வாழ்வியல்

தேனி மாவட்ட மூல வைகையில் நீர்வரத்து தொடங்கியது - புத்துயிர் பெற்ற பல்லுயிர் சூழல்

என்.கணேஷ்ராஜ்

வருசநாடு: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக மூல வைகையின் முகத்துவாரங்களில் நீரோட்டம் தொடங்கியது. இதனால் மலையடிவாரங்களில் பல்லுயிர் சூழல் திறன் செறிவு பெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கூடம் பாறை, அரசரடி, அஞ்சரபுலி, பொம்முராஜபுரம், வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகள் மூல வைகையின் பிறப்பிடமாக உள்ளன. இங்கு சோலைகாடுகள் நிறைந்துள்ளதால் பல்லுயிர் பெருக்கச் சூழல் செறிவுத்தன்மையுடன் காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இங்கு மழைப்பொழிவு இல்லாததால் சுனைகள், நீர்தேக்க பள்ளத்தாக்குகளிலும் நீர் சேமிப்பு குறைந்தது. இந்நிலையில் சில நாட்களாக மலைத்தொடர்களில் மழை பெய்தது.

குறிப்பாக நேற்று பல மணி நேரம் இப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நீர்ச்செறிவு புத்துயிர் பெற்று நீரோட்டமும் தொடங்கியதால் மலைத்தொடர்களில் இருந்து தரைப்பகுதிக்கு மழைநீர் வழிந்தோடத் தொடங்கியது. குறிப்பாக அரசரடி, வாலிப்பாறை, வருசநாடு பகுதிகளில் நேற்று காலை ஆற்றின் ஓரப்பகுதிகளில் நீர் கடந்து சென்றது.

மழை மற்றும் நீரோட்டத்தினால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் நிலவிய வறண்ட சூழல் வெகுவாய் மாறியது. சில்லென்ற காற்று வீசியதுடன், நீர்வளமும் புத்துயிர் பெறத் தொடங்கியதால் இச்சூழலை சார்ந்து இருக்கக்கூடிய உயிரினங்களின் வரத்து தொடங்கியது.

இது குறித்து பறவைகள் ஆய்வாளர் ரவீந்திரன் கூறுகையில், “குளிர்ச்சியான சூழ்நிலையினால் கம்பளிப்புழு, நத்தை, உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பூச்சி, புழுக்களை உணவாக கொள்ளும் நாரை உள்ளிட்ட பறவையினங்களும் இங்கு இடம்பெயர்ந்து வருகின்றன” என்றார்.

முகத்துவாரத்தில் நீர்வரத்து தொடங்கினாலும் இன்று (அக்.2) பிற்பகல் வரை தங்கம்மாள்புரம், ஒட்டணை, சிங்கராஜபுரம் வரையே நீரோட்டம் இருந்தது. குறைவான நீர்வரத்தினால் மூல வைகையின் நடு மற்றும் கடைமடைக்கு நீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடர் மழை பெய்யும் போதுதான் மூல வைகையின் வழித்தடம் முழுவதும் நீரோட்டம் இருக்கும் என்று நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT