உலக தாய்ப்பால் வார விழா
சென்னை: சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் 41.8 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது என்று மருத்துவமனை சமூக குழந்தைகள் நல நிலையம் இயக்குநர் ஜே.கணேஷ் தெரிவித்தார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தைகள் நல நிலையம் சார்பில் ‘உலக தாய்ப்பால் வார விழா’ நடைபெற்றது. மருத்துவமனை டீன் ஏ.அரவிந்த் விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் பங்கேற்ற விழிப்புனர்வு மனித சங்கிலி பேரணியை தொடங்கி வைத்த டீன், தாய்ப்பால் வார விழா கையேட்டை வெளியிட்டு, தாய்ப்பால் நன்மைகள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சென்னை விமான நிலையம், கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. சமூக குழந்தைகள் நல நிலைய இயக்குநர் ஜே.கணேஷ் கூறியது: “உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் தாய்ப்பால் ஊட்டுதலை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் ஆதரவளித்தல் ஆகும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், நல்வாழ்வுக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியமாகும். புள்ளிவிவரங்கள் அடிப்படையில், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டப்பெறும் குழந்தைகளின் விகிதம் 41.8 சதவீதமாக உள்ளது. முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் பெறும் குழந்தைகளின் விகிதம் 63.7 சதவீதம் ஆகும்.
அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் "நிலையான வாழ்வின் தொடக்கத்திற்கு தாய்ப்பால் வெற்றி தரும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவோம்" என்ற கருத்துடன் உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
முதல் நாளில் மனித சங்கிலி வடிவில் விழிப்புணர்வு நடந்தது. 2-வது நாளில் தாய்ப்பால் குறித்து தாய்மார்களுடன் கலந்துரையாடல், 3-ம் நாளில் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், 4-ம் நாளில் தாய்ப்பால் ஆலோசகரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி, 5-ம் நாளில் அங்கன்வாடி பணியாளர்களின் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு, 6-ம் நாளில் செவிலியர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் பங்கேற்கும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் கூடிய நிறைவு விழா நடைபெறுகிறது” என்று அவர் தெரிவித்தார்.