படம்: ஜெ.மனோகரன்

 
வாழ்வியல்

கோவை பெண் ஓட்டுநருக்கு குடியரசுத் தலைவர் கடிதம் - யார் இந்த சங்கீதா?

டெல்லியில் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிடவும், தேநீர் விருந்தில் பங்கேற்கவும் அழைப்பு

டி.ஜி.ரகுபதி

கோவை: டெல்லியில் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிட கோவையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்து குடியரசு தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவை கவுண்டம்பாளை யத்தை சேர்ந்தவர் சங்கீதா (40). ஆட்டோ ஓட்டுநர். இவரது கணவர் பாலாஜி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இவருக்கு நேற்று கடிதம் வந்தது. அஞ்சல் அலுவலர் வழங்கிய அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

அந்த கடிதத்தில் வருகிற 26-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிடவும், குடியரசு தலைவருடன் தேநீர் அருந்தவும் அவருக்கு குடியரசு தலைவரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த சங்கீதா, தனது கணவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரை சந்தித்து குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து சங்கீதா கூறும்போது, ‘‘நான் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது கணவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா. | படம்: ஜெ.மனோகரன் |

நாங்கள் இருவரும் சிறுக, சிறுக சேமித்த பணத்தில் எனது பூர்வீக நிலத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டினோம். மேலும், எங்களது இரு குழந்தைகளையும் படிக்க வைத்தோம். தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கவும், குடியரசு தின பேரணியை நேரில் பார்வையிடவும் அழைப்பு கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் மாநிலத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்கவும், தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்படும்.

இதன்படி கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சங்கீதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்த வந்த சங்கீதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்தார்.

அவருக்கு மானியமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.5 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். குறைந்த வருமானத்தில் தனது இரு மகன்களையும் படிக்க வைத்து, சொந்தமாக வீடு கட்டியதற்காகவும், இதற்காக சிறப்பாக திட்டமிட்டதற்காகவும் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT