படம்: மெட்டா ஏஐ
“ஸ்கூலுக்குப் போனால் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்”, “குழந்தைகள் என்றால் கிண்டல் செய்வார்கள்”, “நீ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே”, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அந்தப் பையன நீ அடிச்சிருப்ப?” என்ற இத்தகைய வார்த்தைகளைப் பெற்றோர்களும் பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்போம்.
ஆனால், நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் இந்தக் கிண்டல்கள், அல்லது அவர்களின் தகாத நடத்தைகள் ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையையும், தன்னைப் பற்றிய புரிதலையும் நீண்ட காலத்துக்கு பாதிக்கலாம்.
ஒரு குழந்தையின் தோற்றம், உடல் அமைப்பு, நிறம், பேசும் விதம், பாலின வெளிப்பாடு, பழக்கவழக்கங்கள் அல்லது நடத்தை என ஏதாவது ஒன்றைக் காரணமாக வைத்து மற்றொரு குழந்தை தொடர்ந்து கேலி செய்வது, அவமானப்படுத்துவது அல்லது ஒதுக்குவது ‘புல்லியிங்’ (Bullying) ஆக இருக்கலாம். பொதுவாக, இதில் மீண்டும் மீண்டும் நிகழும் தீங்கு விளைவிக்கும் நடத்தை மற்றும் அதிகாரத்தில் உள்ள சமமின்மை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பள்ளிப் பருவத்தில் கிடைக்கும் வார்த்தைகள் வளர்ந்த பிறகும் தொடரலாம் என்பதை மனதில் கொள்க.
“நீ ரொம்ப ஒல்லியா இருக்கிறாய்”, “உன்னுடைய நிறத்தைப் பாரு”, “நீ ஏன் இப்படி நடக்கிறாய்?” என்று பள்ளியில் கேலி செய்யப்பட்ட அனுபவம் பலருக்கும் இருக்கலாம். அந்தச் சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும், சிலருக்கு அது இன்றும் தங்களைப் பற்றிய எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தைப் பருவமும் பதின்ம பருவமும் தன்னடையாளம், தன்னம்பிக்கை, சமூக உறவுகள் ஆகியவை வளர்கின்ற முக்கியமான காலகட்டங்கள். இந்தக் காலத்தில் தொடர்ந்து கேலி செய்யப்படுவது, பிறர் தன்னை எப்படி மதிப்பிடுவார்கள் என்ற பயத்தையும், நிராகரிக்கப்படுவோம் என்ற கவலையையும் உருவாக்கலாம்.
சில குழந்தைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம். சிலர் கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்கலாம். இன்னும் சிலர் மற்றவர்களுடன் பழகுவதையே தவிர்க்கலாம்.
அதேநேரத்தில், ஒவ்வொரு குழந்தையும் இத்தகைய அனுபவங்களை ஒரே மாதிரியாக எதிர்கொள்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவும் சூழலும் முக்கியமானவை.
‘புல்லியிங்’ செய்யும் குழந்தையை எப்படிப் புரிந்துகொள்வது?
ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை ஏன் காயப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். சிலர் நண்பர்கள் மத்தியில் தங்களுடைய செல்வாக்கை அதிகரிப்பதற்காகவோ, அதிகாரத்தைக் காட்டுவதற்காகவோ மற்றவர்களைக் கேலி செய்யலாம். சிலர் தங்களுக்குக் கிடைக்காத அங்கீகாரத்தை, மற்றவர்களைத் தாழ்த்துவதன் மூலம் பெற முயற்சிக்கலாம்.
உதாரணமாக, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஒரு மாணவரைக் குறிப்பிட்ட குழுவினர் தொடர்ந்து கேலி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழுவில் உள்ள சிலருக்கு ஆங்கிலத்தில் பேசுவதில் தயக்கமோ தாழ்வு மனப்பான்மையோ இருக்கலாம்.
அந்த மாணவரின் திறமையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவரைக் கேலி செய்வதன் மூலம் தங்களுடைய அசவுகரியத்தை மறைக்க முயற்சிக்கலாம். இது ஒரு சாத்தியமான காரணம் மட்டுமே. உண்மையில் அந்தக் குழந்தைகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் நாம் முடிவுக்கு வர முடியாது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ‘புல்லியிங்’ என்பது வெளிப்படையாகத் தெரியும் நடத்தையுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்பதுதான். அங்கீகாரம், குழுவில் ஓர் இடம், அதிகாரம் அல்லது தன்னம்பிக்கை போன்ற தேவைகள் எப்படிப் பூர்த்தியாகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் தேவைகள் பூர்த்தியாகாதபோது அது மற்றவர்களைக் காயப்படுத்தும் என்ற கட்டாயமில்லை. ஆனால், அந்தக் குழந்தை தனது உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிகளைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், சில சூழல்களில் தவறான நடத்தையைத் தேர்ந்தெடுக்கலாம்.
எனவே, ‘புல்லியிங்’ செய்கிற குழந்தையை உடனடியாக ஒரு தவறான குழந்தை என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, அதன் நடத்தைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். அதற்காக உளவியல் ஆலோசகரின் உதவியையும் நாடலாம். அதே நேரத்தில், காரணங்களைப் புரிந்துகொள்வது பிறரைக் காயப்படுத்தும் நடத்தையை ஏற்றுக்கொள்வதாகாது. அந்த நடத்தையை நிறுத்துவதும், அதற்கான பொறுப்பை உணர்த்துவதும் அவசியம்.
பெரியவர்களுடனான உறவுகள் ஏன் முக்கியம்?
குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நம்பகமான பெரியவர்களுடனான உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் மரியாதையாக நடந்துகொள்ளவும் இந்த உறவுகள் உதவுகின்றன.
Hold On to Your Kids என்ற புத்தகத்தில், Gordon Neufeld மற்றும் Gabor Maté ஆகியோர் குழந்தைகள், பெற்றோர் போன்ற பெரியவர்களுடனான இணைப்பிலிருந்து விலகி, நண்பர்கள் குழுவின் அங்கீகாரத்தை முதன்மையாகத் தேடத் தொடங்கும் நிலையைப் பற்றி விவாதிக்கிறார்கள். நண்பர்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குழந்தைகள், சில நேரங்களில் பெரியவர்களின் வழிகாட்டுதலை விட தங்கள் குழுவின் விதிமுறைகளையே பின்பற்றலாம்.
பள்ளியில் ஒரு மாணவரைக் கேலி செய்வது அந்தக் குழுவின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது என்றால், மற்ற குழந்தைகளும் அதில் இணைந்துகொள்ளலாம். யாரும் எதிர்த்துப் பேசாமல் சிரிப்பதோ, அமைதியாக இருப்பதோ அந்த நடத்தையைத் தொடர்ந்து ஊக்குவிக்கலாம். இதனால், ‘புல்லியிங்’ என்பது இரண்டு குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை மட்டுமல்ல; அதைச் சுற்றியிருக்கும் குழுவின் அணுகுமுறையுடனும் தொடர்புடையது.
ஆப்பிரிக்க யானைகள் தொடர்பான ஓர் ஆய்வு, இளவயது யானைகளின் நடத்தையைப் புரிந்துகொள்வதற்கு ஒரு சுவாரசியமான உதாரணத்தை வழங்குகிறது. தென்னாப்பிரிக்காவின் பிலான்ஸ்பெர்க் பகுதியில், முதிர்ந்த ஆண் யானைகளின் வழிகாட்டுதல் இல்லாமல் வளர்ந்த இளம் ஆண் யானைகள், காண்டாமிருகங்களைத் தாக்கிக் கொன்ற சம்பவங்கள் பதிவாகின. பின்னர், முதிர்ந்த ஆண் யானைகள் அந்தக் குழுவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தத் தாக்குதல்கள் நின்றதாக ஆய்வாளர்கள் பதிவு செய்தனர்.
2021-ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வும், முதிர்ந்த ஆண் யானைகள் அதிகமாக இருந்த சூழல்களில், பிற உயிரினங்கள் உள்ளிட்ட யானைகள் அல்லாத இலக்குகளின் மீது ஆண் யானைகள் காட்டிய ஆக்கிரமிப்பு நடத்தை குறைவாக இருந்ததைக் கண்டறிந்தது.
இந்த உதாரணத்தை மனிதக் குழந்தைகளின் நடத்தையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது. ஆனால், ஒரு முக்கியமான கருத்தை இது சிந்திக்க வைக்கிறது.
அது, இளவயதினர் தங்கள் சமூகச் சூழலில் யாருடன் இருக்கிறார்கள், அவர்களுக்குக் கிடைக்கும் வழிகாட்டுதல் என்ன, எந்த நடத்தைகள் அனுமதிக்கப்படுகின்றன என்பவை அவர்களின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இன்றைய குழந்தைகள் பள்ளியிலும் நண்பர்கள் குழுவிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். எனவே, அங்கு அவர்கள் பார்க்கும் நடத்தைகள், அதிகார உறவுகள், குழுவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான விதிகள் ஆகியவை அவர்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பெற்றோரின் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் அணுகுமுறையும் பள்ளியின் ஒட்டுமொத்தச் சூழலும் முக்கியம்.
பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
1. தினமும் பத்து நிமிடங்கள் குழந்தைக்காக ஒதுக்குங்கள்:
அந்த நேரத்தில் படிப்பு, மதிப்பெண்கள் அல்லது அறிவுரைகள் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. “இன்னைக்கு ஸ்கூல்ல உனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் என்ன?”, “யாராவது உன்னை வருத்தப்படுத்தினார்களா?” என்று இயல்பாகப் பேசலாம். குழந்தை தானாகவே தனது அனுபவங்களைப் பகிர்வதற்கான வாய்ப்பை உருவாக்குங்கள்.
2. குழந்தை சொல்வதை உடனே விசாரிக்கவோ தீர்ப்பளிக்கவோ வேண்டாம்:
“நீ ஏன் அப்போ பதில் சொல்லவில்லை?”, “நீயும் அவனைக் கிண்டல் செய்திருக்க வேண்டியதுதானே?” என்று கேட்பதற்குப் பதிலாக, “அப்படி நடந்தபோது உனக்கு எப்படி இருந்தது?”, “நீ என்னிடம் சொன்னது நல்ல விஷயம்” என்று கூறுங்கள். குழந்தை தனது அனுபவத்தைப் பகிர்ந்ததற்காகக் குற்றவுணர்வு கொள்ளக்கூடாது.
