பிரான்சிஸ் ஜெகன் ராஜ்
கோவை: தாவர மூலங்களில் இருந்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சிக்காக கே.எஸ்.எம்.ஓ சர்வதேச மாநாட்டு பயண மானியத்தை பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பெற்றுள்ளார்.
கொரியன் சொசைட்டி ஆப் மெடிக்கல் ஆன்காலஜி என்பது மருத்துவ புற்றுநோயியல், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறைகளின் முன்னேற்றத்துக்காக செயல்பட்டுவரும் முக்கிய சர்வதேச அமைப்பாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் ஒன்றிணைந்து அறிவியல் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், புதிய சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கவும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை உருவாக்கவும் சிறந்த தளமாக அமைகிறது.
இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சித்திறன் மற்றும் புதுமையான அறிவியல் ஆய்வுகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவரும் பிரான்சிஸ் ஜெகன் ராஜ், 2026-ம் ஆண்டு நடைபெறும் கொரியன் சொசைட்டி ஆப் மெடிக்கல் ஆன்காலஜி எனப்படும் கே.எஸ்.எம்.ஓ சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு தனது ஆராய்ச்சிப் பணியை சமர்ப்பிப்பதற்கான பயண மானியத்தை பெற்றுள்ளார்.
இவர் போட்டித்தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரான்சிஸ் ஜெகன் ராஜ் கூறும்போது, “இயற்கைத் தாவர மூலங்களில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் சர்வதேச முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
இயற்கைத் தாவர மூலங்களில் இருந்து பெறப்படும் உயிரியல் செயல்பாடு கொண்ட சேர்மங்களை கண்டறிதல், தன்மைப்படுத்துதல் மற்றும் மருத்துவ பயன்பாட்டு திறனை மதிப்பீடு செய்தல் ஆகியவை எனது ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்” என்றார்.
சர்வதேச மாநாட்டில் பிரான்சிஸ் ஜெகன் ராஜூடன், பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறையை சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்களான அனிஷ் ரூபன் மற்றும் மேனகா ஆகியோர் பங்கேற்று தங்களது ஆராய்ச்சி பணிகளை சமர்ப்பிக்க உள்ளனர்.