கோவில்பட்டியில் உள்ள கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில், வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக கடலைமிட்டாய்களை கிப்ட் பேக்குகளில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
கோவில்பட்டி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி கடலைமிட்டாய் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, பலகாரங்கள் விற்பனை அதிகமாக இருக்கும். இனிப்பு அதிகம் சாப்பிடும் போது, செரிமானப் பிரச்சினை உள்ளிட்ட பல உடல்நல தொந்தரவுகள் ஏற்படுவது வழக்கம்.
எனவே, உடலுக்கு கெடுதல் இல்லாத ஆரோக்கியம் தரும் உணவான கடலைமிட்டாய் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு கடலைமிட்டாய் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
இந்தாண்டு பல்வேறு நிறுவனத்தினர் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களில் கடலை மிட்டாயை பிரதானமாக இணைத்து கொடுத்து வருகின்றனர்.
இதற்காக விதவிதமான கடலை மிட்டாய்களுடன், கோவில்பட்டியில் மற்றொரு பிரதான பண்டமான காரச்சேவும் இணைத்து பரிசுப் பொருட்கள் தயார் செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க செயலாளர் கண்ணன் கூறியதாவது: இயற்கைப் பொருட்கள் மூலம் தயாரித்து, உடல் ஆரோக்கியத்தில் கெடுதல் இல்லாத பண்டம் என்றால் அது கடலைமிட்டாய் தான். நிலக்கடலை வறுக்கப்பட்டு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்ப்பதால் செரிமான தொந்தரவு இருக்காது.
இதுதான் கடலைமிட்டாயின் தனிச்சிறப்பு. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு கடலைமிட்டாய் வாங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிறுவனத்தினர், தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளி இனிப்பு பரிசு பெட்டகத்தில் கடலை மிட்டாயை மட்டும் இடம்பெற வைக்க எங்களை அணுகினர்.
புவிசார் குறியீடு பெற்ற பின்னர் விதவிதமான கடலை மிட்டாய்களை தயார் செய்து வருகிறோம். பாதாம், முந்திரி, கருப்பு கவுணி, கடல்பாசி, முருங்கை கீரை, மாப்பிள்ளை சம்பா, நாட்டுச் சோளம் என 10 வகையான கடலை மிட்டாய்களை தயாரித்து வருகிறோம். இவை இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களில் இடம்பெற்றுள்ளன.
கிப்ட் பாக்ஸ்:
கிப்ட் பாக்ஸ் மற்றும் பக்கெட் கிப்ட் (சிறிய வாளி) என இரண்டு வகையாக செய்து வருகிறோம். ரூ.300-ல் இருந்து ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது.
வெளிமாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இந்த தீபாவளி கிப்ட் குறித்து அறிந்து எங்களை தொடர்புகொண்டு மொத்தமாக கேட்கின்றனர்.
அவர்களுக்கு நாங்கள் கூரியர் மூலம் அனுப்பி வருகிறோம். இந்த ஆண்டு தீபாவளி கடலை மிட்டாய் உற்பத்தியில் உள்ள தொழிலாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நல்ல தீபாவளி யாக அமைந்துள்ளது என்றார்.