வாழ்வியல்

வெளிநாட்டு கிரே பேரட் மாயம் - நாமக்கல்லில் போஸ்டர் அடித்து தேடும் எல்ஐசி ஊழியர்!

போனதே... போனதே... என் பைங்கிளி வானிலே...

கி.பார்த்திபன்

நாமக்கல்: பாசத்தோடு வளர்த்த கிளி பறந்து சென்றதால் மனமுடைந்த எல்ஐசி ஊழியர் ஒருவர், கிளியின் படத்துடன் 'காணவில்லை' என போஸ்டர் அடித்து நாமக்கல் மாநகரம் முழுவதும் ஒட்டியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லப் பிராணிகள் வளர்ப்பில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் கொண்டிருப்பது வழக்கம். அவர்களில் செல்லப் பிராணிகளை தங்கள் வீ்ட்டின் குடும்ப உறுப்பினராக பாவித்து பராமரிப்பு செய்வர். ஒருவேளை செல்லப் பிராணி மாயமானலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர் பெரும் துன்பத்திற்கு ஆளாவர்.

மனிதர்களுக்கு செய்யும் சடங்குகள் அனைத்தையும் செய்து அன்பை வெளிப்படுத்துவர். அந்த வகையில் நாமக்கல் இந்திரா நகரைச் சேர்ந்த எல்ஐசி ஊழியர் சட்டநாதன் என்பவர் தான் நேசித்து வளர்த்த கிளி தன்னை விட்டு பறந்து சென்றதை நினைத்து மனம் வாடி வருகிறார். மேலும், கிளியை காணவில்லை என போஸ்டர் அடித்து நாமக்கல் மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள சட்டநாதன் தனது கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கிளியின் உரிமையாளர் சட்டநாதன் கூறுகையில், “சிறு வயது முதலே கிளி வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் கடந்த 2011-ம் ஆண்டில் கால் உடைந்த நிலையில் இருந்த கிளியை மீனாட்சி என பெயர் வைத்து வளர்த்து வந்தேன். அந்த கிளி கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டது. அந்த கிளியின் புகைப்படத்தை வீட்டில் வைத்து இன்றளவும் நினைவுகூர்ந்து வருகிறேன்.

இந்திய கிளிகளை வீட்டில் வைத்து வளர்க்க அனுமதியில்லை என்பதால் கடந்த மே மாதம் சவுத் ஆப்பிரிக்கன், காங்கோ வகையைச் சேர்ந்த கிரே பேரட் என்ற வெளிநாட்டு கிளியை சென்னை கொளத்தூரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.60 ஆயிரத்திற்கு விலை கொடுத்து வாங்கி வந்து வீட்டில் வைத்து பராமரிப்பு செய்து வந்தேன்.

அந்த கிளி வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பாக பேசுவதுடன் நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். இச்சூழலில் கடந்த 17-ம் தேதி வீட்டில் இருந்த கிளி திடீரென மாயமானது.

கிளி என நினைக்காமல் தங்களது செல்ல பிள்ளை போல நினைத்து வீட்டில் வைத்து வளர்த்தோம். வேலைக்கு செல்லும் போதும்,வரும் போது கிளி அன்பாக பேசும். இசைக்கு ஏற்ப நடனமாடும், சாதாரணமான உணவினை சாப்பிடாது என்பதால் ஆன்லைன் மூலம் சன் பிளவர் விதை கிலோ கணக்கில் வாங்கி வைத்துள்ளோம்.

அன்பாக, பாசமாக வளர்த்த கிளி காணாமல் போய் ஒரு வாரமாகியும் கிடைக்காதது மிகுந்த மனஉளைச்சலாக சோகமாக உள்ளது. நாங்களும் பல்வேறு இடங்களில் தேடியும் வருகின்றோம். பசி பட்டினியோடு கிளி இருக்கும் என்பதை நினைத்தால் உறக்கம் கூட வருவதில்லை.

அந்த கிளி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தான் பறந்து செல்லும் என்பதால் மீண்டும் வீட்டிற்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் வீட்டின் மாடியில் கிளி கூண்டு வைத்துள்ளோம். கிளியை யாராவது கண்டுபிடித்து தந்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்க உள்ளோம்” என்றார்.

‘போகுதே போகுதே... என் பைங்கிளி வானிலே...’ என கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் தன்னை விட்டு பிரிந்து செல்லும் காதலியை நினைத்து காதலன் மன உருகப்பாடுவது போன்ற காட்சி இடம் பெறும். அதுபோல் பறந்து போன நிஜக் கிளியை நினைத்து சட்டநாதன் அவரது குடும்பத்தினரும் மனம் வாடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT