ஸ்ரீதர்

 
வாழ்வியல்

“ஏஐ யுகத்தில் வானொலி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்” - பத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் கருத்து

இரா.கார்த்திகேயன்

கோவை: இந்தியாவில் சமுதாய வானொலியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீதருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஸ்ரீதர் (78), கடந்த 8 ஆண்டுகளாக மனைவி மீனாட்சியுடன் கோவை பேரூர் பச்சாபாளையத்தில் வசித்து வருகிறார்.

அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு வேலையின்றி இருந்தேன். 1976-ம் ஆண்டு 23 வயதில் சென்னை வானொலியில் அறிவியல் செய்தியாளராக பணிக்கு சேர்ந்தன்.

          

அன்றைக்கு கல்லூரி பேராசிரியரை விட, மத்திய அரசின் நிறுவனமான வானொலியில் ஊதியம் அதிகம் கிடைத்தது. வானொலியில் பாமர மக்களை உள்ளே வர வைத்தோம். கிராமங்களை நோக்கி வானொலி நிகழ்ச்சிகள் செல்லத்தொடங்கியதும், அதன் தாக்கம் அபாரம்.

டெல்லி அகில இந்திய வானொலியின் தலைமை யகத்தில், தலைமை நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன், சென்னை வானொலி நிகழ்ச்சிகளை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவு போட்டது, எனது நிகழ்ச்சி தயாரிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

நிகழ்ச்சி தயாரிப்பு பணியில் 55 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது அறிவியல் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மத்திய அரசு, அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு என்னை அழைத்துக்கொண்டது. 1987-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லி சென்றுவிட்டேன். அங்கு தேசிய அறிவியல் தினம், அறிவியல் விருதுகள் வழங்க வேலை செய்தோம்.

1990-ம் ஆண்டு ராமாயணம், மகாபாரதம் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் வந்த புதிதில், ‘மானுடம் வென்றது’ என்ற நிகழ்வை வாரந்தோறும் நடத்தி, 140 வாரங்கள் என வானொலியில் வெற்றிகரமாக நடத்தினோம். 18 மொழிகளில் 200 வானொலி நிலையங்களில் நாடு முழுவதும் ‘மானுடம் வென்றது’ ஒலிபரப்பானது.

1 லட்சத்து 40 ஆயிரம் பள்ளி குழந்தைகளை அன்றைக்கு பதிவு செய்தோம். குழந்தைகள் எழுதும் கடிதங்களுக்கு, டெல்லியில் இருந்து நாங்கள் பதில் கடிதம் அனுப்புவோம். இன்றைக்கு யு- டியூப் யுகம். ஆனால் அன்றைக்கு ஒரு குழந்தையின் பெயரை சொல்லி டெல்லியில் இருந்து கடிதம் சென்றால், அது குழந்தைக்கு எந்தளவு கிராமத்தில் மரியாதையை பெற்றுத்தரும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

2004-ம் ஆண்டு என்னுடைய கண்டுபிடிப்பான அண்ணா எப்.எம். என்ற சமுதாய வளாக வானொலி பெரும் பெயரை தந்தது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் தற்போது 550 சமுதாய வானொலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 50 உள்ளன. இன்றைக்கு சமுதாய வானொலி தொடங்க ரூ.15 லட்சம் செலவாகும். அதனை முழு மானியத்தில் மத்திய அரசே திரும்ப தந்துவிடும்.

உள்ளூர் செய்திகள் தான் சமுதாய வானொலியின் அடிநாதம். உள்ளூர் மக்களுக்கான ஒரு பெரும் தளம் தான், அதன்பலம். ஏ.ஐ. யுகத்தில் வானொலி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். வானொலி, காட்சி வானொலியாக மாற வேண்டும். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காட்சி வானொலியாக மாறினால் வானொலி எதிர்காலத்திலும் வல்லமை கொண்டதாக இருக்கும். குறைந்த டேட்டா மூலம், பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் மாற வேண்டும். இந்திய நாட்டில் ஒலிபரப்புத் துறைக்கு முதன்முதலாக பத்மஸ்ரீ விருதுக்கு நான் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT