தருமபுரி மாவட்டம் அலகட்டு மலைக் கிராமத்தில் ஸ்ரீபசவண்ண சுவாமி கோயிலில் தீபத் திருவிழாவின் போது நடைபெறும் தீப வழிபாடு. (கோப்புப் படம்)

 
வாழ்வியல்

தீபாவளி சுவடே இல்லாத மலைக் கிராமம்: தீபத் திருவிழாவே இவர்களின் தீபாவளி!

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி விழாவை கொண்டாட தயாராகி வரும் வேளையில், ஒரு கிராமம் மட்டும் அதற்கான சுவடுகளின்றி தனது அன்றாடப் பணிகளில் மூழ்கியிருக்கிறது.

பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலகட்டு கிராமம். இதுவரை சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படாத ஒரு மலை முகட்டில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 150 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் விவசாய நிலம் உள்ளது.

ஆனால் பாசன வசதி இல்லை என்பதால் இவர்கள் பணப்பயிர், தோட்டக்கலை பயிர் போன்றவற்றை சாகுபடி செய்வதில்லை. தங்களின் உணவுத் தேவைக்காக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள், அவரை, துவரை, எள், நிலக்கடலை போன்ற பயிர்களை மானாவாரியாக சாகுபடி செய்கின்றனர்.

ஸ்ரீபசவண்ண சுவாமி, மாதேஸ்வரா சுவாமியை குல தெய்வமாக வழிபடும் இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில்லை.

தருமபுரி மாவட்டத் தில் தரைத்தளத்திலும், அருகிலுள்ள மலைக் கிராமங் களிலும் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தீபாவளி வருகை வெளிப்படுத்தும் விதமாக சிறுவர், சிறுமியர் வெடி வெடிப்பில் ஈடுபடுவர். ஆனால், அலகட்டு கிராமம் தீபாவளியின் பெயரில் பட்டாசு சத்தத்தையும், வாசத்தையும் இதுவரை கண்டதில்லை.

மாறாக, கார்த்திகை மாத இறுதி வாரத்தில் வரும் திங்கள் கிழமையை தீபத் திருவிழாவாக இந்த கிராம மக்கள் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஸ்ரீபசவண்ண சுவாமி கோயிலில் இந்த கொண்டாட்டம் தொடங்குகிறது.

இரவு வழிபாட்டின் முடிவில் கேழ்வரகுக் களி, அரிசி சாதம் மற்றும் அவரைப் பருப்பு குழம்புடன் கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறது.

பின்னர், பாரம்பரிய இசைக் கருவிகளின் முழக்கத்துடன், பச்சை மூங்கிலில் ஏற்றப்பட்ட தீப் பந்தத்தை ஏந்தியபடி பெண்கள் மட்டும் கிராமத்தை வலம் வரும் நிகழ்ச்சி, பாரம்பரிய நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

அதிகாலை 3 மணியளவில் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக கோயில் வளாகத்தில் தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்காக கோயிலுக்குள் பச்சை மூங்கிலைப் பிளந்து அமைக்கப்பட்ட மேடையில் 101 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீப வழிபாட்டுடன் தீப விழா நிறைவடைகிறது.

இந்த விழாவில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பெட்ட முகிலாளம், தொட்டமஞ்சி, காமகிரி, கொடகரை உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த உறவினர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

இதுபற்றி அலகட்டு கிராம மக்கள் சிலர் கூறும்போது, ‘இன்றுவரை சாலை வசதியே இல்லாமல் அடிவாரத்தில் இருந்து காட்டெருமை, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் நடமாடும் அடர்வனம் வழியாக நடந்து தான் செல்கிறோம்.

இதனால், பொருளா தாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். வாழ்க்கையை நகர்த்துவதே சவாலாக இருப்பதால் எங்கள் மூதாதையர், மற்றவர்கள் கொண்டாடும் தீபாவளி போன்ற விழாக்களை கொண்டாடாமல் தவிர்த்துள்ளனர். நாங்களும் அதையே பின்பற்றுகிறோம். தீபத் திருவிழா தான் அலகட்டு கிராமத்தின் தீபாவளி திருவிழா’ என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT