புதுக்கோட்டை மாவட்டம் அணவயலில் நடைபெற்ற மொய் விருந்து விழாவில் ஆர்வத்துடன் மொய் செய்வோர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து விழா மீண்டெழத் தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், மாங்காடு, புள்ளான் விடுதி, அணவயல், கீழாத்தூர், குளமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல், நகரம், செரியலூர், ஆயிங்குடி, அரசர்குளம், கறம்பக்குடி, ஆலங்குடி, மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொய் விருந்து விழா கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் உறவினர்களுக்குள் திருமணம், காதணி போன்ற நிகழ்ச்சிகளின்போது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் விதமாக சிறு தொகையை மொய்யாக எழுதினர். நாளடைவில் அதுவே ‘மொய் விருந்து' எனும் தனித்துவமான விழாவாக உருவெடுத்தது. இந்த மொய் விருந்து மூலம் இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை மொய் கிடைத்துள்ளது.
மொத்தம் 100 இடங்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் மொய்விருந்து விழாக்களை நடத்தினர். ரூ.500 கோடி வரையில் பணப்புழக்கம் இருந்தது. ஆனால், கஜா புயல், கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளாலும், மொய் விருந்து நடத்திய ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளாலும் மொய் வசூல் படிப்படியாகக் குறைந்தது.
இதற்குப் பயந்து பலரும் மொய் வரவு - செலவை நிறுத்திக் கொண்டதால், விழாக்களின் எண்ணிக்கையும் சரிந்தது. குறிப்பாக வடகாடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நாட்கள் விமரிசையாக நடத்தப்பட்டு வந்த மொய் விருந்து, ஒரே ஒரு நாளாகச் சுருங்கியது.
இந்நிலையில், நிகழாண்டில் நடைபெற்ற தனிநபர்களின் இல்ல விழாக்கள் மற்றும் மொய் விருந்துகளில் பண வசூல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மொய் விருந்து கலாச்சாரம் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. இதுகுறித்து வடகாட்டில் நிகழாண்டு மொய் விருந்து நடத்திய எம்.அன்பழகன் கூறியது:
மொய் விருந்துகளில் கிடைத்த தொகையைப் பயன்படுத்தி பலரும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைந்தனர். மேலும், கிராமங்களில் பணப்புழக்கமும் அதிகமாக இருந்தது. கஜா புயலால் ஊரின் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்தது. அதன்பிறகு கரோனா தொற்றினாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
சிலர் தங்களது பொருளாதார கவுரவத்தை உயர்த்திக் காட்டுவதற்காக அதிக வட்டிக்கு பணத்தை வாங்கி, பிறருக்கு மொய் செய்வதும், தங்களது விழா முடிந்த பிறகு மற்றவர்களுக்குத் திரும்ப மொய் செய்யாமல் ஏமாற்றுவதும் மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. இத்தகைய பிரச்சினைகளால் மொய் விருந்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
ஆனால், நிகழாண்டில் பரவலாக நடைபெற்று வரும் திருமணம், காதணி விழா மற்றும் மொய் விருந்துகளில் மக்கள் ஆர்வத்துடன் மொய் எழுதி வருகின்றனர். ரூ.1 லட்சம் மொய் செய்தோருக்கு தற்போது ரூ.2 லட்சத்துக்கும் மேல் மொய் திரும்பக் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு வரை நடைபெற்ற மொய் விருந்தில் செய்யப்பட்ட தொகையை விடக் குறைவாகவே வசூலாகி வந்தது. தற்போது நிலவும் சூழலைப் பார்க்கும்போது, அடுத்த 5 ஆண்டுகளில் மொய் விருந்துகளின் எழுச்சி பழைய நிலையை முழுமையாக எட்டாவிட்டாலும், நல்ல முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்றார்.