வாழ்வியல்

நவீனத் தொழில்நுட்பமும் மாறிவரும் மனித உறவுகளும்!

தொழில்​நுட்​பப் பயன்​பாட்​டில் கட்டுப்​பாட்டை உரு​வாக்​கு​வதில் குடும்​பத்​தின் பங்கு மிக முக்கியமானது

ஜெ.தேவி

இன்​றைய நவீன உல​கில், அனைத்​துத் துறைகளி​லும் தொழில்​நுட்​பம் மனிதகுலத்​துக்​குப் புதிய வாய்ப்​பு​களை​யும் சாத்​தி​யங்​களை​யும் திறந்​து விட்​டுள்​ளது. இத்​தனை வாய்ப்​புகளை உரு​வாக்​கிய மனிதர்​கள், தங்​கள் வீட்​டுக்​குள் வாழும் மனிதர்​களின் மனக்​கதவு​களைத் தட்ட மறந்​து​விட்​டார்​களோ என்ற கேள்வி இன்று ஆழமாக எழுகிறது.

முன்பு குடும்ப உறுப்​பினர்​கள் ஒன்​றாக அமர்ந்து உணவருந்​தும் போது அன்​றைய நிகழ்​வு​களைப் பகிர்ந்​து​கொள்​வார்​கள். மூத்​தோரின் அனுபவங்​கள் இளை​யோ​ருக்கு வழிகாட்​டி​யாக இருந்​தன.

அண்டை வீட்​டாருடன் இயல்​பான தொடர்​பும், நண்​பர்​களு​டன் நேரடிச் சந்​திப்​பும், உறவினர்​களு​டன் கூடி மகிழும் நிகழ்​வு​களும் மனிதர்​களின் மனநலத்​துக்கு ஆதர​வாக இருந்​தன. இன்று ஒரே வீட்​டில் வசிப்​பவர்​கள்​கூட தனித்​தனித் திரைகளில் மூழ்​கி​யிருக்​கும் நிலை உரு​வாகி​யுள்​ளது. மனதளவில் தொலைவு அதி​கரித்து வரு​கிறது.

ஒரு காலத்​தில் கைப்​பேசி என்​பது அவசரத் தேவை​களுக்​குப் பயன்​படுத்​தப்​படும் தகவல் தொடர்​புக் கரு​வியாக மட்​டுமே இருந்​தது. இன்று அது விழிப்​பி​லிருந்து உறக்​கம் வரை ஊடுரு​வி

யுள்​ளது. இத​னால் நேரடி உரையாடல் குறைவதோடு மட்​டுமல்​லாமல், கவனச்​சிதறல், தூக்​கமின்மை, மன அழுத்​தம், தனிமை உணர்வு போன்ற பிரச்​சினைகளும் உரு​வாகின்​றன. குறிப்​பாகக் குழந்​தைகள், இளைஞர்​கள் திரை நேரத்தை அதி​க​மாகச் செல​விடும்​போது, அவர்​களின் உடல் இயக்​கம் குறைகிறது; வாசிப்​புப் பழக்​கம், படைப்​பாற்​றல், பொறுமை, நேரடி தொடர்​புத் திறன் ஆகியவை பாதிக்​கப்​படு​கின்​றன.

சமூக ஊடகங்​களில் பிறரின் வாழ்க்​கையைப் பார்த்து தங்​களு​டைய வாழ்க்​கையுடன் ஒப்​பிடும் பழக்​கம், தாழ்வு மனப்​பான்​மையையும் தேவையற்ற போட்டி உணர்​வையும் ஏற்​படுத்து​கிறது. சமூக ஊடகங்​களில் பகிரப்​படும் போலிச் செய்​தி​கள், தனியுரிமை மீறல்​கள், இணைய மோசடிகள் ஆகியவை சமூக அமைதிக்​கும் தனிநபர் பாது​காப்​புக்​கும் அச்​சுறுத்​தலாக உள்​ளன.

சமூக ஊடகங்​களில் ஆயிரக்​கணக்​கான நண்​பர்​கள் இருப்​பது, வாழ்க்​கை​யில் உண்​மையான ஆதரவு கிடைக்​கிறது என்​ப​தற்​கான அடை​யாளமல்ல. இணை​யத்​தில் கிடைக்​கும் ‘விருப்​பக்​குறிகள்’(likes), பின்​னூட்​டங்​கள் (comments) மனதுக்​குத் தற்​காலிக மகிழ்ச்​சியை அளிக்​கலாம்; ஆனால் துயர நேரத்​தில் அரு​கில் வந்து ஆறுதல் கூறும் மனித உறவுக்கு அவை மாற்​றாகி​விட முடி​யாது.

தொழில்​நுட்​பப் பயன்​பாட்​டில் கட்​டுப்​பாட்டை உரு​வாக்​கு​வதில் குடும்​பத்​தின் பங்கு மிக முக்​கிய​மானது. குழந்​தைகளிடம் கைப்​பேசியின் நன்மை, தீமை குறித்து திறந்த உரையாடல் நடத்த வேண்​டும். குடும்​பத்​தில் தினமும் குறைந்​தது ஒரு நேர​மாவது கைப்​பேசி இல்​லாத நேர​மாகக் கடைப்பி​டிக்​கலாம். வார இறுதி​களில் இயற்​கைச் சுற்​றுலா, விளை​யாட்டு, வாசிப்பு, உறவினர் சந்​திப்பு போன்ற செயல்​பாடுகளில் குடும்​பமாக ஈடு​படலாம். இத்​தகைய பழக்​கங்​கள் உறவு​களை வலுப்​படுத்​து​வதோடு, குழந்தைகளின் மனநலத்​தையும் மேம்​படுத்​தும்.

பள்ளி, கல்​லூரி​களில் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தும் திறனுடன், அதைப் பொறுப்​புடன் பயன்​படுத்​தும் பண்​பும் கற்​பிக்​கப்​பட வேண்​டும். தொழில்​நுட்​பத்தை முழு​மையாகத் தவிர்ப்​பது சாத்​தி​யமற்​றது; அவ​சி​யமுமில்லை. ஆனால், தொழில்​நுட்​பம் நம் வாழ்க்​கையை வழிநடத்​தாமல், நாம் அதை நம் தேவைக்​கேற்ப வழிநடத்த வேண்​டும்.

தொழில்​நுட்​பம் மனிதர்​களின் அறிவை விரிவுபடுத்த வேண்​டும்; இதயத்​தைச் சுருக்​கக் கூடாது. உல​கத்தை இணைக்​கும் கரு​வி​கள், மனிதர்​களைப் பிரிக்​கும் சுவர்​களாக மாறாமல் பார்த்​துக் ​கொள்​வது நம் ஒவ்​வொரு​வரின் பொறுப்பு. நவீன வாழ்க்​கை​யின் வேகத்திற்​குள் மனிதநேயத்​தின் மென்​மையையும் உறவு​களின் வெப்​பத்​தையும் காப்​பாற்​றினால்​தான் தொழில்​நுட்ப முன்​னேற்​றம் உண்​மையான முன்னேற்றமாக அமையும்!

கட்டுரையாளர்: பேராசி​ரியர், தமிழ்ப் பல்​கலைக்​கழகம், தஞ்​சாவூர்.

தொடர்​புக்கு: devirajkumar75@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT