ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தொழிலாளியுடன் இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்.
சென்னை: கடும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஏழை தொழிலாளிக்கு பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன், இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது: சிதம்பரத்தை சேர்ந்த 54 வயதான முடி திருத்தும் தொழிலாளிக்கு கடுமையான நெஞ்சு வலி மற்றும் கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் இருந்தது.
எனவே கடந்த நவம்பர் 23-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இதய அறுவை சிகிச்சைத் துறையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருடைய இதயத்தின் முக்கிய ரத்த குழாயான பெருந்தமனி, அதன் மேல் பகுதி முதல் வளைவு பகுதி வழியாக கீழ் பகுதி வரை கிழிந்திருந்தது கண்டறியப்பட்டது.
உடனே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு இருந்த ரத்தக்கொதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.
இந்த குழுவில், உதவிப் பேராசிரியர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ், மயக்க மருந்து நிபுணர்கள் சுமதி, ஆஷா, முதுநிலை மருத்துவ மாணவர்கள், அறுவை சிகிச்சை செவிலியர் ஜமுனா மற்றும் ரத்த ஓட்ட நிபுணர்கள் லாவண்யா, சுமதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சை, சுமார் 10 மணி நேரம் நீடித்தது.
அறுவை சிகிச்சையின்போது, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களும் மாற்றப்பட்டதால், மூளைக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சரிசெய்ய முடியாத நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருந்தது.
உடலின் மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்த குழாய்களும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நின்று உறுப்பு செயலிழப்பு அல்லது கை, கால் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அதனால், மிகவும்
கவனத்துடனும் துல்லியமான தொழில்நுட்பத்துடனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர், நோயாளிக்கு எந்தவிதமான நரம்பியல் அல்லது உறுப்பு பாதிப்புகளும் இன்றி குணமடைந்து, வீட்டுக்குச் செல்ல தயாராகி வருகிறார். தமிழக அரசு மருத்துவமனையில் இத்தகைய சிக்கலான பெருந்தமனி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமானால், குறைந்தது ரூ.25 லட்சம் வரை செலவாகும். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.