வாழ்வியல்

வேலை வாங்கித் தர மட்டுமல்ல... வேலையை விடவும் ஒரு நிறுவனமா? - ஜப்பானின் வியப்பூட்டும் ‘ராஜினாமா ஏஜென்சி’

பாரதி ஆனந்த்

உலகம் முழுவதுமே படித்தவர்களை அவர்கள் திறமைக்கு ஏற்ப பணியில் அமர்த்தும் ரெக்ரூட்மென்ட் ஏஜென்சிக்கள் இருக்கின்றன. ஏன் ஸ்கில்டு லேபரர்களுக்கான மேன்பவர் கன்ஸல்டன்சிக்களுக்கும் கூட பஞ்சமில்லை. ஆனால், வேலையை விட விரும்புபவர்களுக்காக, ராஜினாமா ஏஜென்சி இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?!

அப்படியான நிறுவனங்கள் ஜப்பான் நாட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அதுபற்றிய சிறிய தொகுப்புதான் இக்கட்டுரை.

ஜப்பானில் இத்தகைய ராஜினாமா ஏஜென்சி-க்களை ‘தைஷோக்கு தைகோ’ (Taishoku Daiko) என்கின்றனர். இந்த நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எளிமையாக விளக்கினால், நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். அங்கே வேலையைத் தொடர உங்களுக்கு விருப்பமில்லை. அதை நேரடியாக உங்களது உயரதிகாரி, மனிதவள மேலாளர் என யாரிடமும் சொல்லவும் விருப்பமில்லை அல்லது சூழலில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த ராஜினாமா ஏஜென்சியை நாடலாம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விவரங்களைச் சொல்லிவிட்டால் போதும். அவர்களே உங்கள் நிறுவனத்தில் உங்களுடைய ரிப்போர்ட்டிங் அத்தாரிட்டி தொடங்கி மனிதவள மேலாளர் வரை அனைவருக்கும் தகவலைச் சொல்லிவிடுவார்கள்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கூற்றுப்படி, ஜப்பானில் மிகவும் பிரபலமான ராஜினாமா நிறுவனங்களில் ஒன்றான Momuri, மாதத்துக்கு சுமார் 2,500 பேரின் ராஜினாமா முடிவுகளை இவ்வாறாக அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களிடம் தெரிவிக்கும் பணியைக் கையாள்கிறது.

Momuri ராஜினாமா ஏஜன்சியை 2022-ல் தொடங்கியபோது சராசரியாக மாதம் 200 பேரின் ராஜினாமாக்களைக் கையாண்டது. ‘Momuri’ என்ற நிறுவனத்தின் பெயரும் சற்றே உள்குத்து நிறைந்ததாகவே இருக்கின்றது எனலாம். ‘Momuri’ என்றால், ‘என்னால் இனி தாங்க முடியாது’ என்று பொருள்.

இது என்ன நவீன மூட்டைப்பூச்சி நசுக்கும் இயந்திரம் போல் இருக்கிறதே! எதற்கு இந்த சுற்றிவளைப்பு ஃபோனில் சொல்லலாம், வாட்ஸ் அப், இ-மெயில் என பல வழிகள் இருக்கின்றனவே எனக் கேட்கலாம்.

ஆனால், ஒரு பணியிடத்தில் ஓர் ஊழியருக்கு, இனியும் இங்கு வேலை செய்வதை என்னால் தாங்க முடியாது என்ற நிலை வந்தால், அப்படிப்பட்ட ஊழியருக்குப் பதிலாக, அவர்களே நேரடியாக நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, ராஜினாமா முடிவைத் தெரிவித்து, அலுவலகப் பொருட்களைத் திரும்ப ஒப்படைப்பது போன்ற நடைமுறை விஷயங்களையும் ஒருங்கிணைத்து விடுகின்றன இந்த நிறுவனங்கள்.

இங்கு இந்தியாவிலோ அல்லது மேற்கத்திய நாடுகளிலோ கூட இதுமாதிரியான ‘ராஜினாமா ஏஜென்சிகள்’ இல்லை. ஜப்பானில் மட்டும் ஏன் இப்படியான ஏஜென்சிக்கள் இருக்கின்றன என்பதை அந்நாட்டுக் கலாச்சாரத்துடன் பொருத்திப் பார்த்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜப்பானிய சமூகம் மனிதர்களிடையேயான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், சமூக ஒற்றுமையில் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கும், ஒவ்வொரு தனி மனிதனும் பணியிடத்தில் ஒரு குழுவில் தான் இருக்க வேண்டும். அப்படியான நிலையில் குழுவின் ஒற்றுமையைப் பேணுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

அந்த வகையில் ஒருவர் வேலையை விடுவது, அதுவும் குறிப்பாக திடீரென விலகுவது சக ஊழியர்களுக்கும், குழுவுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஜப்பானில் பல ஊழியர்களுக்கும் இது உணர்வுப்பூர்வமாக மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

மேலும், பரவலாகவே ஜப்பானிய பணியிடங்களில் ஊழியர்களின் விசுவாசமும், நீண்டகால பிணைப்பும் அதிகமாக மதிக்கப்படுகின்றன. அதனால், ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுவது அந்த நிறுவனத்தைக் கைவிடுவது போல் கருதப்படுகிறதாம்.

ஜப்பானிய நிறுவனங்களில் இருக்கும் ஹைரார்க்கி எனப்படும் படிநிலை சற்று இறுக்கமானதாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

பணிவாக ராஜினாமா உரையாடல் நடத்துவது கூட, மேலதிகாரியை மரியாதைக் குறைவாகக் கருதப்படும் போக்கு நிலவுகிறது.

இந்தச் சூழலில்தான் ராஜினாமா ஏஜென்சிக்கள், நேரடியாக ‘பிரியாவிடை மோதலை’ சந்திக்க வேண்டிய தேவையை நீக்கிவிடுவதாகக் கருதி இவர்களை மக்கள் அணுகுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இன்னொரு கோணமும் இருக்கிறது!

ஒரு நிறுவனத்திலிருந்து விலகும்போது சங்கடமான பிரியாவிடையைத் தவிர்க்க இத்தகைய ராஜினாமா ஏஜென்சிக்கள் உதவுகின்றன என்றால், இன்னொரு புறம் பணியிடத்தில் மிரட்டல், துன்புறுத்தல், அதிகப்படியான வேலை நேரம் அல்லது விலகுவதற்கான முடிவை ஏற்க மறுக்கும் மேலாளர்களை சமாளிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 2024-ல் ‘தி கார்டியன்’ பத்திரிகையில் வெளியான செய்தியொன்றில், ஓர் இளம் ஜப்பானிய ஊழியர் மிரட்டல், கட்டாய கூடுதல் நேர வேலை மற்றும் பணியிட துன்புறுத்தலை அனுபவித்த பிறகு Momuri-ஐ நாடியுள்ளார். நிறுவனங்கள் ராஜினாமா நடைமுறைகளைக் கடினமாக்கினால் வேறு என்ன செய்ய முடியும்!

இதன் நிமித்தமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, ராஜினாமா நிறுவனங்களைப் பயன்படுத்தியவர்களில் 40.7 சதவீதம் பேர், தங்கள் முதலாளிகள் தங்களை ராஜினாமா செய்வதைத் தடுக்க முயன்றதாகவோ அல்லது தடுக்க முயற்சிப்பார்கள் என்றோ கூறியதாகத் தெரிவித்தது.

மேலும் 32.4 சதவீதம் பேர் தங்கள் விலகல் முடிவை அத்தனை சவுகரியமாக தெரிவிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, ராஜினாமா நிறுவனம் என்பது சங்கடமான உரையாடலுக்கு வசதியான மாற்று மட்டுமல்ல. ‘நான் விலகுகிறேன்’ என்று சொல்வது எப்போதும் எளிதல்லாத ஒரு பணியிடத்தை விட்டு வெளியேறுவதற்கான வழியை வழங்குவதாகவும் இருக்கின்றன.

