வாழ்வியல்

புஷ்பவனம் கிராமத்திலும் இளைஞர்கள் மது அருந்த தடை - மீறினால் ரூ.5,000 அபராதம்!

நாகை மாவட்டம் விழுந்தமாவடியை தொடர்ந்து...

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தைத் தொடர்ந்து, வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவ கிராமத்திலும் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணமானவர்கள் மது குடித்து தகராறு செய்தாலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், திருமணமாகாதவர்களும் மது அருந்தக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருமணம் ஆனவர்கள் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்தாலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, சாலைகளில் இடையூறாக அமர்ந்திருப்பவர்களுக்கும், வாகனத்தை வேகமாக ஓட்டி செல்பவர்களுக்கும், பள்ளி வளாகத்தில் தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்கு கீழ் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி தவறு செய்து அபராதம் கட்டாதவர்கள் மீன்பிடி தொழில் செய்ய மறியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விளம்பர பதாகை வைத்தும், ஒலிபெருக்கி மூலமும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மது அருந்துவதை கட்டுப்படுத்த வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கிராமத்தில் எடுக்கப்பட்ட முடிவு போல, புஷ்பவனம் கிராமத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ஊர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT