சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்துவ மாணவியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சின்பனி என்ற மாணவிக்கு, அதிநவீன நரம்பியல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேற்று சென்று மாணவியிடம் நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரைப் பாராட்டினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி சின்பனி (21)-க்கு, கடந்த டிச.15-ம் தேதி கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும், பார்வை திறனும் குறைந்தது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி தனியார் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், உயர் சிகிச்சைக்காக கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் டிச.18-ம் தேதி மாணவி அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் மாணவிக்கு மூளையில் ரத்தநாள சிதைவால், ரத்த கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே, ஆனிக்ஸ் என்னும் நவீன திரவம் மூலம் ரத்தக் கசிவை தடுக்கும் எம்போலை சேஷன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு மாணவிக்கு திடீரென்று வலிப்பு, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்கேன் பரிசோதனையில் மூளையின் பிற பகுதிகளிலும் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு மண்டை ஓடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்த உறைவு அகற்றப்பட்டது.
மாணவி 21 நாள் வெண்டிலேட்டரில் இருந்தார். தற்போது முழு சுயநினைவுடன் மற்றவர்களைப் பார்க்கும் திறனும், அடையாளம் கண்டு அவர்களுடன் பேசும் திறனையும் பெற்றிருக்கிறார்.
மருத்துவத்துறை வரலாற்றில் இந்த சாதனை சாதாரணமல்ல. இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ரூ.15 லட்சத்துக்கும் மேல் செலவாகும்.
அமைச்சர் பாராட்டு: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், இந்த சிகிச்சை்் இலவசமாக செய்து, மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணமான மருத்துவர்களையும், செவிலியர்களையும் பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, மருத்துவமனை நோடல் அதிகாரி ரமேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ்பாபு, ஊடுருவல் கதிரியக்க நிபுணர் பெரியகருப்பன், மயக்க மருந்து நிபுணர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.