சிவகங்கை அரசு மருத்துவமனையில் ராஜேந்திரனுடன் அவரது மகன் செல்லப்பன். உடன் சமூக ஆர்வலர் அப்துல்முத்தலிபு (இடது ஓரம்)
சிவகங்கை: குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறியவரை 15 ஆண்டுகளுக்கு பின்பு மகனுடன் சமூக ஆர்வலர்கள் சேர்த்து வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). வாகன ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்த அவர், வாகன ஓட்டுநராக வேலை பார்த்து, அங்கேயே தங்கிவிட்டார்.
அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். பின்னர், உடல்நிலை ஒத்துழைக்காததால் ஓட்டுநர் பணியிலிருந்து விலகி, கடந்த சில ஆண்டுகளாக கீரை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சில தினங்க ளுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உதவிக்கு ஆள் இல்லாமல் மருத்துவமனையில் ராஜேந்திரன் சிரமப்பட்டார். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் அப்துல் முத்தலிபு, முகமது ரபீக் ஆகியோர் அவருக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தனர். பின்னர் ராஜேந்திரனிடம் அவரது குடும்பத்தினர் விவரத்தைப் பெற்று, அவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, ராஜேந்திரனின் மகன் செல்லப்பன் (30) சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அவரை பார்த்த ராஜேந்திரன் மகிழ்ச்சியடைந்தார். குடும்பத்தினருடன் தன்னை சேர்த்து வைத்த அப்துல் முத்தலிபு, முகமது ரபீக் ஆகியோருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.