வேலையை விட்டு வெளியேறுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிகோ ஒசாவா, “ஜப்பானில் ஒருவர் வேலையை மாற்றுவது என்பது மிகுந்த தைரியம் தேவைப்படும் ஒரு பெரிய சவால்.

ஜப்பானில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், மாற்று ஆட்களைக் கண்டுபிடித்து பயிற்சி அளிப்பது கடினம், மேலும் ஒருவர் ராஜினாமா செய்யும்போது முதலாளிகள், நிறுவனங்கள் கோபத்தில் வெடித்துவிடுவது நடக்கத்தான் செய்கிறது” என்று கூறுகிறார்.

செலவு நிச்சயம்!

ஆனால், என்னதான் சுமுகமான வெளியேறுதல் கேரன்டி என்றாலும் கூட, இதுபோன்ற ராஜினாமா ஏஜன்சிக்களின் சேவைக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஒருசிலர் மோதலுக்கு இந்த செலவு மேல் என்று கருதலாம். அவர்களுக்கு இத்தகைய நிறுவனங்கள் விமோசனம் தான். ஆனால், வேலையை இழக்கும் முடிவுடன் பர்ஸையும் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் மன அழுத்தத்தை வேறு வழியில் கொண்டு வரும்.

மேலும் இத்தகைய நிறுவனங்களை அணுகுவதில் சில சட்டச் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய ராஜினாமா ஏஜன்சிக்கள் பணி விலகலை மட்டுமே தெரிவிக்கும். அவை நிலுவைச் சம்பளம் மற்ற சலுகைகள் பற்றியெல்லாம் ஏதும் பேசாது. ஜப்பானின் சிவில் சட்டமும் அதற்கு அனுமதிக்காது. மாறாக அந்த சிவில் சட்டத்தின் பிரிவு 627-ன் கீழ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பொதுவாக இரண்டு வார அறிவிப்பு கொடுத்து தங்கள் வேலையை ராஜினாமா செய்து கொள்ள வழிவகை செய்கிறது. இரண்டு வாரங்களுக்குப் பின் ஒரு நிறுவனமோ / முதலாளியோ ராஜினாமாவை ஏற்காமல் இருக்க முடியாது.

இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும் கூட இந்த ராஜினாமா நிறுவனங்களுக்கான தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Albatross, ஒவ்வொரு மாதமும் சுமார் 450 பேர் எந்த மோதலும் இல்லாமல் வேலையை விட உதவுகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

இது ஒருபுறம் இருக்க ஒரு வேலையை விட்டு வெளியேறுவது ஏன் இவ்வளவு கடினமாகி, அதைச் செய்ய ஒரு ஊழியருக்கு தொழில்முறை உதவி தேவைப்படுகிறது என்பது சார்ந்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இளம் தொழிலாளர்கள் ஒரே நிறுவனத்தில் முடங்கிவிடாமல் தங்கள் திறமைகளை பரிசோதிக்கவும், வளர்க்கவும் விரும்புகின்றனர். அதனால் இளம் தொழிலாளர்கள் வேலைகளை மாற்ற அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அவர்களைக் கையாள்வதில் அதேவேகத்தில் நிறுவனங்கள் / முதலாளிகள் நவீன சிந்தனையுடன் தயாராவதில்லை.

அடிப்படையில் ராஜினாமா என்பது இரண்டு பேருக்கு இடையிலான ஒரு உரையாடல். அந்த உரையாடலைத் தவிர்க்க ஜப்பானில் ஒரு முழு தொழில்துறையே இயங்குவது, இளைஞர்களின் மாற்றத்திற்கு சமூகமும் நிறுவனங்களும் எவ்வளவு தயாராக இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT