பிரதமர் மோடி பாராட்டிய விவசாயி பி.சந்திரசேகரன்.
பழநி: கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் இயற்கை விவசாய முறையில் அவகோடா சாகுபடி செய்யும் விவசாயி பி.சந்திரசேகரனை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். இதன்மூலம் அவகோடாவுக்கு புது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாயி கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான பூம்பாறை, கூக்கால், மன்னவனூர் மற்றும் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் அவகோடா (பட்டர் புரூட்) அதிகம் சாகுபடி செய்யப் படுகிறது. பல்வேறு மருத்துவக் குணம் கொண்ட இப்பழங்கள், கொடைக்கானலில் இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் (ஆக.30) உரையாற்றியபோது, கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக் காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.சந்திரசேகரன், இயற்கை விவசாய முறையில் அவகோடா சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டி வருவதாகப் பாராட்டினார்.
இதன்மூலம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும் அவகோடாவுக்கு புது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாயி கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்ற ஆண்டு வெப்ப மண்டலப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய லிச்சி பழத்தை கொடைக்கானலில் விளைவித்து சாதனை படைத்த விவசாயி வீரஅரசு குறித்தும் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொடைக்கானலில் விளையும் பழப்பயிர்கள் மீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது.
எனவே, பழப்பயிர்கள் சாகுபடியை அதிகரிக்கவும், அதனை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட விவசாயி பி.சந்திரசேகரன் கூறியதாவது: விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் மருந்தியல் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு அதுதொடர்பான வேலைக்குச் செல்லாமல் விவசாயத்தில் இறங்கினேன். கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன்.
அடுக்கு விவசாய முறையில் காபி, மிளகு, சவ்சவ் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வரிசையில் 100 அவகோடா மரங்களை நடவு செய்துள்ளேன். இதற்காக, 20 ஆண்டுகள் பழமையான மரங்களில் இருந்து அவகோடா விதைகளை தேர்ந்தெடுத்து, நாற்று உற்பத்தி செய்தேன். தற்போது 20 மரங்களில் இருந்து மகசூல் கிடைக்க தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் தான் அவகோடாவின் சீசன் காலம். இந்த சீசனில் அதிக மகசூல் கிடைக்கும். ஆஃப் சீசனான ஏப்ரல், மே மாதத்தில் குறைவான மகசூல் கிடைக்கும். சீசன் காலத்தில் சராசரியாக குறைந்தது நாளொன்றுக்கு 250 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
கொடைக்கானலில் மரங்களில் காய்த்து தொங்கும் அவகோடா.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிப்பதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. மரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இடுவேன். இதனால் மண் வளமும் பெருகுகிறது. அதிக செலவின்றி என்னால் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடிகிறது. அவகோடாவை ஒரு நேர உணவாகவே உட்கொள்ளலாம். அனைத்து விதமான சத்துகளும் இந்த பழத்தில் உள்ளன. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம்.
அவகோடா முகத்துக்கு முகப்பூச்சு கிரீம், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. அவகோடா சாப்பிட்டால் எப்போதும் இளமையாக இருக்கலாம். பிரதமர் மோடி என்னுடைய பெயரை கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை. இதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. பிரதமர் மோடியால் அவகோடாவுக்கு புது அடையாளம் கிடைத்திருக்கிறது. இனி பலரும் அவகோடா சாகுபடி செய்ய முன் வருவர். இவ்வாறு அவர் கூறினார்.