கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் 658 கிலோ சாக்லேட்டில் 7 அடி உயரமுள்ள சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) சிலையை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 2009-ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பாண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான சாக்லேட் சிலைகளை செய்வது வழக்கம்.
குறிப்பாக காந்தி, பாரதியார், எஸ்.பி.பி, தோனி, ரஜினி, விங்க் கமாண்டர் அபினந்தன் உள்ளிட்டோரின் சாக்லெட் சிலைகளை இதற்கு முன் பல்வேறு தருணங்களில் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 658 கிலோ எடை சாக்லேட்டில் 7.2 அடி உயரத்தில் சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) சிலையை உருவாக்கியுள்ளனர். இதை செஃப் ராஜேந்திரன் தங்கராசு 11 - நாட்கள் 92 - மணி நேரத்தில் உருவாக்கி உள்ளார்.
இந்த சாக்லேட் சிலையை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். வரும் ஜன. 26-ம் தேதி வரை இந்த சாக்லேட் சாண்டா கிளாஸ் சிலை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.