3. ‘என்ன நடந்தது?’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்:
யார், எப்போது, எங்கே, என்ன செய்தார்கள் என்பதை அமைதியாகக் கேளுங்கள். இது ஒருமுறை நடந்த கிண்டலா, தொடர்ந்து நிகழும் புல்லியிங்கா, மிரட்டலா அல்லது உடல் ரீதியான தாக்குதலா என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தை சொல்வதைச் சரிபார்க்காமல் உடனடியாக முடிவெடுக்க வேண்டாம். அதே நேரத்தில், அதன் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் புறக்கணிக்கவும் வேண்டாம்.
4. வீட்டிலேயே மரியாதையான உறவுகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்:
உடல் தோற்றம், மதிப்பெண்கள், பாலின வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் காரணமாக வைத்து குழந்தைகளைக் கேலி செய்வதைத் தவிருங்கள். பிறரைப் பற்றி வீட்டில் நாம் பேசும் விதத்தையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வது, மன்னிப்புக் கேட்பது, பிறரின் எல்லைகளை மதிப்பது போன்றவற்றைச் செயல்மூலம் கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளின் உலகில் நாம் மீண்டும் நம்பிக்கைக்குரியவர்களாக மாற முடியுமா?
ஒரு குழந்தை புல்லியிங்கை எதிர்கொள்ளும்போது, அதை நிறுத்துவது மட்டுமே நமது நோக்கமாக இருக்கக் கூடாது. அந்தக் குழந்தை மீண்டும் யாரை நம்பும்? தனது பிரச்சினையை யாரிடம் பகிரும்? தவறு நடந்தால் யாரிடம் உதவி கேட்கும்? இந்தக் கேள்விகளுக்கும் நாம் பதில் தேட வேண்டும்.
குழந்தைகளுக்கு வழிகாட்டுவதற்கு முன்பு, அவர்களுடன் நம்பிக்கையான உறவை உருவாக்குவது அவசியம். குழந்தைகளின் நடத்தையை மட்டும் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்கள் நம்மிடம் திரும்பி வரக்கூடிய உறவை உருவாக்க வேண்டும்.
முதலில், திருத்துவதற்கு முன்பு தொடர்பை உருவாக்குவோம். குழந்தை தவறு செய்திருக்கும்போதும் அதன் நடத்தையைப் பற்றிப் பேசலாம்; ஆனால், அந்தத் தவறுக்காகவே குழந்தையை நிராகரிக்கக் கூடாது.
இரண்டாவது, தண்டிப்பதற்கு முன்பு புரிந்துகொள்ள முயற்சிப்போம். ஒரு குழந்தை மற்றவர்களைக் காயப்படுத்தினால், அந்த நடத்தையை நிறுத்துவதுடன், அது ஏன் நிகழ்கிறது என்பதையும் ஆராய்வோம்.
மூன்றாவது, எல்லைகளை அமைப்போம். உறவை உடைக்காமல், மற்றவர்களை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதே நேரத்தில், தவறைச் செய்த குழந்தையும் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.
நான்காவது, குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல என்பதை உணர்வோம். ஆசிரியர்கள், பள்ளி ஆலோசகர்கள், குடும்பத்தினர் மற்றும் பிற நம்பகமான பெரியவர்கள் இணைந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் நண்பர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நண்பர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மற்றவர்களை அவமானப்படுத்த வேண்டியதில்லை என்பதையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரத்தைக் காட்டுவது மட்டுமே வழியல்ல என்பதையும் அவர்கள் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை புல்லியிங்கை அனுபவிக்கும்போது, “நீ ஏன் எதிர்த்துப் பேசவில்லை?” என்று கேட்பதற்குப் பதிலாக, “உனக்கு உதவி தேவைப்பட்டால் என்னிடம் வரலாம்” என்று சொல்லும் பெரியவர்கள் தேவை.
ஒரு குழந்தை மற்றவர்களைப் புண்படுத்தும்போது, “நீ ஒரு மோசமான குழந்தை” என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, “நீ செய்தது தவறு; ஆனால் உன் நடத்தையை மாற்றிக்கொள்ள உதவ நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்லும் பெரியவர்களும் தேவை.
குழந்தைகள் ஒருவரையொருவர் காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல நமது இலக்கு. காயப்படுத்தப்படும்போது உதவி கேட்கவும், பிறரைக் காயப்படுத்தாமல் பிரச்சினைகளைத் தீர்க்கவும், தவறு நடந்தால் அதைச் சரிசெய்யவும் கற்றுக்கொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்குவதுதான் நமது இலக்கு. அதற்கான தொடக்கம், குழந்தைகளின் நடத்தையை மட்டும் கவனிப்பதில் இல்லை; அவர்களுடன் நாம் உருவாக்கும் உறவுகளில்தான் இருக்கிறது.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
Edited by ஷாலினி