சிவகங்கையை சேர்ந்த அரசு மருத்துவர் 8 முறை 42 கி.மீ. தூர தேசிய அளவிலான மாரத் தானில் முழுமையாக ஓடி சாதித்துள்ளார். மேலும் தடகள பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடை, ஷூ வழங்கி ஊக்குவித்து வருகிறார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரிபவர் மதியழகன் (50). இவரது மனைவி பேபிபிரவீனாவும் அதே மருத்து வமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். மதிய ழகன் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து மாரத்தான் போட்டி யில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர் தினமும் மாவட்ட திறந்தவெளி விளையாட்ட ரங்கில் 2 மணி நேரம் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
இதுவரை, அவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற21 கி.மீ. மாரத்தானில் 40 முறை ஓடியுள்ளார். அதேபோல் 42 கி.மீ. மாரத்தானை 8 முறை முழுமையாக ஓடி சாதித்துள்ளார். பல்வேறு பரிசுகளும் பெற்றுள்ளார். 50 வயதிலும் தொடர்ந்துவிடாமல் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும் மாவட்ட திறந்தவெளி போ விளையாட்டரங்கில் தடகள போட்டிகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஷூ, சீருடைகளை வாங்கி கொடுத்து ஊக்கு வித்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் நடை பெறும் மாரத்தான் போட்டிகளுக்கும் பரிசுகளை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் மதியழகன் கூறியதாவது: முதலில் உடற்பயிற்சிக்காக ஓடத் தொடங்கினேன். அடுத்ததாக மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றேன். பின்னர் தொடர்ந்து மாரத்தானில் பங்கேற்பதை வழக்கமாக்கி கொண்டேன். மயக்கவியல் துறையில் வேலைப்பளு இருந்தாலும் இடைவிடாது தினமும் 2 மணி நேரம் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னை பார்த்து 20-க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
நோய்களுக்கு முக்கிய காரணமே தூக்கமின்மை தான். தினமும் ஓட்டப் பயிற்சி செய்வதால் ஆழ்ந்த தூக்கம் வரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். என்னால் முடிந்த உதவிகளை செய்து தடகளப் போட்டிகளில் ஈடுபடும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.