கிழக்கின் இதிகாசமான வால்மீகியின் ராமாயணமும், மேற்கின் காவியமான டி.ஹெச்.ஒயிட்டின் (T.H.White) ‘தி ஒன்ஸ் அண்ட் பியூச்சர் கிங்’ (The Once and Future King) நாவலும் வெவ்வேறான கலாச்சார பின்னணியில் பிறந்தவை. ஆனால், மனித குலத்துக்கு அவை எழுப்பும் கேள்விகள் என்றென்றும் பொதுவானவை.
மேற்கத்திய காவியத்தின் பிதாமகர் டி.ஹெச்.ஒயிட் படைத்த கிங் ஆர்தர் தனது உயிர் நண்பனின் துரோகத்தால் சிதைந்துபோன கேமலாட்டை (அரசு நிர்வாகம்) நினைத்து வேதனைப்படும்போதும், வால்மீகியின் இதிகாசத்தில் தன் உயிரினும் மேலான சீதையைப் பிரிந்து ராமர் கண்ணீருடன் அரியணையில் அமர்ந்திருக்கும் போதும், அந்தக் காட்சிகள் ஓர் உண்மையை ரத்தமும் சதையுமாக நமக்குச் சொல்வது இதைத்தான்... ‘தலைமை என்பது சுகபோகமல்ல, அது மாபெரும் தியாகம்’.
ராவணனின் மோகம் அவனது சாம்ராஜ்ஜியத்துக்கு அழிவைத் தேடித் தந்ததுபோல ‘தி ஒன்ஸ் அண்ட் பியூச்சர் கிங்’ நாவலில் வரும் படைத் தளபதி லான்செலட்டின் ராணியின் மீதான காதலும் கேமலாட்டைச் சிதைத்தது. காலம் வென்ற இந்த காவியங்கள் உலகுக்கு சொல்லும் சேதி மிகத் தெளிவானது... ‘சட்டங்கள் நாட்டை ஆளலாம்; அறம் மட்டுமே மனிதனைக் காக்கும்.’
இன்றைய நவீன ஜனநாயகம், கார்ப்பரேட் மேலாண்மை மற்றும் அரசியல் அரங்குகளில் தனிப்பட்ட உறவுகளா அல்லது பொது நீதியா என்கிற இக்கட்டில் தலைவர்கள் தவிக்கும்போதெல்லாம், இந்தக் காவிய நாயகர்களின் மவுனம் நம்மைத் தீர்க்கமாக யோசிக்க வைக்கிறது.
இதிகாசமும் காவியமும் உரைப்பது:
கி.மு.750 - 500 காலகட்டத்தில் வால்மீகியால் இயற்றப்பட்ட ராமாயணம், இலங்கை மன்னன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்க, ராமர் மேற்கொண்ட போராட்டத்தையும், மக்களுக்காக அவர் நடத்திய ‘ராமராஜ்ஜியத்தின்’ அறத்தையும் பேசுகிறது.
மறுபுறம், இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் 1958-ல் வெளியான டி.ஹெச்.ஒயிட்டின் நாவல், மனித குலத்தின் போர் வெறியையும் அதிகாரப் போட்டியையும் விமர்சிக்கிறது. வன்முறையை ஒழிக்க ஆர்தர் உருவாக்கிய ‘வட்ட மேசை’ (Round Table) சபை, இறுதியில் மனிதர்களின் ‘ஈகோ’ மற்றும் பலவீனங்களால் (லான்செலட் - குயினெவர் உறவு மற்றும் மார்ட்ரெட்டின் சதி) சிதைந்து போவதை காட்டுகிறது. ‘நல்ல எண்ணங்கள் மட்டுமே ஒரு சமூகத்தைக் காப்பாற்றிவிடாது; மனித இயல்பும் மாற வேண்டும்’ என்பதே இதன் சாராம்சம்.
இரு காவியங்கள் எதை வலியுறுத்துகின்றன?
இந்த இரு காவிய நாயகர்களும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டக் கடைசி வரை போராடினர். ஆர்தர், ‘வலிமையே நீதி’ என்ற காட்டுமிராண்டித்தனமான கோட்பாட்டை மாற்றி, ‘நீதியே வலிமை’ (Might for Right) என்பதை வலியுறுத்தினார். ராமரோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, ‘ராஜ தர்மமே’ முதன்மையானது என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார்.
ராமர், சீதையிடம் ‘தூய்மை’ மற்றும் ‘சமூக ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கை’யை வலியுறுத்தினார். அரசனும் அரசியும் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால், மக்களின் சந்தேகத்தைத் தீர்க்க ‘அக்னிப் பிரவேசம்’ மற்றும் ‘வனவாசம்’ போன்ற கடுமையான சோதனைகளை சீதையும் ஏற்க வேண்டியிருந்தது.
மறுபுறம் ஆர்தர், ராணி குயினெவரிடம் ‘நட்பு, மன்னிப்பு மற்றும் அரசின் நிலைத்தன்மையை’ மறைமுகமாக வலியுறுத்தினார். குயினெவர் - லான்செலட் உறவை அறிந்திருந்தபோதும், அதைப் பெரிதுபடுத்தி போர் மூண்டால் தேசம் அழிந்துவிடும் என்பதற்காக, தனது தனிப்பட்ட கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியைக் காக்க முயன்றார்.
இரு கதைகளுக்கும் கலாச்சார பின்னணியில் வேறுபாடுகள் இருந்தாலும், “மிகச் சிறந்த ஆட்சியாளனால் கூட தனது சொந்த குடும்பத்தின் துயரத்தைத் தடுக்க முடியவில்லை” என்ற காவியத் துயரத்தை (Tragic irony) முன்வைப்பதால், இவற்றை ஒப்பிடுவது முற்றிலும் சரியானதே என எழுத்தாளர் ஜோ அடென்சுஞ்சி குறிப்பிடுகிறார்.
ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் செய்தி:
இன்றைய அரசியல் தலைவர்களும், கார்ப்பரேட் தலைமை அதிகாரிகளும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
தனிப்பட்ட பாசம் vs பொது நீதி:
தன் நண்பன் லான்செலட்டையும் மனைவியையும் தண்டித்தால் இதயம் உடையும். மன்னித்தால் சட்டம் கேலி கூத்தாகிவிடும் என நாவலின் நாயகன் ஆர்தர் புழுங்கினார். இன்றைய தலைவர்களும் தங்களுக்கு நெருங்கமானவர்கள் தவறு செய்யும்போது, அவர்களைக் காப்பாற்றுவதா அல்லது சட்டத்தின்முன் நிறுத்துவதா என்ற இக்கட்டை எதிர்கொள்கின்றனர்.
பொதுமக்களின் நம்பிக்கை:
சீதை தூய்மையானவள் என்று தெரிந்திருந்தும், ஒரு குடிமகனின் சந்தேகத்துக்குப் பதிலளிக்க தன் மனசாட்சிக்கு எதிராக ராமர் அந்த முடிவை எடுத்தார். தலைவர்கள் ‘பொதுமக்களின் நம்பிக்கையை’ (Public Trust) காப்பாற்றக் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
அதிகாரப் பயன்பாடு:
வலிமையைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாமல் (ராவணனைப் போல), மக்களின் நலனுக்காக மட்டுமே (ஆர்தர், ராமரைப் போல) பயன்படுத்த வேண்டும். ஆனால், இன்றைய தலைவர்கள் பெரும்பாலும் அறத்தைவிடத் தனிப்பட்ட நலன்களிலேயே அக்கறை செலுத்துகிறனர்.
2024-ல் வரி மற்றும் ஆயுத வழக்குகளில் சிக்கிய தன் மகன் ஹண்டர் பைடனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘நிபந்தனையற்ற மன்னிப்பு’ வழங்கியது, குடும்பத்தைப் பாதுகாக்க, அவர் பொது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல், டொனால்டு ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சியில், ஜனவரி 6 நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய கிட்டத்தட்ட 1,600 பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுவித்தார்.
இத்தகைய நிகழ்வுகளில் ஆட்சியாளர்கள் இலக்கியம் காட்டிய அறத்தை மறந்துவிடுகின்றனர். ஒரு தலைவனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையே வித்தியாசம் இருக்க முடியாது. ஏனென்றால், அவனது ஒவ்வொரு செயலும் சமூகத்துக்கு ஒரு பாடமாகிறது.
‘எனது இந்த முடிவு சொந்த நலனுக்கானதா அல்லது மக்களின் நலனுக்கானதா?’ என்ற ஒற்றைக் கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் தலைவர்கள், எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அறத்தின் பாதையிலிருந்து விலக மாட்டார்கள் என்பதே உலக இலக்கியங்கள் உரைக்கும் காலத்தால் அழியாத சாராம்சமாகும்.
| உறுதுணைக் கட்டுரை: தி கான்வெர்சேஷன் |