சென்னை: பிரபல சமையல் கலைஞர் தாமு உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
தாமோதரன் கோதண்டராமன் என்ற செஃப் தாமு கடந்த 1954-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் பிறந்தார். சென்னை தரமணியில் உள்ள உணவக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார். 1977-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாண்மைப் பயிற்சியாளராக பணியைத் தொடங்கினார்.
உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமைக்குரியவர்.
தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திலும் பங்களித்துள்ளார்.
மதிய உணவுத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த, எட்டு வகையான சாதங்கள், ஆறு வகை முட்டை உணவுகளை அறிமுகப்படுத்த உதவியுள்ளார்.
மேலும் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 1.40 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்கும் 13 மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாணவியர் விடுதிகளின் சமையல் பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கியுள்ளார்.
2010, டிச.22-ம் தேதி சென்னையில் தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் சமையல் செய்து, கின்னஸ் சாதனை படைத்தார்.
2025-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது. சில திரைப்படங்களில் சமையல் கலைஞராகவும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.