படம்: மெட்டா ஏஐ
ப்ளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளியில் அவளுக்கென்று நெருங்கிய நண்பர்கள் குழு இருக்கிறது. வகுப்பறை, திரைப்படங்கள், குடும்பம், எதிர்காலம் எனப் பல விஷயங்களை அவர்கள் பேசிக்கொள்வார்கள். குறிப்பாக, யாருக்கு யாரைப் பிடிக்கும், யார் யாரைக் காதலிக்கிறார்கள், எதிர்காலத்தில் தங்களுடைய வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற உரையாடல்களும் அவர்களுக்குள் அடிக்கடி நிகழும்.
அவளுக்கும் ஈர்ப்பு குறித்த உணர்வுகள் இருக்கின்றன. ஒரு பெண்ணின் மீதும், ஓர் ஆணின் மீதும் அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதைத் தன் நண்பர்களிடம் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் புரிந்துகொள்வார்களா? கேலி செய்வார்களா? அவளுடைய உணர்வுகளைத் தவறாகப் புரிந்துகொள்வார்களா? இதனால் நட்பில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விகள் அவளுக்குள் எழுகின்றன. எனவே, நண்பர்கள் குழுவில் இருந்தாலும், அந்த உரையாடல்களில் அவள் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறாள்.
அவளுடைய மவுனத்தை நண்பர்கள் கூச்சம் என்றோ, தன்னம்பிக்கைக் குறைவு என்றோ, காதல் பற்றிப் பேசுவதில் ஆர்வமின்மை என்றோ புரிந்துகொள்ளக்கூடும். ஆனால், அவளுடைய மவுனத்துக்குப் பின்னால் வேறொரு அனுபவம் இருக்கிறது.
“எனக்குப் பிடித்த ஒருவரைப் பற்றித் தோழியிடம் சொல்வதற்கே எனக்குக் கூச்சமாக இருக்கிறது. அப்படியிருக்க, பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை குறித்துத் தங்களுக்குள் குழப்பங்களோ கேள்விகளோ கொண்டிருக்கும் பதின்பருவத்தினர் மட்டும் ஏன் தனியாகப் பார்க்கப்பட வேண்டும்?”
உண்மையில், பதின்பருவத்தில் ஒருவரைப் பிடிப்பது, காதல் உணர்வு ஏற்படுவது, அதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வது எனப் பல அனுபவங்கள் பொதுவானவை. ஒருவருக்குத் தன் ஈர்ப்பைப் பற்றிப் பேசுவதில் தயக்கம் இருப்பதும் இயல்பானதே. ஆனால், எல்லாத் தயக்கங்களும் ஒரே காரணத்தால் உருவாவதில்லை. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதில்தான் சில பதின்பருவத்தினரின் மவுனத்துக்குப் பின்னால் இருக்கும் அனுபவங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
நண்பர்கள் மத்தியில் இருக்கும் தனிமை
ஒரு நண்பர்கள் குழுவில் எல்லோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதற்காக, அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக வெளிப்படுத்த முடிகிறது என்று அர்த்தமில்லை. சிலர் நண்பர்களால் சூழப்பட்டிருந்தாலும், தங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான ஓர் அனுபவத்தைப் பற்றிப் பேச முடியாமல் இருக்கலாம்.
இத்தகைய மவுனம் பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை சார்ந்த அனுபவங்களில் மட்டும்தான் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது. குடும்பச் சூழல், பொருளாதார நிலை, உடல் தோற்றம், சமூகப் பின்னணி, தனிப்பட்ட அனுபவங்கள் எனப் பல காரணங்களால் பதின்பருவத்தினர் தங்களுக்குள் சில விஷயங்களை மறைத்துக்கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு அறிமுகமில்லாத அல்லது வழக்கமான புரிதல்களுக்கு வெளியே இருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது சிலருக்கு கூடுதல் சவாலாக இருக்கலாம்.
உதாரணமாக, எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு மாணவர், தனக்குப் பிடித்த ஒருவரைப் பற்றித் தோழர்களிடம் கூறும்போது நிராகரிக்கப்படுவோமோ என்று தயங்கலாம். அதே நேரத்தில், தன்னுடைய பாலியல் நோக்குநிலை வேறுபட்டது என்று உணரும் ஒருவர், தன்னுடைய ஈர்ப்பைப் பகிர்ந்துகொண்டால் கேலி செய்யப்படுவோமோ என்பதுடன், தன்னுடைய அடையாளமே கேள்விக்குள்ளாக்கப்படுமோ, நட்பை இழக்க நேரிடுமோ, மற்றவர்களிடம் தன்னுடைய விருப்பமின்றி இந்த விஷயம் வெளிப்படுத்தப்படுமோ என்றும் அஞ்சலாம்.
இருவருக்குமே தயக்கம் இருக்கிறது. ஆனால், அந்தத் தயக்கத்தை உருவாக்கும் சமூகச் சூழல்கள் ஒரே மாதிரியானவை அல்ல. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது, ஒருவருடைய அனுபவத்தை மற்றொருவருடைய அனுபவத்துடன் ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பிடாமல் இருக்க உதவும்.
நாம் இயல்பானது என்று கருதுவது யாருடைய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது?
மானுடவியல் மற்றும் சமூகவியல் பார்வையில் பார்த்தால், மனிதர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான மொழியும் இடமும் தனிப்பட்ட விருப்பங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அவர்கள் வாழும் சமூகத்தின் நம்பிக்கைகள், பண்பாட்டு எதிர்பார்ப்புகள், குடும்ப அமைப்புகள், பாலினப் பாத்திரங்கள் ஆகியவையும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட வயதில் ஆண், பெண் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரை விரும்புவது இயல்பானது, எதிர்காலத்தில் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் சமூகத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் கேள்விக்கு உள்ளாக்கப்படாமலேயே அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன.
இதனால், பெரும்பான்மையானவர்களின் அனுபவங்கள் குடும்பத்திலும் பள்ளியிலும் ஊடகங்களிலும் இயல்பானதாகப் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றிலிருந்து மாறுபட்ட அனுபவங்கள் பல நேரங்களில் பேசப்படாமலோ, புரிந்துகொள்ளப்படாமலோ இருக்கின்றன.
ஒரு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவரின் அனுபவத்தை மற்றொரு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதைப் போலவே, பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை தொடர்பான வேறுபட்ட அனுபவங்களும் அனைவருக்கும் தானாகவே புரிந்துவிடுவதில்லை. அதற்குத் திறந்த மனதுடன் கேட்பதும், அறிந்துகொள்ள முயற்சிப்பதும் அவசியம்.
பாலின அடையாளமும், பாலியல் நோக்குநிலையும் ஒன்றல்ல!
இங்கு இரண்டு கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். பாலின அடையாளம் (Gender Identity) என்பது ஒருவர் தன்னை எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக உணர்கிறார் என்பதைக் குறிக்கிறது. பாலியல் நோக்குநிலை (Sexual Orientation) என்பது ஒருவர் யாரிடம் காதல் அல்லது பாலியல் ஈர்ப்பை உணர்கிறார் என்பதைக் குறிக்கிறது.
எதிர்பாலினத்தவரிடம் ஈர்ப்பு கொண்டவர்கள், ஒரே பாலினத்தவரிடம் ஈர்ப்பு கொண்டவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பாலினத்தவரிடம் ஈர்ப்பு கொண்டவர்கள் எனப் பல்வேறு பாலியல் நோக்குநிலைகள் உள்ளன. இருபாலின ஈர்ப்பு (Bisexuality) அவற்றில் ஒன்று. அதேபோல், தங்களை ஆண் அல்லது பெண் என்ற இருமைப் பிரிவுகளுக்குள் மட்டும் அடையாளப்படுத்திக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.
சில பதின்பருவத்தினர் தங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இருக்கலாம். அவர்களுக்கு உடனடியாக ஒரு பெயரையோ அடையாளத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்களுடைய கேள்விகளைப் பல நேரங்களில் “இது வயதுக்கோளாறு”, “இது வெறும் குழப்பம்”, “கொஞ்சம் வளர்ந்த பிறகு சரியாகிவிடும்” என்று ஒதுக்கிவிடுகிறோம்.
ஒருவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவருக்குத் தேவையான காலத்தையும் இடத்தையும் வழங்குவது முக்கியம். அவர் தன்னைப் பற்றிய தெளிவை அடையவில்லை என்பதற்காக அவருடைய அனுபவத்தைப் பொய்யானதாகவோ தற்காலிகமானதாகவோ கருதக்கூடாது.
எதிர்காலத்தைக் கற்பனை செய்வதிலும் இருக்கும் வேறுபாடுகள்
பதின்பருவத்தில் பலரும் தங்களுடைய எதிர்கால உறவுகளைப் பற்றிக் கற்பனை செய்வார்கள். ஒருவருடன் பேசுவது, வெளியே செல்வது, காதலை வெளிப்படுத்துவது, குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவது எனப் பல கனவுகள் இருக்கலாம்.
பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலையில் வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர்கள் காதலையோ எதிர்கால உறவுகளையோ கற்பனை செய்ய முடியாது என்பதல்ல. அவர்களுக்கும் அதே உணர்வுகளும் கனவுகளும் இருக்கலாம். ஆனால், அந்தக் கனவுகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா, குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா, தங்களுடைய துணையை வெளிப்படையாக அறிமுகப்படுத்த முடியுமா போன்ற கேள்விகளையும் சிலர் கூடுதலாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து மற்றவர்களின் எதிர்வினைகளை முன்கூட்டியே கணிக்க வேண்டிய சூழல், அவர்களுடைய உறவுகள் குறித்த கற்பனைகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் பாதிக்கலாம். இது ஒருவருடைய அடையாளத்தால் ஏற்படும் பிரச்சினையல்ல; அந்த அடையாளத்தைச் சுற்றியுள்ள சமூக எதிர்பார்ப்புகளாலும் ஏற்றுக்கொள்ளாமையாலும் உருவாகும் சுமையாகும்.
புரிந்துகொள்ள முயற்சிக்கும் உறவுகள் தேவை
இந்தச் சூழலில் குடும்பம், பள்ளி, நண்பர்கள் என அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒருவர் தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது உடனடியாக அறிவுரை கூறுவதையோ, கேள்விகளால் அவரைச் சோதிப்பதையோ தவிர்க்கலாம். “ஏன் இப்படித் தோன்றுகிறது?”, “உனக்கு இது புரிய வயது போதாது”, “இது ஒரு கட்டம்தான்” போன்ற பதில்கள் அவர்களை மேலும் அமைதியாக்கலாம்.
அதற்குப் பதிலாக, “இதுபற்றி என்னிடம் பேச உனக்குச் சவுகரியமாக இருக்கிறதா?” என்று கேட்பது ஒரு பாதுகாப்பான உரையாடலுக்கான தொடக்கமாக இருக்கலாம். அவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களை அவர்களுடைய அனுமதியின்றி மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதும் முக்கியம்.
பள்ளிகளில் பாலியல் கல்வி என்பது உடல் மாற்றங்கள், இனப்பெருக்கம் போன்ற தகவல்களுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. வயதுக்கேற்ற வகையில் பாலின அடையாளம், பாலியல் நோக்குநிலை, தனிப்பட்ட எல்லைகள், சம்மதம், மரியாதை, பாகுபாடின்மை போன்றவற்றைப் பற்றியும் பேசப்பட வேண்டும்.
இத்தகைய உரையாடல்கள் வேறுபட்ட அனுபவங்களைக் கொண்ட மாணவர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் புரிதலுடன் பழகத் தயார்படுத்தும்.
பதின்பருவத்தினர் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்களுடைய உணர்வுகளையும் அடையாளங்களையும் புரிந்துகொள்ள நமக்குத் தேவையானது எல்லா கேள்விகளுக்கும் உடனடியாகப் பதிலளிப்பதல்ல; தீர்ப்பளிக்காமல் கேட்பதற்கான மனநிலையே.
நாம் பதின்பருவத்தினரின் மவுனத்தைப் பார்க்கிறோம். ஆனால், அந்த மவுனத்துக்கான காரணங்களைப் பார்க்கிறோமா?
சில உணர்வுகள் பேசப்படாமல் இருப்பதற்குக் காரணம், அவற்றை உணர்பவர்களிடம் வார்த்தைகள் இல்லை என்பதல்ல; அவற்றைக் கேட்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் நம்மிடம் போதுமான இடம் இல்லை என்பதுதான். அந்த இடத்தை உருவாக்குவதில்தான் ஒரு குழந்தை தன்னை மறைக்காமல், தன்னுடைய உணர்வுகளுடன் பாதுகாப்பாக வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com