பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள், சுடுமண்ணாலான வடிகால் குழாய்கள்.

 
வாழ்வியல்

பட்டினமருதூர் அகழாய்வு பணியில் உறை கிணறுகள் கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட தருவைகுளம் அருகே பட்டினமருதூரில் கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து பழங்கால சங்குகள், பாசி மணிகள், கவுரி செல்ஸ் (சோவிகள்), அலங்கார வளைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சங்குகள் அறுக்கப்பட்டு, அதிலிருந்து உருவாக்கப்படும் ஆபரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சீனா நாட்டு நாணயங்கள், அந்நாட்டின் பீங்கான் ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உறை கிணறுகள், கற்களால் ஆன சுவர், சுடுமண்ணாலான பீப்பாய் போன்ற வடிகால் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் கடந்த 25-ம் தேதி பட்டினமருதூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார்.

‘இப்பகுதியில் சங்குகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றதை வைத்து, சுமார் 200 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் மிகப்பெரிய சங்கு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது தெரிகிறது.

முழு சங்கு எடுத்து வந்து, அதனை அறுத்து, அதில் இருந்து வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் செய்து ஏற்றுமதி செய்துள்ளனர். சீன நாட்டு நாணயங்கள் அந்நாட்டுடன் வர்த்தம் இருந்ததை காட்டுகின்றன.

சங்கு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளதை வைத்து இப்பகுதியில் திசையாயிரத்து ஐந்நூறு என்ற வணிக்குழு இருந்திருக்கலாம். இந்த இடத்தின் காலத்தைக் கணிக்க மேலும் அகழ்வாராய்ச்சிகள் தேவை’ என அகழ்வாராய்ச்சி இயக்குநர் ஆர்.அஜய் குமார் கூறினார்.

தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறுகையில், ‘பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் காணப்படும் வட்ட வடிவிலான உறை கிணறுகள் தண்ணீர் தேவை இருந்துள்ளதை காட்டுகின்றன.

சுடு மண்ணாலான குழாய் கட்டிடங்களை தண்ணீர் வெளியேறுவதற்காக பயன்படுத்தி இருக்கலாம். அடுத்தகட்ட ஆய்வுகளின் போது, குழாயின் வழித்தடத்தை கண்டறியலாம்.

சங்குகள், சங்கு வளைகள், சங்குகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சோவிகள்

இதன் மூலம் பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை மற்றும் வடிகால் அமைப்பு குறித்த தொழில்நுட்பங்கள் தெரியவரும். பட்டினமருதூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பனையூரில் கடற்சார் புதைபடிமங்களை தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டார். அங்கும் அகழாய்வு பணி மேற்கொள்ள அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT