணவு நேரத்தில் கூட செல்ஃபோன் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?
நாம் உதிர்க்கும் வார்த்தைகளைவிட, நம் நடத்தைகளில் இருந்துதான் ஒரு குழந்தை அதிகம் கற்றுக்கொள்ளும்.
டெக்னாலஜி வளரும்போது பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
தொழில்நுட்பம் இன்னும் வேகமாகவே வளரப்போகிறது. டெக்னாலஜி மாறும்; குழந்தைகளும் மாறுவார்கள். ‘ஏஐ, பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்கள் வளரும்போது, தகவலில் ஓட்டமும், அல்காரிதங்களின் முடிவெடுக்கும் பங்கும் அதிகரிக்கக் கூடும்’ என்று எதிர்காலம் குறித்து தனது ‘ஹோமோ டியூயஸ்’ (Homo Deus) எனும் நூலில் விவரிக்கிறார் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari). குறிப்பாக, மனிதர்களிடம் இருந்து நெட்வொர்க்டு அல்காரிதங்களுக்கு ‘அதிகாரம்’ நகரக் கூடிய சாத்தியத்தையும் அவர் முன்வைக்கிறார்.
எனவே, இதைப் பற்றி அச்சமடைவதற்குப் பதிலாக, ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தொழில்நுட்பம் என்பது இனி நம் வாழ்க்கைக்கு வெளியே இருக்கப்போவதில்லை. குழந்தைகளும் டெக்னாலஜிக்கு ஏற்ப தங்களது அன்றாட வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வார்கள்.
மனிதர்கள் எப்போதுமே மாறும் சூழல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.
ஆக, ‘அதிநவீன டெக்னாலஜியால் குழந்தைகள் தங்களது இயல்புத் தன்மைகளை இழந்துவிடுவார்கள்’ என்று அஞ்சுவதை விட, ‘டெக்னாலஜி வளரும்போது குழந்தைகளின் எந்த மாதிரியான உளவியல் சார்ந்த திறன்களை மேம்படுத்த துணைநிற்க வேண்டும்?’ என்பதற்கான விடையை நோக்கியே நாம் நகர வேண்டும்.
அவற்றில் முக்கியமானவை:
> கவனம் செலுத்துதல்
> சலிப்பைத் தாங்குதல்
> உணர்ச்சிகளைக் கையாளுதல்
> மனநிறைவுக்காக பொறுமை காத்தல்
> நேரடி உறவுகளைப் பேணுதல்
> தகவல்களை பகுத்தறிதல்
> கருத்துகளை சிந்தித்து உள்வாங்குவதல்
இத்தகைய உளவியல் ரீதியிலான திறன்களை குழந்தைகள் மேம்படுத்திக் கொள்ளும்பட்சத்தில், தொழில்நுட்ப பாய்ச்சல்களும், டிஜிட்டல் திரைகளும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமே தவிர, தடைகளாக இருக்காது என நம்பலாம்.
எனவேதான், ‘ஸ்கிரீன்’ பிரச்சினையில் “எவ்வளவு நேரம்?” என்ற கேள்வியோடு நின்றுவிடாமல், “அந்த நேரத்தில் குழந்தை எதை இழக்கிறது அல்லது எதைப் பெறுகிறது?” என்பற்கான விடையைக் கண்டடைய வேண்டும்.
அதாவது, வளரும் தொழில்நுட்பச் சூழலில், பொறுமை - நிதானம், நீடித்த கவனம், உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல், சுயமாக சிந்தித்தல், பிறர்நிலையில் இருந்து ஒரு விஷயத்தை அணுகும் பண்பு, உறவுகளைப் பேணுதல், தோல்விகளைக் கடந்து போகும் பக்குவம் முதலான திறன்களை குழந்தைகள் பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தத் திறன்களைப் பெறுவது ஒரே நாளில் சாத்தியமல்ல. இதற்கு நீண்ட காலத் திட்டமிடலும், நிதானமான அணுகுமுறையும் தேவை.
குழந்தைகளிடம் இருந்து ‘ஸ்கிரீன்’களை மறைப்பதில் எவ்வித பலனும் இல்லை. மாறாக, அந்தத் திரைகளுடன் ஆரோக்கியமாக வாழப்பழகுதலே நன்மை பயக்கும். அதன்படி, நாம் குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்வது ‘screen-free childhood’ அல்ல... ‘டெக்னாலஜி’ இல்லாதபோதும் தங்களைத் தாங்களே கையாளத் தெரிந்த குழந்தை - பதிமப் பருவம்தான் என்பதை மனதில் கொள்க.
ஆக, டெக்னாலஜியை பக்க பலமாக வைத்துக்கொண்டே மனித இயல்புகளை இழக்காத வாழ்க்கையை நோக்கியதாகவே நமது பயணம் இருக்க வேண்டும்.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com